Header Ads



தனது விருப்பு வாக்குகளை மீள எண்ண, சுமந்திரன் இணக்கம் தெரிவிப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எனது வெற்றியில் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. எனக்கு கிடைக்கப்பெற்ற விருப்பு வாக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு என்னுடைய வெற்றியில் எவ்வித சந்தேகமும் கிடையாது, அரசாங்க ஊழியர்களின் நேர்மையிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஆகவே பொறுப்பில்லாமல், இப்படி பேசிக் கொண்டிருக்காமல் தயவு செய்து வழக்குத் தாக்கல் செய்யுங்கள். எனக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை மீள எண்ணுவதற்கு இணங்குகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இன்றையதினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எனது வெற்றியில் மோசடி இடம்பெற்றுள்ளது என்று பொதுவெளியில் கூறுபவர்கள் துணிச்சல் இருந்தால் இவர் கள்ளவாக்கினால் வென்றார் என வெளிப்படையாக கூறுங்கள். உங்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்கின்றேன்.

ஆகவே மக்களை குழப்பும் நடவடிக்கையை முன்னெடுப்பது நியாயமாக, நேர்மையாக எடுத்த ஜனநாயக வெற்றியை கொச்சைப்படுத்தும் ஒரு செயல். அதனை பல கட்சிகள் சேர்ந்து செய்கின்றார்கள்.

எங்களது கட்சிக்குள்ளேயே பலர் அதனை ஊக்குவிக்கின்றார்கள். அதுதான் விசித்திரமான செயல். என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று வெளியே இருந்து செய்யப்பட்ட சூழ்ச்சிகளை விட கட்சிக்குள்ளேயிருந்து செய்யப்பட்ட சதிகள் தான் ஏராளம். அவை அனைத்துமே மக்களுக்கு தெரிந்த விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. தேர்தல் வாக்கெண்ணும் முறை பற்றி கொஞ்சம் அறிவுள்ளோரும் அந்த இடத்தில் எதுவும் செய்ய முடியாது என அறிவர்.சிறுகுழந்தைத் தனம் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால் தோல்வியை மற்றவர்கள் மேல்தான் போடப்பார்ப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.