கொரோனா நோயாளி தப்பியோடியதும், பிடிபட்டதும் எப்படி (முழு விபரம் இதோ)
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில், அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த தொற்றாளர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், 9 மணி நேர விஷேட புலனாய்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகளின் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான, திருகோணமலை வெள்ளை மணல் கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பளிங்கு கடற்கரை வீதி, சீனன்குடா எனும் முகவரியைச் சேர்ந்த 41 வயதான மொஹம்மட் காசிம் மொஹம்மட் நாசிம் எனும் நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ள நிலையில், கைதுசெய்யப்பட்டு மீளவும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கொரோனா தொற்றாளர், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றதையடுத்து, கொழும்பு முழுவதும் கொரோனா சமூக பரவல் அச்சம் ஏற்பட்ட போதும், அதிகாலை முதல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் பொலிஸ், அரச உளவுச் சேவை அதிகாரிகளும் சுகாதார தரப்பினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகளில், அவ்வாறு அச்சமடைய வேண்டிய சூழல் உள்ளமைக்கான எந்த காரணிகளும் கண்டறியப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
எனினும் பொதுமக்கள் வழமை போன்று சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் குடியிருப்புத் தொகுதியில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக இன்று அதிகாலை 2.00 மணியளவில், குறித்த கொரோனா தொற்றாளர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பில், அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை பணிப்பாளரால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே உடனடியாக இராணுவ புலனாய்வுப் பிரிவு, அரச உளவுச் சேவை உள்ளிட்டவையின் உதவியுடன் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி பொலிஸ் வலயங்கள் ஊடாக சிறப்பு விசாரணை மற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளில், அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் ஜன்னல் வழியே குதித்து, பின்னர் வைத்தியசாலையின் மதிலில் ஏறி குதித்து குறித்த தொற்றாளர் அங்கிருந்து தப்பியுள்ளதாக தெரியவந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். எவ்வாறாயினும் அவரது இடது காலில் உபாதை காரணமாக நடப்பதற்கும் சிரமப்படுபவர் எனவும் பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் குறித்த கொரோனா தொற்றாளர் சமூகத்துடன் கலந்தால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என உணர்ந்த பாதுகாப்புத் தரப்பு, புலனாய்வு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, குறித்த தொற்றாளரின் புகைப்படம், விபரங்களை உடனடியாக ஊடகங்களுக்கு வழங்கி பொது மக்களை விழிப்படையச் செய்ததுடன், சமூக வலைத் தளங்களிலும் அது குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டு மக்கள் விழிப்பூட்டப்பட்டனர்.
இந்த தொற்றாளர், போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த நிலையில் கடந்த மே 12 ஆம் திகதி ஏ.ஆர்.277/2020 எனும் நீதிமன்ற உத்தரவு ஊடாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அவர் அங்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கால எல்லையும் குறிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே குறித்த புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று பரவியதால், இந்த நபருக்கும் அந்த தொற்று ஏற்பட்டுள்ளமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் தெரியவந்ததாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டி ஆரச்சி கூறினார்.
அதனையடுத்து அவர் ஆரம்பத்தில் வெலிகந்த, கொரோனா தொற்று குறித்த சிறப்பு சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், மொஹம்மட் ஹாசிம் எனும் இந்த நபருக்கு மேலும் பல நோய் நிலைமைகள் இருந்தமையால் அவர் அங்கிருந்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டி ஆரச்சி சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பின்னணியில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே நேற்று அதிகாலை அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் இருந்து தப்பி வந்த அவர், புறக்கோட்டை - பிரதான வீதிப் பகுதிக்கு வந்துள்ளதுடன், அங்கிருந்து டப்ளியூ.பி.ஏ.ஏ.எம்.5970 எனும் முச்சக்கர வண்டியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நோக்கி சென்றுள்ளார்.
தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, வாயில் இலக்கம் 5 இல் பிரசாத் சஞ்ஜீவ, லசந்த வோல்டீவ் ஆகிய இரு வைத்தியசாலை ஊழியர்கள் அங்கு இருந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை தகவல் பிரகாரம், குறித்த சிற்றூழியர்கள் இருவரும் சமூக வலைத் தளத்தில் பொலிசார் ஏற்கனவே செய்த விளம்பரம் பிரகாரம் குறித்த தப்பியோடிய நபர் தொடர்பில் ஞாபகங்களுடன் இருந்துள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் வந்து இறங்கியுள்ள, குறித்த தொற்றாளர் ' நாந்தான் ஐ.டி.எச். ( தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை) இலிருந்து தப்பியோடியவர்.' என கூறியவாறே உள்ளே செல்ல முற்பட்டுள்ளார்.
அதன்போது அங்கிருந்த அந்த இரு ஊழியர்களும் அவரை அவ்விடத்தில் அமருமாறு கட்டளை இட்டு உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அங்கிருந்த பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டு உரிய சுகதார முறைப்படி மீள சிகிச்சைகளுக்காக அழைத்து செல்லப்பட்டார்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்ற ரீதியில் போதைப்பொருளை தேடி அவர் அங்கிருந்து தப்பி வந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அது குறித்து விசாரிக்கின்றனர்.
அத்துடன் குறித்த நபர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் இருந்து புறக்கோட்டை - பிரதன வீதிவரை எப்படி வந்தார் என்பது தெளிவில்லாத நிலையில், சி.சி.ரி.வி. காணொளிகள், அறிவியல் தடயங்களை வைத்தும், இராணுவ, அரச உளவுச் சேவையாளர்களின் உதவியுடனும் பூரண விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந் நிலையில் குறித்த நபரை தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்த முச்சக்கர வண்டி சாரதி அவ்விடத்திலேயே பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு, தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஓட்டும் தொழிலை செய்யும் குறித்த நபரின் வண்டியில், கால் உபாதையைக் காட்டி சிகிச்சைகளுக்காக செல்வதாக கூறியே கொரோனா தொற்றாளர் ஏறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் வைத்தியசாலை அருகே இறங்கியதும் அவர் வாடகைப் பணம் கூட கொடுக்கவில்லை என்பதும் விஷேட அம்சமாகும்.
எவ்வாறாயினும் பொலிஸ் விசாரணை பிரகாரம், வைத்தியசாலையில் இருந்து தொற்றாளர் தப்பிய போதும் அவரிடம் பணம் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதுவரையிலான இராணுவ புலனாய்வு, அரச உளவுச் சேவை விசாரணைகள் பிரகாரம், இந்த தொற்றாளர் வைத்தியசாலையில் இருந்து தப்பியமை ஊடாக கொழும்புக்குள் சமூகப் பரவலுக்கான எந்த சான்றுகளும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அடிக்கடி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்து கண்டிப்பாக மக்கள் பேண வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, வைத்தியசாலையில் இருந்து தப்பிய தொற்றாளரை கைதுசெய்ய உதவிய அனைத்து தரப்பினருக்கும் பொலிஸ் பணப் பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment