தொல்பொருளியல் சட்டத்தை திருத்துவது, குறித்து ஜனாதிபதி கவனம்
தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.
இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது குறித்து ஆராய்வதற்கு மகாசங்கத்தினர் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளார். நீண்டகாலமாக இடம்பெற்று வரும் தொல்பொருள் அழிவுகளை நிறுத்தி நாட்டின் மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்குவதில் நடைமுறையில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பது இச்சட்டத்தை திருத்தவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையின் 4வது கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. எந்தவொரு புண்ணியஸ்தளத்தினதும் வரலாற்று மரபுரிமைகளுக்கு அல்லது தொல்பொருள் பெறுமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டது என்பதுடன், அத்தகைய அனைத்து இடங்களும் தேசிய மரபுரிமைகளாக கருதப்பட்டு பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து மகாசங்கத்தினர் முன்வைத்த முன்மொழிவுகளை விசேட செயலணியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தொல்பொருள் திணைக்களத்திற்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளை அதிகரிக்கவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தொல்பொருள்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் பாதுகாப்பு படையணியின் உதவியை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் இருந்துவரும் வழக்குகளை கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார். தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்குமாறு மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தொல்பொருள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.
காலனித்துவ காலத்திலும் அதற்குப் பின்னரும் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருள்கள் பிரித்தானியா மற்றும் டென்மார்க்கின் கோப்பன் ஹேகன் தொல்பொருள் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாக மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர். யுனெஸ்கோ நிறுவனத்துடன் கலந்துரையாடி அவற்றை நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் தேரர்கள் முன்மொழிந்தனர்.
கடந்த 5 ஆண்டு காலப்பகுதியில் தொல்பொருள்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாக தேரர்கள் குறிப்பிட்டனர். விகாரைகளுக்கு சொந்தமான புண்ணிய பூமிகள் பல்வேறு தரப்பினரால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தேரர்கள் தெரிவித்தனர்.
இரண்டு ஊழியர்களின் சேவை தேவைப்படும் இடத்திற்கு 15 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். குறித்த சேவைகள் தொடர்பில் அவர்களுக்கு எவ்விதமான அறிவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் சம்பளத்திற்காக மத்திய கலாசார நிதியம் வருடாந்தம் 7,000 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணிப்பாளர் பதவிகளின் எண்ணிக்கை 11 ஆகும். எனினும் இவ்வெற்றிடங்களுக்கு எந்தவொருவரும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் செனரத் திசாநாயக்க தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட உதவிப் பணிப்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆகும். எனினும் அதற்காக ஒருவர் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார். அத்தகைய நிலைமையில் திணைக்களத்தின் பணிகளை உரிய முறையில் நிறைவேற்ற முடியாதென ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகங்களிலிருந்து ஒரு வருடத்தில் சுமார் 80 பட்டதாரிகள் தொல்பொருள் விசேட பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். தொல்பொருள் குறித்த நடைமுறை சார்ந்த அறிவை கொண்டுள்ளவர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும்போது தொல்பொருள் துறைசார்ந்தவர்களை சுகததாச விளையாட்டரங்கில் சேவை செய்வதற்காக நியமிக்கபட்டுள்ளனர். துறைசார் அறிவு உள்ளவர்களை குறித்து துறைகளில் ஈடுபடுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்
புதையல் தோண்டும் கள்வர்களிடம் இருந்து தொல்பொருள்களுக்கு ஏற்படும் பாரதூரமான சேதங்கள் குறித்து தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர் சுட்டிக்காட்டினார். தொல்பொருள்களில் இருந்த தங்கம், வெள்ளி, இரத்தினக்கற்கள் போன்று எந்தவொரு பெறுமதிவாய்ந்த பொருட்களும் எனது 65 வருடகால ஆய்வுக்காலப் பகுதியில் கிடைக்கப்பெறவில்லை. எனவே தொல்பொருள்களை பாதுகாப்பதற்கு மக்களுக்கு சரியான அறிவை வழங்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தொல்பொருள்கள் குறித்த ஆய்வு அறிக்கையை தயாரித்தல் மற்றும் வரைப்படங்களை தயாரிப்பது முக்கிய தேவையாகும். உரிய ஆய்வு வரலாற்றை திரிபுபடுத்தி கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.
தொல்பொருள் கட்டளைச் சட்டம் திருத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்து மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் நியங்கொட விஜித்தசிறி தேரர் சுட்டிக்காட்டினார். தொல்பொருள் திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்பும்போது துறைசார்ந்த அறிவுள்ளவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென்றும் தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.
காலனித்துவக் காலத்தில் தயாரிக்கப்பட்ட தொல்பொருள் சட்டத்தின் மூலம் தொல்பொருள்கள் குறித்து மட்டும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்குரே விமல தம்ம நாயக்க தேரர் தேசிய மரபுரிகைள் மற்றும் சாசன வரலாற்றை பாதுகாக்கும் வகையில் அது திருத்தப்பட வேண்டுமென தெரிவித்தார்.
தொல்பொருள் சட்டத்தை திருத்தும்போது மகாசங்கத்தினர் ஆழமான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதன் அவசியத்தை அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரர் குறிப்பிட்டார். கலாசார அமைச்சுப் பொறுப்பு ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.
தொல்பொருள்களை அழிவுக்குட்படுத்துபவர்களுக்கு அதனை சமயம் சார்ந்த ஒன்றல்லாது அது தேசிய மரபுரிமையாகும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென அமரபுர மகா நிக்காயவின் ஸ்ரீ தர்ம ரக்கித்த பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டினார். ஏனைய சமயத்தவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு மத்தியிலும் இதனை விளங்கிக்கொள்ளக்கூடிய கற்றவர்கள் இருப்பதால் தொல்பொருள்களின் பெறுமதிகளை சொல்லிக்கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தேரர் அவர்கள் விளக்கினார்.
திவியகஹ யசஸசி தேரர் தொல்பொருள்களை பாதுகாப்பதற்கு முன்மொழிவுகளை முன்வைத்தார்.
ஜனாதிபதி அவர்கள் தொல்பொருள்களை பாதுகாப்பது குறித்த புதிய எண்ணக்கருவொன்றினை சமூகத்திற்கு முன்வைத்துள்ளார். அதனை சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியுமென கோட்டே ஸ்ரீ கல்யானி சாமசிறி தர்ம மகாசங்க சபையின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் சங்கைக்குரிய கொட்டபிட்டியே ராகுல தேரர் தெரிவித்தார். குருணாகலையில் உள்ள புவனேகபாகு மன்னனின் ராஜ சபை உடைக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் அரசியல் நோக்கம் கொண்டதாகும் என வட மேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய ரெக்கவ ஜினரத்ன தேரர் தெரிவித்தார். மரத்தினால் ஆன இம்மண்டபம் நகர சபைக்கு சொந்தமானது எனக்கூறி புவனேபாகுவின் பெயரில் ஹோட்டல் ஒன்று நடாத்திச் செல்லப்பட்டிருக்கிறது. அதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக தேரர் அவர்கள் தெரிவித்தார் எனினும் புவனேகபாகு அரசர் இதனை நிர்மாணித்ததாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தேரர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.
மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.24
Post a Comment