Header Ads



பயங்கரவாதி சஹ்ரான் கைது, செய்யப்படாமைக்கான காரணம் என்ன...?


பொலிஸாரின் ஒவ்வொரு பிரிவிற்கு இடையில் இருந்த போட்டி தன்மையின் காரணமாக சரியான தொடர்பு இன்மையினால் சஹ்ரான் ஹசீமை கைது செய்ய முடியாமல் போனதாக தீவிரவாத விசாரணைப் பிரிவின் அடிப்படைவாத மற்றும் தீவிரவாத விசாரணை பிரிவின் பதில் நிலையப் பொறுப்பதிகாரி கயான் ரத்னாயக்க உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகளின்போது பல இடையுறுகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் தொடர்பில் விசாரணையை நடத்தியபோது 2019 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று தாமும் அதிகாரிகளும் சஹ்ரானின் மனைவியுடைய நாரம்மல உள்ள வீட்டுக்கு சென்றோம். 

சஹ்ரானின் மாமி மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோரிடம் இதன்போது விசாரணை நடத்தப்பட்டது. 

இந்தநிலையில் தங்களுடைய வீட்டுக்கு சஹ்ரான் கடந்த இரண்டு வருடங்களாக வரவில்லை என்று சஹ்ரானின் மாமி தெரிவித்தார். 

எனினும் அவருடைய சகோதரர் சஹ்ரான் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தமது வீட்டுக்கு வந்ததாக தெரிவித்தார். 

தாம் சஹ்ரானின் மாமியுடைய சகோதரனை விசாரணை செய்துக்கொண்டிருந்தபோது அவரின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. 

அதில் குற்றப்புலனாய்வுத்துறையினர் டயஸ் என்ற அதிகாரி பேசினார். சஹ்ரானின் மாமியின் சகோதரனை தாம் தனிப்பட்ட தகவல் தருபவராக பயன்படுத்துவதாக இதன்போது கூறிய குற்றப்புலனாய்வுத்துறையின் அதிகாரியான டயஸ், இந்த விசாரணையை பயங்கரவாத தடுப்பு பிரிவு தொடர்ந்து நடத்தினால் அது குற்றப்புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். 

எனவே சஹ்ரானின் மனைவியினது வீட்டில் இருந்து பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் விலகிச்செல்லுமாறும் குற்றப்புலனாய்வுத்துறையின் டயஸ் என்ற அதிகாரி கூறினார். 

எனினும் சஹ்ரான் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரின் தொகுப்பு விசாரணை அறிக்கையில் சஹ்ரானின் மாமியின் சகோதரர் தனிப்பட்ட தகவல் தருபவர் என்ற விடயம் தெரிவிக்கப்படவில்லை. 

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்படும் வரை சஹ்ரானின் மாமியுடைய சகோதரரிடம் விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை என்றும் சாட்சியம் வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.