Header Ads



சிறுபான்மையின அரசியல்வாதிகள் பலருக்கு, தேர்தலில் மக்கள் புகட்டிய பாடம்


பாராளுமன்றத் தேர்தல் முடிவானது நாட்டின் அரசியல் வரலாற்றில் புதுமையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுத் திருப்பத்தை அது ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.

விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முதற் தடவையாகப் பெற்றுள்ளதுடன் பழம் பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிக மோசமான தோல்வி கண்டுள்ளது. அதேசமயம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்திய தமிழ், முஸ்லிம் அரசியற் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. எதிர்பார்த்த வேட்பாளர்கள் பலர் வெற்றி பெறவில்லை. எதிர்பார்த்திருக்காத வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இவையெல்லாம் வரலாற்றில் திருப்பங்களாகும்.

பொதுஜன பெரமுன 145 ஆசனங்களுடன் அமோக வெற்றியீட்டியுள்ளது, ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது, தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. என்பன தலா இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, எமது மக்கள் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டுள்ளன.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களை அதிகம்  பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்  கொள்ளாவிட்டால் அடுத்த தேர்தலில் அவை மேலும் சரிவை அல்லது பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பது அபாயச் சமிக்ஞையாகும்.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மக்களை மறந்து மனம் போன போக்கில் செயற்பட்டதன் பெறுபேறாகவே இன்றைய தேர்தல் முடிவைக்  கொள்ள வேண்டியுள்ளது.

உரிமை அரசியலும், அபிவிருத்தி அரசியலும் சமாந்தரமாக முன்கொண்டு செல்லப்பட வேண்டும். பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்  உறுதிப்படுத்தப்பட்டால், அப்பிரதிநிதித்துவத்தின் ஊடாக மக்களுக்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் திட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான நடைமுறையை எம்.பிக்கள் பின்பற்றவில்லை என்பதே யதார்த்தம். பாராளுமன்றப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அடுத்த கணமே தாம் தெரிவு செய்யப்பட்ட நோக்கத்தையும், தங்களுக்கு முன்னாலுள்ள மக்கள் பணிகளையும் பலர் மறந்து விடுகின்றனர். மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், தான் சார்ந்த சமூகத்திற்கும், தனது ஊருக்கும் மாத்திரம் என்று பணிகளை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். பிரதேச ரீதியாகவும், இனமத, மொழி ரீதியாகவும் மக்களை பிரித்தாளுகின்றனர்.

அதுமாத்திரமன்றி, அடிப்படையிலயே பொதுப் பணிகளில் அல்லது மக்கள் சேவையில் அதிகம் நாட்டமில்லாத இணைப்பாளர்களையும், பணியாளர்களையும் நியமித்து மக்களிடமிருந்து தூரமாகிக் கொள்கின்றனர். குறைந்தது தனக்கு வாக்களித்த வாக்காளர்கள் தமது பிரதிநிதியைச் சந்திக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகின்றது. குறைந்தது தொலைபேசியிலேனும் தொடர்பு கொண்டு பேச முடியாத ஒரு அவல நிலை தொடர்கின்றது.

தேர்தலில் வெற்றி பெற்றதோடு மக்களை மறந்து விடும் பாராளுமன்றப் பிரதிநிதிகளில் அதிகமானவர்கள், அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தல் பிரசாரத்திற்கே தமது பிரதேசத்திற்குத் செல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு மக்கள் தேர்தல் மூலம் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்பதே உண்மை.

கடந்த காலங்களில் மக்களைப் புறக்கணித்து தான் விரும்பியவாறு, மனம் போன போக்கில் பயணித்து, அரசியலை வியாபாரமாக்கியவர்கள் இம்முறை தேர்தலில் கடும் விமர்சனத்திற்குள்ளாகினர். வாக்காளர்கள் அவர்களது கடந்த காலப் பணிகள், சேவைகளை ஒப்பீட்டளவில் நோக்கிப் பார்க்கும் நிலையேற்பட்டது. இவ்வாறானவர்கள் மக்களை எதிர்கொள்வதிலும், தெரிவு வாக்குப் பெறுவதிலும் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டனர்.இறுதியில் தோல்வியையே தழுவிக் கொண்டனர். நடந்து முடிந்த தேர்தல் மூலம் மக்கள் முன்னையவர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு அரசியலில் தொடர்ந்து பயணிப்பதற்கும், புதியவர்கள் இவ்வாறான தவறுகளைத் தொடராது சிந்தித்துச் செயலாற்றுவதற்கும் சந்தர்ப்பமளித்துள்ளனர்.

இதனைப் புரிந்த கொள்ளாது, கடந்த காலங்களைப் போன்றே தான் சார்ந்த சமூகத்தையும், மக்களையும், பிரதேசத்தையும் ஏமாற்றும் சமூக சிந்தனையற்ற அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்டால் அதற்கான பலனை நிச்சயம் அடுத்த தேர்தலில் கண்டுகொள்வர்என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

ஐ.எல்.எம்.றிஸான் 

No comments

Powered by Blogger.