Header Ads



'ரணில் அதிக வாக்குகளைப் பெற்றால், நான் Mp உறுப்புரிமையை துறப்பேன்' - சுஜீவ

(எம்.மனோசித்ரா)

கொழும்பில்  ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய  மக்கள்  சக்தியை விட அதிக வாக்குகளைப் பெற்றால் அல்லது பாராளுமன்றத்தில் 80 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயாராகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று -03- வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாடு தற்போதுள்ள நிலைமையில் கோத்தாபயவை விட மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி ஒப்பீட்டளவில் சிறப்பானது என்று தோன்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எவ்வித பொறுப்பும் இன்றி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவமே ஜப்பான் இலங்கைக்கு வழங்கவிருந்து கடனுதவி இல்லாமல் போனமைக்கு காரணமாகும். இதனால் கொழும்பில் மேற்கொள்ளப்படவிருந்த பாரியளவிலான வீதி அபிவிருத்தியும் தடைப்பட்டுள்ளது. தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்க முயற்சிக்கின்றனர்.

பொருளாதார நிலைமை இவ்வாறிருக்க ராஜபக்ஷ குடும்ப ஆட்சி மறுபுறம் மும்மடங்காக அதிகரித்துள்ளது. குடும்ப ஆட்சியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கு சிறிதளவும் ஈடுபாடு இல்லை.

தேசிய சொத்துக்களை விற்று முடித்து, தற்போது கிரிகெட்டையும் நாட்டின் சிறந்த வீரர்களை அரசியல் நோக்கங்களுக்காக காட்டிக் கொடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை மஹிந்தானந்த அலுத்கமகே அறிந்திருந்தால் அதனை ஏன் அப்போதே வெளிப்படுத்தவில்லை ?

இவ்வாறு ஒவ்வொரு பிரிவாக நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். வாக்களிக்கும் போது மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியும் இதே நிலைமையிலேயே காணப்படுகிறது. அதனால் தான் 26 வருடங்கள் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்.

இம்முறை கொழும்பில் ரணில் விக்கிரமசிங்க  ஐக்கிய  மக்கள் சக்தியை விட அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் அல்லது தயா கமகே கூறியதைப் போன்று ஐக்கிய தேசிய கட்சி 50 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளேன் என்றார். 

No comments

Powered by Blogger.