Header Ads



196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - ஒரு கோடி 62 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி


இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் இம்முறை வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 3652 அரசியல் கட்சிகளும் 3800 சுயாதீன குழுக்களும் போட்டியிடவுள்ளன. 

நேரம் நீடிப்பு

தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணித்தியாலயத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும். கடந்த அனைத்து தேர்தல்களிலும் காலை 7 மணி முதல் மாலை 4 வரை மாத்திரமே வாக்களிப்பதற்கான நேரம் வழங்கப்பட்டது. எனினும் தற்போது முன்னரைப் போன்றல்லாமல் கொரோனா அச்சம் காரணமாக புதியதொரு வழமையான சூழலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைய இம்முறை வாக்கெடுப்பினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக வழமையை போன்றல்லாமல் நபரொருவர் வாக்களிப்பதற்காக நேரம் அதிகமாகும் என்று தேர்தல் ஒத்திகைகளின் போது கணிப்பிடப்பட்டது. அதற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆசனங்கள்

பொதுத் தேர்தலில் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளை அவதானிக்கும் போது கொழும்பு 19 , கம்பஹா 18 , களுத்துறை 10 , கண்டி 12 , மாத்தளை 5 , நுரவெலியா 8 , காலி 9 , மாத்தறை 7 , அம்பாந்தோட்டை 7 , யாழ்ப்பாணம் 7 , வன்னி 6 , மட்டக்களப்பு 5 , திகாமடுல்லை 7 , திருகோணமலை 4 , குருணாகல் 15 , புத்தளம் 8 , அநுராதபுரம் 9 , பொலன்னறுவை 5 , பதுளை 9 , மொனராகலை 6 , இரத்தினபுரி 11 , கேகாலை 9 என்ற அடிப்படையில் 196 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவர். 

(எம்.மனோசித்ரா)

No comments

Powered by Blogger.