Header Ads



இது முஸ்தபா என்பவரின், தன்னம்பிக்கை கதை

  • - Manivannan Mani -

விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ் உடல் பாகங்கள் செயல் படாத நிலைமையில் தூக்கி வரப்பட்டார் முஸ்தபா. அவரைப் பார்த்து, "இனி உங்களால் நடக்க முடியாது. உங்கள் வாழ்க்கையே இனி அவ்வளவுதான்; முடங்கிப் போய்விடும்" என்று டாக்டர்கள் கூறினார்கள்.

ஒரு நாள் தன் சொந்த பேக்கரியில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றிருக்கிறார். ஒரு பாலத்தைக் கடந்தபோது ஆட்டோ நிலை தடுமாறியிருக்கிறது. அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் முஸ்தபா தூக்கி வீசப்பட்டிருக்கிறார். முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டு வலியால் அலறி துடித்திருக்கிறார். அவரைத் தூக்கிக் கொண்டு எலும்பு முறிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அப்போதுதான் இப்படி டாக்டர்கள் சொன்னார்கள்.

மலப்புரம் மாவட்ட, கோடூர் பஞ்சாயத்தில் எளிய விவசாய குடும்பத்தில் நான்கு பேரில் ஒருவராகப் பிறந்தார் முஸ்தபா. வீட்டில் எவருமே படிக்காத நிலையில் இவர் மட்டும் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறுவயதில் இருந்தே பைக், கார், ஜீப் ஓட்டுவதில் அதிக ஆர்வம். படிப்பைப் பாதியில் நிறுத்தியதும் ஒரு மெக்கானிக்கல் வொர்க் ஷாப்பில் கொஞ்சகாலம் வேலை செய்தார். குடும்பத்தில் ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றி போகவே சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுப்போய் ஐந்து வருடம் வேலை செய்தார்.

பிறகு, ஊருக்குத் திரும்பினார்.1987-ஆம் ஆண்டு 25 வயசில் திருமணம் செய்துகொண்டு ஊரிலேயே சின்னதாக பேக்கரி ஒன்றை ஆரம்பித்தார். கூடவே இரண்டு ஜீப் வாங்கினார். ஒரு ஜீப்பை தான் வாடகைக்கு ஓட்ட வைத்துக் கொண்டு மற்றதை ஓட்டுநர் மூலம் வாடகைக்கு ஓட்டப் பயன்படுத்தினார். விடியற்காலை துவங்கி இரவு 11 மணிவரைக்கும் ஓயாத உழைப்பு! நல்ல நிலையை நோக்கிக் குடும்பம் பீடு நடை போட ஆரம்பித்தது. அந்த நேரத்தில்தான் அந்த விபத்து நடந்தது.

டாக்டர் சொன்னதைக் கேட்டும், முஸ்தபாவின் நிலையைப் பார்த்தும் எல்லோரும் ஓவென்று அழுது அரற்றிக் கொண்டிருக்க, அவரது மனைவி ஷபியா

மட்டும் தைரியமாக கண்கலங்காமல் அவரைப் பார்த்துச் சொன்னார்: "வாழ்க்கை நமக்கு இத்தோடு முடிந்து விடவில்லை; இனிதான் ஆரம்பமாகிறது. எந்தக் கலக்கமும் வேண்டாம். நான் இருக்கிறேன். மீண்டு வருவோம்"

விபத்தில் சிக்கியது முதல் இன்று வரை அவரது மனைவி சொன்னது போலவே அழவே இல்லை. அவரைப் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துக் கொண்டு சென்று காண்பித்தார்; ஆனாலும் எந்த சிகிட்சையும் உரிய பலனளிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் முஸ்தபாவை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

அவரைப் பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள், இடுப்புக்குக் கீழ் உடல் இயக்கம் இல்லாதவர்கள் வாழ்வில் சாதித்த கதைகளையெல்லாம் எடுத்துக் கூறி தன்னம்பிக்கை ஊட்டினார்கள். காலப் போக்கில் அவரைப் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கைக் குறைந்து போனது. உடல் நிலையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கணவரைத் தனிமை வாட்டாமல் இருக்க என்ன செய்வது என்ற கவலை மனைவி ஷபியாவை வதைத்தது. படுத்த படுக்கையாகக் கிடந்தவரை வீல் சேருக்கு மாற்றினார். வீல் சேருக்கு மாறிய பிறகு முஸ்தபாவுக்கு வெளியுலக தொடர்பைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது. ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இரு பக்கமும் டயர்களைப் பொருத்தி அதை ஓட்ட முயற்சி எடுத்து, பயணம் செய்யத் தொடங்கினார். ஸ்கூட்டரில் ஏறவும், இறங்கவும் மட்டுமே மற்றவர்களின் உதவி தேவைப்பட்டிருக்கிறது.

