Header Ads



“தேர்தலுக்கு முன் என்னை சிறையில் அடைக்க முயற்சி, எனினும் இறைவன் பாதுகாப்பான்” - ரிஷாட்

- ஊடகப்பிரிவு -

பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல், பொத்துஹெரவில் இன்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது,

“குருநாகல் மாவட்டத்துக்கு இன்று வருவேனா என்பது, நேற்றுமாலை வரை எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. வரமுடியுமா அல்லது வரவிடுவார்களா? என்று எதுவுமே தெரியாத நிலையில் இருந்தேன். கட்சியின் தவிசாளர் அமீர் அலியுடன் தொடர்புகொண்டு, இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில், என் சார்பில் கலந்துகொள்ள ஆயத்தமாகுமாறும் வேண்டினேன்.

நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கு ஏதாவது வழக்கு இருக்கின்றதா? அல்லது தவறு ஏதும் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றதா? 17 வருட அமைச்சுப் பதவி உட்பட, சுமார் 20 வருடகால அரசியலில், என்னைப் பற்றி போலியான கதைகளை பரப்பினார்களேயொழிய, எந்தக் குற்றச்சாட்டும் பொலிஸில் இதுவரை இல்லை.

மக்களுக்கு காணி வழங்கியதற்காக இனவாதிகள் வழக்கிட்டனர். சமூகத்துக்காக பேசியதனால் மதவாதிகள் நீதிமன்றத்தை நாடினர். வேறு எந்த தனிப்பட்ட வழக்கும் எனக்கு இதுவரை கிடையாது.

சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. பேசியதில்லை. தொலைபேசியில் கூட கதைத்ததும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே அந்தக் கயவனின் செயலுடன் என்னையும் தொடர்புபடுத்தி, சிறையில் அடைக்க சதிகள் இடம்பெறுகின்றன.

தேர்தலுக்கு முன்னர் என்னை அடைக்கலாம். எனினும், “இறைவன் பாதுகாப்பான்” என்ற நம்பிக்கை எமக்குண்டு. நமது சமுதாயத்தை அடிமைப்படுத்துவதற்காகவும் பயமுறுத்துவதற்காகவும், சமூகத் தலைமைகளாக அங்கீகரிக்கப்பட்ட எம்மை அச்சுறுத்தி, அடக்கப் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, சிறையில் அடைக்கவும் முயற்சிக்கின்றனர். எம்மை அடைப்பதன் மூலம், சமுதாயத்தை பயமுறுத்த முடியும் எனவும் திட்டமிடுகின்றனர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நான் நிரபராதி. எமது நேரத்தை, காலத்தை வீணடிப்பதே இதன் நோக்கம். என்னை சிறையிலடைத்து, பெரும்பான்மையின வாக்குகளை அதிகரித்து, மூன்றிலிரண்டு பாராளுமன்ற பெரும்பான்மை எடுப்பதே இவர்களின் திட்டம். அதன்மூலம், சமூக உரிமைகளை இல்லாமல் செய்வது, சமூகத்தை கையாலாகாததாக மாற்றுவதே இவர்களின் திட்டம். இதில் மக்களாகிய நீங்கள் தெளிவாக இருந்துகொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்துகொள்ளுங்கள்.

குருநாகல் மாவட்டத்தில், இம்முறைத் தேர்தலில், இரண்டு வேட்பாளர்கள் தொலைபேசிச் சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்முறை நமது சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றால், வரலாற்றில் ஒருபோதுமே பெறமுடியாது போய்விடும்.

முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை தமது கட்சியில் நிறுத்தாதவர்கள், தமது ஏஜெண்டுகளை அனுப்பி, வெட்கமில்லாமல் வாக்குக் கேட்கின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கினால், நமது சமூகம் தலைகுனிய நேரிடும். நாங்கள் அரசியல் அநாதைகளாகியும் விடுவோம். எங்களுக்கு எதுவும் நடக்கலாம். ஆனால், சமூகம் கௌரவத்துடன் வாழ வேண்டும். சமூகத்துக்கு அடித்தால் தட்டிக் கேட்கின்றோம். குருநாகல் மக்களாகிய உங்களுக்கு அடித்தாலும் ஓடி வருகின்றோம். நாங்கள் வரவில்லை என்றால் யார் வருவது? பொம்மைகளாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கின்றார்களா?

இறைவன், குருநாகல் மக்களாகிய உங்களுக்குத் தந்த இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால், உங்களின் தலையெழுத்தை இம்முறை மாற்ற முடியும். சுமார் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைக் கொண்ட நீங்கள், தொடர்ந்தும் அரசியலில் தனித்துவிடப்பட முடியாது. எனவே, பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்றார்.

2 comments:

  1. THERTHALUKKU MUN, PIN, ENRA
    VITHIYAASHAM PAARKAAMAL, ATHU
    YAARAAKA IRUNDAALUM, KUTRAM SHEITHAVAR
    KAATTAAYAMAAKA, NICHAYAMAAKA,
    THANDIKKAPADAVENDUM.

    ReplyDelete

Powered by Blogger.