Header Ads



பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை இதோ - தரம் 5,10,11,12,13 க்கு 5 நாட்களும் பாடசாலை

தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலையிலுள்ள ஒவ்வொரு தரத்திலும் கல்வி பயிலும் மாணவர்கள் எந்தெந்த தினங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில், 5,10,11,12,13 தரங்களில் உள்ள மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளையும், சுகாதார அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளுக்கு ஏற்ப பல படிகளில் மீண்டும் திறக்க கல்வி அமைச்சு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை, ஜூலை 27 முதல் 11,12, 13 ஆகிய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) வரை பாடசாலை இடம்பெறவுள்ளது.

தேர்தல் வாரம் பாடசாலைக்கு பூட்டு
2020 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, பல பாடசாலைகள் வாக்குச் சாவடிகளாகவும், வாக்கெண்ணும் மையங்களாகவும் பயன்படுத்தப்படுவதாலும், பல ஆசிரியர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபட்டவுள்ளதாலும் தேர்தல் இடம்பெறும் வாரத்தில் (ஓகஸ்ட் 03 - விடுமுறை தினம்) ஓகஸ்ட் 04 செவ்வாய்க்கிழமை முதல் ஓகஸ்ட் 07 வரை பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஓகஸ்ட் 10 ஆம் திகதி தரம் 01 முதல் 13 வரையிலான அனைத்து தரங்களுக்கும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்போது பாடசாலைகளிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் முடிவு செய்யுமாறு பாடசாலைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலைகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒரு மீற்றர் இடைவெளியுடன் வகுப்புகளை பேண முடியுமாயின், ஓகஸ்ட் 10 முதல் அனைத்து தரங்களிலுமுள்ள மாணவர்களுக்கும் வழக்கம்போல பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

200 இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட தரம் 1 - 5 வரையான ஆரம்ப பாடசாலைகளையும், இடைநிலை பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளையும் கொண்ட பாடசாலைகளில் பின்வருமாறு பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இலும் அதிகமாக உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு

ஓகஸ்ட் 10 முதல் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை வெளியீடு-Schools Start From August 10-Daily Attendees for Every Grades Follows

மாணவர்களின் எண்ணிக்கை 200 இலும் அதிகமான இடைநிலை பாடசாலைகள்

ஓகஸ்ட் 10 முதல் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்கும் முறை வெளியீடு-Schools Start From August 10-Daily Attendees for Every Grades Follows

மேலும், ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல், பாடசாலைகளில் உள்ள அனைத்து கல்விசார் ஊழியர்களும் கடமைக்காக சமூகமளிக்க வேண்டும் என்பதோடு, கற்பித்தல் செயல்முறை தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, மேற்பார்வை நடவடிக்கை, பணி ஆய்வு, சுகாதாரம் மற்றும் ஒழுங்கு விடயங்களுக்கான பொறுப்புகளும் வழங்கப்படும். பிற்பகல் 3.30 மணி வரை நேரசூசியிடப்பட்டுள்ள ஆசிரியர்களைத் தவிர ஏனைய அனைத்து ஆசிரியர்களிளதும் பணி நேரம் முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையாகும்.

தற்போதுள்ள நிலைமை மேலும் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரை பாடசாலை உணவகங்களை திறக்க வேண்டாம் என, பாடசாலை அதிபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான பாடசாலைச் சூழலைப் பேணுவதற்கு முழு பாடசாலை சமூகமும் கவனத்திலெடுக்குமாறு, கல்வி அமைச்சு பாடசாலை பிரதானிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.