இருசக்கர வாகனம் ஏற்படுத்திக் கொடுத்த வெளியுலகத் தொடர்பை வலுப்படுத்தி பேக்கரி தொழிலை விரிவாக்கம் செய்தார். மேலும் 2 பேக்கரிகளையும் தொடங்கினார். வாழ்க்கை மீண்டும் பழைய திசையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது என்ற சந்தோஷம் எட்டிப்பார்ப்பதற்குள், மீண்டும் அந்தப் பேரிடி வந்து சேர்ந்தது. இடுப்புக்குக் கீழ் கால்கள் உணர்வற்று இருப்பதை உணராமல் ஸ்கூட்டரில் முஸ்தபா தொடர்ந்து பயணித்தார். கால்கள் சாலையில் வெகு தூரம் உராய்ந்து, செல்லச் செல்ல, சதைகள் பிய்ந்து ரத்தம் கொட கொடவென கொட்டி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்கூட்டரில் ஏறவே முஸ்தபா பயந்திருக்கிறார். மனைவியும் ‘இனி ஸ்கூட்டரில் செல்ல வேண்டாம்’ என்று கூறி விட்டார்.

இதையடுத்து கைகளால் காரை இயக்குவது பற்றி யோசித்திருக்கிறார். அதுபற்றி விசாரிக்கத் தொடங்கியபோது, இடுப்புக்குக் கீழ் செயல் இழந்தவர்கள் ஓட்டும் கார் இந்தியாவில் இன்னும் உருவாக்கப்படவில்லை என்ற செய்தி தெரியவந்திருக்கிறது. அப்படி ஒரு காரை தானே வடிவமைத்து ஓட்ட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு களம் இறங்கினார். அதற்குக் காரணம் சவுதி அரேபியாவில் அப்படிப்பட்ட வாகனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதை அவர் நேரில் பார்த்து இருந்தார்.

முஸ்தபாவின் கார் ஓட்டும் கனவு பல தடைகளைக் கடந்து இன்று நிறைவேறி இருக்கிறது. அதுபற்றி சொல்கிறார்:

‘‘நான் கார் ஓட்டுவதற்கு ஆர்வமாக இருப்பதைப் புரிந்து கொண்ட உறவினர் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். நான் ஓட்டுவதற்கு ஏற்ப காரை வடிவமைக்க விஜயன் என்ற மெக்கானிக் ஒருவர் உதவியாக இருந்தார். எப்படியெல்லாம் டிசைன் செய்ய வேண்டும் என்பதை நான் விவரித்துக் கூறியபோது அவருக்கே அவை புது விஷயமாகத் தெரிந்தது. கால்களுக்குப் பதிலாக ஒரு கையால் இயக்கும் வகையில் பிரேக், ஆக்சிலேட்டர், கிளெட்ச் ஆகிய மூன்றையும் மாற்றினோம். மற்றொரு கையில் ஸ்டீரியங்கை இயக்கத் திட்டமிட்டோம். ஆரம்பத்தில் எதுவும் கைகூடிவரவில்லை. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு எல்லாமே என் கைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காரை நானே இயக்கி சாலையில் தனியே பயணித்தேன். அப்போது அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது.

‘இனி உன்னால் நடக்கவே முடியாது’ என்று சொன்ன டாக்டர்கள் முன்னால் நானே காரை ஓட்டிச்சென்று போய் நிறுத்தினேன். என்னைப் பார்த்ததும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதைப் பார்த்து ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் காரில் என்னைத் தேடி வந்தார்கள். அவர்கள் போலியாவால் பாதிப்புக்கு உள்ளானவர்கள். நான் எப்படி காரை ஓட்டுகிறேன் என்பதை ஆர்வமாகக் கேட்டார்கள். அவர்களும் என்னைப் போலவே காரை ஓட்டுவதற்கு ஏற்ப, காரை உருவாக்கிக் கொடுத்தேன்.

