Header Ads



வட்ஸ்அப் மூலம் தனது குழுவை, வழிநடத்திய அங்கொட லொக்கா

அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பண்டார என்ற பாதாள உலகக்குழு தலைவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கொழும்பில் இருந்து கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை சென்றுள்ளார்.

கோயம்புத்தூரில் கடந்த ஜூலை 3ஆம் திகதி அவர் உயிரிழக்கும் வரை இந்தியாவின் தமிழகத்தில் இருந்தவாறு வட்ஸ் அப் தொழிநுட்பம் மூலம் இலங்கையில் உள்ள தனது குழுவை வழிநடத்தி வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக அங்கொட லொக்கா கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் பிணையில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.

கொழும்பு உட்பட இலங்கையில் பல இடங்களில் நடந்த தொடர் கொலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள அவர், போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

அங்கொட லொக்காவை கைது செய்ய இலங்கை பொலிஸார் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிகப்பு அறிக்கை பிடியாணையை பிறப்பித்திருந்தனர்.

எனினும் இலங்கை பொலிஸாரினால் அவர் எங்கு இருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனதாக இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்திய ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி அங்கொட லொக்காவின் குழுவினர் கொண்ட தாரக என்பவரை சுட்டுக்கொன்றனர்.

இந்த கொலையில் அங்கொட லொக்காவே பிரதான சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர். வட்ஸ் அப் அழைப்பு மூலம் இந்த கொலைக்கான தகவல்களை அங்கொட லொக்கா வழங்கியுள்ளார்.

அதேவேளை அங்கொட லொக்காவின் மரணத்துடன் எவருக்காகவது தொடர்பு இருக்கின்றதா என்பதை அறிய இந்திய புலனாய்வு துறையினர், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ஊடாக விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பிறந்த அங்கொட லொக்கா, வைத்தியசாலை வீதி முல்லேரியாவ அங்கொடை என்ற முகவரியில் வசித்து வந்துள்ளார்.

களனி பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி தமக்கு எதிரான குழுவின் உறுப்பினரை சுட்டுக்கொன்றார். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுதலையானார்.

2011ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நடந்த கொலை, 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி நவகமுவ பிரதேசத்தில் நடந்த கொலை ஆகியவற்றுடன் அங்கொட லொக்கா சம்பந்தப்பட்டுள்ளார்.

அங்கொட லொக்கா மற்றும் அவரது குழுவினர் சமயன் என்ற அருணா உதயநத பத்திரன என்ற நபரை கொலை செய்தனர்.

கொட்டாவ பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி அங்கொட லொக்காவின் குழுவினர் மஞ்சுளா சந்துனி அபேரத்ன என்ற பெண்ணை சுட்டுக்கொன்றனர்.

No comments

Powered by Blogger.