Header Ads



நீர்கொழும்பு சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகர் அனுருத்தவின், கைது நாடகத்தை அம்பலப்படுத்திய சட்டமா அதிபர்


நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிஸார் நடத்திய நாடகமென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய பணிப்புரையின் போது சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

சம்பாயோவின் கைது தொடர்பில் வெளியான சிசிரிவி காட்சிகள் ஊடாக பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த சிசிரிவி காணொளிகளை ஆராய்ந்த போது இதுவொரு கைது அல்லவென்றும் பிடியாணை வழங்கப்பட்ட ஒரு நட்பு ரீதியான வரவேற்பு என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீர்கொழும்புச் சிறைச்சாலைக் கைதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்கள் நீதிமன்றத்துக்கு தலைமறைவாகியிருந்தார்.

பின்னர் அவர் குருநாகலில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அதுவொரு கைது அல்லவென்றும் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சம்பாயோ கைது செய்யப்பட்ட இடத்தில் இருந்த சிசிரிவி கமரா காட்சிகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

அங்கு சம்பாயோவை கைது செய்வதாக கூறி குருநாகல் சென்ற நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பயணித்த ஜீப் வண்டிக்கு சமீபமாக அநுருத்த சம்பாயோவின் சகோதரர் சென்ற வெள்ளை நிற வான் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தமை சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அந்த வானுக்கு சமீபமாக சம்பாயோவின் சகோதரர் வேறு சிலருடன் வருகை தரும் வரை அவதானித்துக் கொண்டிருந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன.

சற்று நேரத்துக்கு பின்னர் சிவப்பு நிற டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் ரக ஜீப் வண்டியொன்றில் அவ்விடத்துக்கு சம்பாயோ வருகை தந்ததுடன், பொலிஸ் இன்ஸ்பெக்டர் அவரை மிக நட்புறவு ரீதியாக வரவேற்றுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர் தொலைபேசி அழைப்பொன்றையடுத்து சம்பாயோ அதனை பொலிஸ் உத்தியோகத்தரிடம் வழங்குவதையும் பின் அவர் அதற்கு பதில் அளித்ததுடன், பொலிஸ் இன்ஸ்பெக்டர் சம்பாயோவின் தோள்களில் கையை வைத்து நட்புறவுடன் இருந்த காட்சிகளும் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.

அவ்விடத்துக்கு மற்றொரு நபர் வருகை தரும் வரை எதிர்பார்த்திருந்த அவர்கள் இருந்த இடத்துக்கு ஊடகவியலாளர் ஒருவர் என கூறப்படும் நபர் ஒருவர் வருகை தந்ததுடன், அவருடைய செல்லிட தொலைபேசியில் சம்பாயோவின் கருத்து பதிவு செய்யப்படும் விதமும் சிசிரிவி காட்சிகளில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பொலிஸ் ஊடக பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சம்பாயோவின் கைது புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகையாகும் என குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

Powered by Blogger.