யார் இந்த பொடி லெசி...? பல தகவல்கள் அம்பலம் - டுபாயில் வசிக்கும் சகோதரருக்கு தொடர்பு
தெற்கு பாதாள உலகக் குழுவின் தலைவரான பொடி லெசிக்கு சொந்தமான ரத்கம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் துப்பாக்கி தொடர்பில் மேலும் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
ரத்கம பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளூடாக இந்த தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ரத்கம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 04 துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தரால் கோணபினுவல பகுதியில் வசிக்கும் இருவருக்கு ஹெரோயின் மற்றும் துப்பாக்கி என்பன விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த 2 சந்தேக நபர்களும் தங்களுக்கு கிடைத்த ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரத்கம – தெல்வத்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துபாயில் வசிக்கும் பொடி லெசியின் சகோதரர் ஒருவரால், இந்த கடத்தல் நடவடிக்கைகள் வழிநடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான கெசல்வத்த தினுக்கவின் உதவியாளர் ஒருவர் போதைப்பொருளுடன் உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு- 15, மட்டக்குளி பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா, 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 40 கிராம் ஹெரோயின் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, வெயாங்கொட பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மஹர சிறைச்சாலையின் காவலர் ஒருவரும் விமானப் படையின் சிவில் படையணியின் உறுப்பினர் ஒருவரும் அடங்கலாக நால்வர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 15 கிராம் ஹெரோயின், இலத்திரணியல் தராசு, 15 வங்கி கணக்கு புத்தகங்கள், 13 வங்கி கடன் அட்டைகள், 02 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 56,000 ரூபா பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
27 மற்றும் 37 வயதான சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரகரா என்றழைக்கப்படும் சமிந்த குமார என்பவரால் சந்தேக நபர்கள் வழிநடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment