ரிஷாத்திடம் வவுனியாவில் வாக்குமூலம் பதிய நடவடிக்கை - உத்தரவை திருத்திய நீதிமன்றம்
( எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், ரவி கருணாநாயக்க ஆகியோரை திங்களன்று சி.ஐ.டி.யில் இருவேறு விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே விடுத்த உத்தர்வுகளை, அதே நீதிமன்றம் நேற்று திருத்தியது.
சந்தேக நபர்களான முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், ரவி கருணாநாயக்க ஆகியோர் சார்பில் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அவற்றுக்கு சட்ட மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பதிலுரைகளை ஆராய்ந்தே இந்த திருத்திய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி திங்களன்று சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு 3 ஆம் இலக்க விசாரணை அறையில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் பிரிதொரு விசாரணைக்காக அவரை இவ்வாறு அங்கு ஆஜராகுமாறு, சி.ஐ.டி.யினரின் கோரிக்கையை ஏற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
நேற்று அது தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடையீட்டு மனுவொன்றிறூடாக ரிஷாத் பதியுதீன் சார்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மன்றில் ஆஜரானதுடன், பாராளுமன்ற தேர்தலின் பின்னரான ஒரு திகதியை தமக்கு சி.ஐ.டி.யில் ஆஜராக வழங்குமாறு அவர் கோரினார்.
மன்னார் பகுதியில் தேர்தலில் போட்டியிரும் அவர், அங்கு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தேர்தல்கள் வேலையில் உள்ளதால், கொழும்புக்கு வந்து செல்ல சுமார் 16 மணி நேரங்கள் தேவைப்படும். எனவே தேர்தல் தொடர்பில் செயற்பட தடங்கல்கள் ஏற்படுவதால் தேர்தலின் பின்னரான திகதி யொன்றினை தருமாறு அவர் கோரினார்.
இதுதொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே மன்றில் விடயங்களை முன்வைத்த நிலையில்,
இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்து நீதிவான் ஏற்கனவே விடுத்த உத்தரவை திருத்தினார்.
அதன்படி சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு வவுனியா சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்று ரிஷாத்திடம் வாக்கு மூலம் பெறவும், திங்களன்று வவுனியா சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைகளுக்கு ஆஜராவது போதுமானது என ரிஷாத் பதியுதீனுக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை விசாரணைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி திங்களன்று சி.ஐ.டி.யில் ஆஜராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த உத்தர்வும் நேற்று திருத்தப்பட்டது. ரவி கருணாநாயக்க சார்பில் மன்றில் ஜனதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்னம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, ஆகியோரின் வாதங்களை கேட்டபின்னர் நீதிவான் அந்த உத்தரவை திருத்தினார்.
ரவி கருணாநாயக்க ஐ.தே.க.வின் உப தலைவர் என்ற ரீதியில் பாரிய வேலைப்பலு உள்ளதால் தேர்தலின் பின்னரான திகதியை விசாரணைக்கு தருமாரு ரவி கருணாநாயக்க சார்பில் கோரப்பட்டது. அதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டது.
இந் நிலையில் இரு தரப்புக்கும் பாதிப்பு இல்லாமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைய 27 ஆம் திகதி திங்களன்று நாலரை மணி நேரம் மட்டும் சி.ஐ.டி.யில் வாக்கு மூலம் வழங்க ரவி கருணாநாயக்கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டும் அவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்து கொள்ளப்படவுள்ளது.
Post a Comment