என்னிடம் நிறைய மாற்றுத்திறனாளிகள் அதன்பிறகு வந்து, அவர்கள் ஓட்டுகிற மாதிரி காரை டிசைன் பண்ணிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். பேக்கரி வேலையுடன், கார் டிசைன் செய்கிற வேலையையும் செய்ய ஆரம்பித்தேன்.

2001-இல் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி என் வாழ்நாளில் பெரிய திரும்புமுனையாக அமைஞ்சது. அங்கே நடந்த தேசிய அளவிலான வாகனத் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சுது. என் திறமையை நிரூபிக்க, நான் வடிவமைச்ச ஒரு காரிலேயே கேரளாவில் இருந்து டெல்லி வரைக்கும் போனேன். அதுவும் நான் மட்டுமேதான் காரை ஓட்டினேன். என் காரில் மூன்று அதிகாரிகளை உட்காரவெச்சு, டெல்லியைச் சுற்றி 1,020 கிலோமீட்டர் தூரம் ஓட்டிக்காட்டினேன். அந்தக் கருத்தரங்கில் எனக்கு முதல் பரிசு கிடைச்சுது. அங்கிருந்து கார்லயே கேரளா திரும்பினேன். போக வரப் பயண நேரம் மட்டுமே ஏழு நாள்கள் ஆச்சு!"

ஏழு வகையான கார்களை இப்போது மாற்றுத்திறனாளிகளின் உடல் பிரச்னைகளுக்கு ஏற்ப ரீ-டிசைன் செய்துகொடுக்கிறார் முஸ்தபா.கால்கள் இயங்கா விட்டாலும், குறைந்தபட்சம் ஒரு கையாவது செயல்பட்டால்தான் மாற்றுத்திறனாளிகளால் கார் ஓட்ட முடியுமாம்!
டிரைவர் சீட்டில் வீல்சேரில் இருந்தபடியே மாற்றுத்திறனாளிகள் அவர்களே கார் ஓட்டலாம். தன் ஊரிலேயே கார் டிசைனிங் சென்டர் வைத்திருக்கிறார் இவர். அதில் இவரைத் தவிர மேலும் இரண்டு பேர் வேலை செய்கின்றனர்.

இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோருக்கு கார்களை முஸ்தபா மறுவடிவமைப்புச் செய்துகொடுத்திருக்கிறார். இந்தப் பணித் திறமைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை இவருக்கு வழங்கி இருக்கின்றன!

முஸ்தபா மூலிகைப் பண்ணை, காய்கறித் தோட்டம், மீன் வளர்ப்பு என 12 ஏக்கரில் பரந்துவிரிந்த விவசாயப் பணிகளுடன் விவசாயியாகவும் இப்போது இருக்கிறார்.

விபத்துக்குப் பிறகு முஸ்தபாவுக்கு இயன்முறை, ஆயுர்வேத சிகிச்சைகள் அதிக அளவில் தேவைப்பட்டுள்ளது. அதற்காகத் தேடியபோது சில மூலிகைத் தாவரங்கள் எங்கும் கிடைக்கவில்லை. தன்னை மாதிரி மற்றவர்கள் யாருமே சிரமப்படக் கூடாது என்று இவரே மூலிகைத் தாவரங்களை விளைவிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த நேரத்தில் விபத்துக்கான இழப்பீடாக 18 லட்சம் ரூபாய் கிடைக்க, அதில் 2005-இல் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கி, 360 வகையான அரிய வகை மூலிகைகளை வளர்க்கிறார்! மக்கள் மட்டுமல்லாமல் மருத்துவத் தயாரிப்பு நிறுவனங்களும் இவரிடம் வந்து மூலிகைகளை வாங்கிச் செல்கிறார

"வெறுங்கை என்பது மூடத்தனம் பத்து விரல்களும் தானே மூலதனம்"என்பார் கவிஞர் தாராபாரதி. இந்த முஸ்தபாவோ "கால்கள் இல்லை என முடங்காதே..மனசு இருந்தால் வெற்றிக்கொடியை எங்கும் என்றும் நாட்டிடலாம்" என்று புதிய கவிதை படைத்துத் தந்து, வருகிறார்!

No comments

Powered by Blogger.