Header Ads



அரிசி பேக்குகளையும், பணத்தையும் தூக்கித் திரிந்த வரலாற்றை நாங்கள் மறந்து விட முடியாது

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இந்த அரசியல் சந்தையில் சிலர் அரிசி பேக்குகளையும், பணத்தையும் தூக்கித் திரிந்த வரலாற்றை நாங்கள் மறந்து விட முடியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (21) ஓட்டமாவடியில் இடம்பெற்றது கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில் பேசுகையில்,

மட்டக்களப்பு மாவட்டம், கல்குடாவுக்கு யார் வந்தும் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கு தடையில்லை அது யாராக இருந்தாலும் பரவாயில்லை தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகள் யாரும் வந்து ஜனநாயக அரசியலை முன்னெடுக்க முடியும்.

ஆனால், இந்த ஜனநாயக உரிமையை பணம் கொடுத்து அரிசி பேக் கொடுத்து வாங்குவதற்கு இருபோதும் இடமளிக்க முடியாது. இருந்தும் அவ்  விடயத்திலிருந்து யாரை எப்படி பாதுகாப்பத்துக் கொள்வதென்ற சாணக்கியம் எங்களுக்கு தெரியாமல் இருக்கிறது ஏனென்றால் அவர்கள் சூட்சுமமாக அந்தப் பணியைச் செய்கிறார்கள்.

இரவுப் பொழுதுகளிலும், நடுநிசியிலும் எதிர்பார்க்காதவர்கள், நினைத்துப் பார்க்காதவர்கள் எல்லாம் அந்த மூட்டை மூடைகளை சுமந்து கல்குடாவை அரசியல் சந்தையாக மாற்றுகிறார்கள்.

இந்த விடயத்தில் எதிர்காலத்தில் கல்குடா சமூகம் மிகத் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும். கல்குடாவில் ஒரு பிரதிநிதித்துவம் வரக்கூடாது என்று சில அரசியல் முகவர்களுக்குத் தேவையாகவுள்ளது. ஏனென்றால் இந்தப் பிரதேசத்தில் ஒரு பிரதிநிதித்துவம் வருமாக இருந்தால் தங்களுடைய முகவர் வேலைகளை செய்ய முடியாது என்று அவர்கள் பார்க்கிறார்கள்.

ஒரு அரசியல் தலைமை இல்லாமல் இருந்தால்தான் தாங்கள் அதில் புகுந்து விளையாட முடியும், வெளியூர் அரசியல் வாதிகளை வைத்து இங்கு தொழில் செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள்.

நாங்கள் தேர்தல் காலங்களில் சொன்னோம் ராஜபக்ச அணியினர் 151 ஆசனங்களை எடுத்தால் என்ன நடக்கும் என்று கூறினோம் இது ஒரு சுகமான பாராளுமன்றம் இல்லை இது ஒரு சுமையான பாராளுமன்றம் என்பதை நாம் எடுத்துச் சொன்னோம். இப்போது அது சுகமா? சுமையா? என்று அங்கு போயுள்ளவர்களுக்கும் தெரியும், அனுப்பியவர்களுக்கும் தெரியும் என்று துல்லியமாக சொல்ல முடியும்.

எனவே, வரவுள்ள அரசியல் நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு அதிர்வு தரப்போகின்ற அரசியலாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும். 151 ஐ தாண்டியது என்பது சிறுபான்மை சமூகத்துடைய கழுத்துகளுக்கு நீட்டப்பட்டுள்ள அரிவாள் என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடக் கூடாது .

மத ரீதியான சிந்தனைகளை மேலோக்கி உலக அரசியலில் இப்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் முஸ்லிம்களை மையப் பொருளாக்கி முஸ்லிம்களை ஒரு கேவலம் கெட்ட சமூகமாக்கி, அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சொல்லித்தான் முழு உலகத்திலும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

அதே மாற்றம்தான் இலங்கையிலும் நடந்தேறியது அதன் மூலம் கிடைத்த பிரதிபலன்தான் 151ஆசனங்களை பெற்றுள்ளனர். எனவே இந்த நிகழ்ச்சி நிரல் கோட்டாபாய ராஜபக்ஸ மாத்திரம் என்றும் அவருடைய அரசாங்கம் மாத்திரம் என்றும் நீங்கள் நினைத்து விடாதீர்கள் சஜித் பிரேமதாசாவுடைய காலத்திலும் இதை பேச வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை சஜித் அணிக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை இவ்விடத்தில் நான் சொல்ல வேண்டும். அவர்களும் இனவாதத்தைப் பேசினால்தான் வரவுள்ள காலங்களில் எதையாவது சாதிக்க முடியும் என்று அவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

அதே அடிப்படையில்தான் சஜித் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் கூறுகின்றார் எதிர்காலத்தில் நாங்கள் பௌத்த வாக்குகளை பெற வேண்டுமாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு கொஞ்சம் விட்டுக்கொடுப்பு செய்து தர வேண்டும் என்கின்ற அமைப்பில் அவர் பேசியது எங்களது உள்ளத்தை நெகில்ந்தது என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்தது கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியை கட்டியணைத்து கண்ணீர் விட்டு தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.