Header Ads



கிராமங்களை கட்டியெழுப்ப, வங்கிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லுங்கள் - ஜனாதிபதி தெரிவிப்பு

கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை அடையாளம்கண்டு வங்கிச் சேவைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வரை இருக்காமல் ஏற்றுமதி விவசாயத்தை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். கைத்தொழில்கள் உருவாவது மட்டும் அபிவிருத்தி ஆகாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், விவசாயத்தை மையப்படுத்தி கிராமிய தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டார். 

பிரதேச அபிவிருத்தி வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார். 

தேவையை மிகச் சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வழிமுறை குறித்து கீழ் மட்டத்திலிருந்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

வணிக வங்கிகள் கடன்களை வழங்கும்போது உற்பத்தித்துறையை விடவும் வணிக பிரிவுக்கு அதிக கவனம் செலுத்துகின்றனர். பாராம்பரியங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது விவசாயிகளை உற்பத்திக்கு ஊக்குவிப்பது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது உழுந்து, குரக்கன், பயறு உட்பட தானிய வகைகளை பயிரிடுவதற்கு ஊக்குவிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அந்தந்த பிரதேசங்களுக்கு இலக்குகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதே வங்கியை கிராமத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் தான் எதிர்பார்க்கும் இலக்காகும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

நீண்டகாலமாக தவணைக்கொடுப்பனவின் அடிப்படையில் பாரியளவு கடன்களைப் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரச வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார். 

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஹிந்த சாலிய, பொது முகாமையாளர் டி.குகன் உள்ளிட்ட பணிப்பளார் சபையின் அங்கத்தவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.02

1 comment:

  1. வங்கிகள் கிராமத்துக்குச் சென்றால் பொதுமக்கள் வங்கிகளுக்குச் செல்லும் போது பணத்தைப் போடுவதற்காக பெரிய ஒரு பசளை பேக்ைகயும் அவர்களுடன் கூடவே கொண்டு செல்ல வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.