Header Ads



வீரவன்சவை உடனடியாக கைதுசெய்து, தேர்தலில் போட்டியிட தடை செய்யுங்கள் - முஜிபுர் ரஹ்மான்


நாட்டின் சட்டத்திற்கு முரணாக தனது முகம் பதிக்கப்பட்ட முத்திரையை வெளியிட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தடை விதிக்க வேண்டும் என்று முள்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை -22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

வேட்பாளரோ அல்லது நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்புவதைப் போன்று முத்திரை வெளியிட முடியாது. அது சட்டத்துக்கு முரணானதாகும். எனவே இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்சவும் இந்த சம்பவத்தில் அவருடன் தொடர்புடைய நபர்களும் உனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ள ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாருக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

குற்றப்புலனாய்வுப் பிரிவில் இது தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் இதற்கு என்ன பதிலளிப்பார் என்று கேள்வியெழுப்புகின்றோம். இவ்வாறு ஒவ்வொருவரும் தான் விரும்பியவாறு முத்திரை வெளியிடுவதற்கு நாட்டின் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளதா?

இது தேர்தல் சட்ட மீறல் மாத்திரமல்ல. முற்று முழுதாக நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும். தேர்தல்கள் ஆணைக்குழுவால் சட்ட விதிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை ஆளுங்கட்சி பின்பற்றுவதில்லை. ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவரே தேர்தல் சட்டங்களை மீறுகின்றார்.

தேர்தல் ஆணையாளர் இவ்வாறான விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தன்னால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் சட்டங்களை வரைமுறையின்றி ஆளுந்தரப்பினர் மாத்திரமே மீறுகின்றனர் என்பதை தேர்தல் ஆணையாளர் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்றார். 

குருணாகல் மாவட்டத்தில் காணப்பட்ட புவனேகபாகு மன்னனுடைய அரச சபை உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதன் முக்கியத்துவம் பற்றி பேசாமல் புவனேகபாகு மன்னன் முஸ்லிம் பெண்னை திருமணம் முடித்துள்ளார் என்று அநாவசியமான மிகவும் கீழ்தரமான கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வைத்தியர் ஷாபி ஆகியோரது விவகாரங்களில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்தினர் மீது வெறுப்புணர்வை தோற்றுவித்ததைப் போன்று இந்த சம்பவத்தையும் திரிபுபடுத்த முற்படுகின்றனர். இது மிகவும் வெறுக்கத்தக்க விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

(எம்.மனோசித்ரா)

No comments

Powered by Blogger.