சர்வாதிகார ஆட்சியை, நாங்கள் முன்னெடுக்கவில்லை, கோத்தாபய சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்கிறார் - நாமல்
சர்வாதிகார அரச நிர்வாகத்தை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. நீதித்துறையின் கட்டமைப்புக்குள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அரசாங்க உறுப்பினர்கள் எவரும் தலையிட மாட்டார்கள். ஆசியாவின் ஆச்சரியம் என்ற நிலைக்கு பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தங்காலை - கால்டன் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை -31- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனநாயம், மக்களின் அடிப்படை உரிமை ஆகிவற்றை முன்னிலைப்படுத்தி ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் செயலளவில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவில்லை. அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. எமது போராட்டத்தின் விளைவாகவே இரண்டு தேசிய தேர்தல்களில் மாபெரும் பெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளோம்.
இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை தரைபெற்று பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டும். புதிய அரசாங்கத்தில் பொருளாதார ரீதியிலும் அரசியலமைப்பு ரீதியிலும் பாரிய நெருக்கடிகள் காணப்படுகின்றன.
அரசியலமைப்பின் 19வது திருத்தம் ராஜபக்ஷர்களை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டது. இத்திருத்தத்தினால் நாட்டு மக்கள் எவ்வித பயனும் பெறவில்லை. ஆகவே பயனற்ற அரசியலமைப்பினை திருத்தம் செய்ய வேண்டும். நாட்டுக்கு பொருந்தும் விதத்தில் அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும். என்பது எமது பிரதான எதிர்பார்ப்பு.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்கிறார். மக்கள் அவரை ஜனநாயக முறையில் தெரிவு செய்துள்ளார்கள். அவரது கொள்கையை செயற்படுத்தும் அரசாங்கமும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தை போன்று முரண்பாடான அரச நிர்வாகம் தோற்றம்பெற்றால் பாரிய விளைவுகள் மீண்டும் ஏற்படும்.
Post a Comment