என்னை Mp ஆக்குங்கள் - வீடு கட்டித் தருகிறேன்
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க நாடாளுமன்றத்திற்கு சென்ற தலைவர்களால் முடியாமல் போனது ஏன்? என எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 22 இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாரம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்நிற்கும் எனக்கு இருக்கும் பிரதானமான பிரச்சினைதான் இந்த மொழிப்பிரச்சினை ஆகும். மொழி தெரியாத பிரச்சினை எனக்கிருந்த போதிலும் மக்களுக்குரிய பிரச்சினையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஏனெனில் நான் மட்டக்களப்பிலுள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று அவர்களது நிலைமைகளை அறிந்து கொண்டு வருகிறேன். அவ்வேளையில் அவர்கள் என்னிடம் கூறும் பல பிரச்சினைகள் உள்ளன.
அந்த பிரச்சினைகள் என்று பார்க்குமிடத்து, இந்த மக்கள் காலம் காலமாகவும், 30 வருட யுத்தத்திலும் அவர்கள் முகங்கொடுத்த இன்னல்கள், அதனால் ஏற்பட்டுள்ள வாழ்வியல் போராட்டங்கள் இன்றும் அவ்வாறே தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு இருப்பது பாரதூரமான பிரச்சனையாகும்.
இந்த நாட்டை ஆண்டு வந்த ஆட்சியாளர்கள் இன்றுவரை அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பின்தங்கிய கிராமங்களான வவுணதீவு, கொக்கட்டிச்சோலை போன்ற அனைத்து கிராமங்களும் அன்றாட உணவுக்கு கஷ்டப்படும் மக்கள் வாழ்கிறார்கள்.
உன்னிச்சையில் பெரிய நீர்த்தேக்கத்தை வைத்துக் கொண்டு முழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் நீர் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால் உன்னிச்சை மக்களுக்கு குடிப்பதற்கு நீர் இல்லை.
அதேபோன்று வெல்லாவெளி பிரதேச பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கும் நீர் இல்லாத பிரச்சினை. இந்த தண்ணீரை அம் மக்களுக்கு வழங்குவதற்கு நாடாளுமன்றத்திற்கு சென்ற எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஏன் இந்த தலைவர்களால் முடியாமல் போனது. அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு அதனை எடுத்துக்கூறி அவர்களுக்கான மானியங்களை ஒதுக்கி இந்த மக்களது அத்தியாவசிய தேவைகளை வழங்க முடியாமல் போனது ஏன்?
இன்றைக்கும் இந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது ஏன்? இது அரசியல் கட்சிகளை பற்றி அலட்டுவதற்குரிய நேரம் இதுவல்ல. நான் இம் மக்களின் நிலைமையை நேரில் கண்டு அறிந்தே இவ்வாறு கூறுகின்றேன்.
இந்த மக்களுக்கு சரியான பதிலை வழங்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்திற்கு சென்று இந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு விளங்கக் கூடிய சிங்கள மொழியில் அதனை கூற வேண்டும்.
30 வருட யுத்தத்திற்கு முகங்கொடுத்த மக்களினது தேவைகளையும், உரிமைகளையும் எப்பொழுது பெற்றுக்கொடுப்பது? ஏன் இந்த மக்களை இவ்வாறு துன்பத்திற்கும், கோபத்திற்கும் உள்ளாக்குகிறீர்கள். இன்னும் ஒரு யுத்தம் வேண்டும் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்.
ஏனெனில் வாழ்க்கை போராட்டத்தில் இருந்து எழுந்திருக்க முடியாவிடின் வெவேறுபட்ட யுத்தங்களை ஏற்படுத்த விளைவார்கள்.
இந்த மாவட்டத்தில் புத்திஜீவிகள் இருக்கிறார்கள். மதகுருமார்கள் மற்றும் அப்பாவி மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவர் வீடாக சென்று சந்திப்பதற்கு எனக்கு காலம் போதாது உள்ளது.
எனவேதான் ஊடகவியலாளர்களிடம் நான் உதவியை கேட்கின்றேன். எனவே புத்திஜீவிகளான இச் சமூகத்திற்கு செய்திகளை வழங்கி மக்களை இதிலிருந்து மீட்டெடுப்பதற்கும் மக்களுக்கான பதிலை வழங்கவதற்கும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அதனை பெற்றுக் கொள்வதற்கும் நான் 05 வருட அதிகாரத்தை உங்களிடம் கேட்கின்றேன்.
இந்த மக்களுக்கு செய்யக்கூடிய சேவைகளை செய்வதற்கு என்னால் முடியும். எனக்கு வீடு, வாசல், குடும்பம் எதுவுமில்லை. நான் இந்த மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் வசிக்கிறேன்.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அதிகாரிகளினால் ஏதேனும் இடையூறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கான நீதியை பெற்று வழங்கவும், அவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவும் எனக்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என நான் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
விசேடமாக உன்னிசை, வெல்லாவெளி பிரதேச மக்களுக்கு நீர் இல்லாத திண்டாட்டம் மிகவும் பாரமாக உள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், மற்றும் நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகளுக்கும் அறியப்படுத்தியுள்ளேன். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு பக்கத்திற்கு இழுத்துச் செல்கின்றார்களே தவிர முடிந்தபாடில்லை.
எனக்கு அதிகாரம் இருந்தால் எப்படி நீரை வழங்க வேண்டும் என்று தெரியும். இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு அதிகாரமில்லை. எனவே நான் உங்களுக்கு வாக்குறுதியளிக்கின்றேன், இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு இல்லாத அனைத்து அப்பாவிக் குடும்பங்களுக்கும் வீடு கட்டிக் கொடுப்பேன். ஏனெனில் எனக்கு அதனை செய்யக்கூடிய திறன் இருக்கிறது. எனவே எனக்கு வாக்களிக்கவும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment