Header Ads



ஐதேக தலைவராகுவாரா ருவன்...?


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடம் கையளிப்பது குறித்து ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை கட்சியின் சிலருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.


எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இது தொடர்பாக மேலும் கலந்துரையாட உள்ள ரணில், தனது இறுதி முடிவை புதன் கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.


இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பான இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. தமக்கு இந்த பதவியை வழங்குமாறு முன்னாள் அமைச்சர்கள் இருவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.


இதனை அடிப்படையாக கொண்டு கட்சிக்குள் மீண்டும் பிளவுகள் ஏற்படுவதை தடுக்க கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்பார்க்காமல் இருக்கும் ருவான் விஜேவர்தனவுக்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சியின் தேசிய பட்டியலில் இடம்பெற்ற ஒருவருக்கே வழங்கக் கூடும் எனவும் பேசப்படுகிறது.


ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.