Header Ads



“புதிய அரசியலமைப்பு சகல சமூகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும்” - பாராளுமன்ற கன்னி அமர்வில் ரிஷாட்


09 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, இன்று காலை (20) இடம்பெற்றபோது உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் கூறியதாவது,

“அமைச்சரவையின் கன்னி அமர்வில், தற்போதைய அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவெடுத்து, அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்துக்கு வருகின்ற அரசாங்கங்கள், அரசியலமைப்பில் மாற்றங்களை செய்துள்ளன. அதேபோன்று, இனிவரும் காலங்களிலும் பதவிக்கு வரும் அரசாங்கங்களும் இன்னொரு மாற்றத்தை மேற்கொள்ளாத வகையில், இந்த அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

உத்தேச அரசியலமைப்பு வெறுமனே, ஒரு சாராரையோ, ஒரு கட்சியையோ, ஒருசில இனவாதிகளையோ திருப்திப்படுத்துவதற்கு என்றில்லாமல், நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களையும் குறிப்பாக, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமின்றி, எல்லோருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும். அத்துடன், அவர்களது உரிமைகளை மதிக்கக் கூடிய வகையிலும் அது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, இந்நாட்டில் ஒரு நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்.

சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட போது, பொருளாதாரத்தில் பலமடைந்திருந்த நமது நாடு பின்னர், காலப்போக்கில் இங்கு வாழ்ந்த ஓர் இனம் “தமக்கு தனி நாடு வேண்டும்” என்று போராடிய வரலாறு இருந்தது. அதன்மூலம், நாட்டின் பொருளாதாரம் அழிந்ததுடன் இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.

அரசியலுக்காக, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை உசுப்பேற்றும் அரசியல் கலாசாரத்தைக் கொண்ட கட்சிகளாக நாம் இருக்கின்றோம். எனவே, அரசியலமைப்பு மாற்றம் நிரந்தரமான ஒன்றாக இருக்க வேண்டும்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில், புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு,  எமது கட்சியின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.


பாராளுமன்ற வரலாற்றில் தங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு. நீங்கள் பல உயர் பதவிகளை வகித்துள்ளீர்கள். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீங்கள், பல சர்வதேச கருத்தரங்குகளில் பங்குபற்றிய அனுபவம் கொண்டிருக்கின்றீர்கள். முதலமைச்சராகவும், அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி, அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கின்றீர்கள்

எனவே, நீங்கள் பதவி வகிக்கும் உங்கள் காலத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, ஒரு காவலனாகவும், உறுப்பினர்களது வரப்பிரசாதங்களை பாதுகாக்கின்ற ஒருவராகவும் செயற்படுவீர்கள் என்ற பூரண நம்பிக்கை எமக்குண்டு” என்று கூறினார்.  

3 comments:

  1. தனி நாடு வேண்டும் என ஒரு இனத்தவரால் நடந்த போரால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்ற கருத்து உண்மைதான். அதே சமயத்தில் சஹ்ரானால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு பற்றியும் அதனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அவப்பெயர் பற்றியும் முஸ்லிம்களின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதையும் பற்றி பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. சபாநாயகர் என்பவர் சபை நடவடிக்கைகளுக்கு மட்டும் தலைமைதாங்கி நடாத்துபவர் அல்லர். அத்தோடு சகல உறுப்பினர்களதும் பாதுகாவனாகவும் மற்றும் அவ்வுறுப்பினர்களின் எஜமான்களாகிய பொது மக்களின் பாதுகாவலனுமாவார். அத்தகைய பொதுமக்களுக்கு எப்படியான பிரச்சினைகள் ஏற்படும்போதும் அவரகளது சுதந்திரத்திற்காகவும் தலை கொடுகக வேண்டியவர சபாநாயகரே.

    ReplyDelete

Powered by Blogger.