சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த, வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி - சிந்தித்து செயற்பட ரிஷாட் அறிவுரை
வன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று காலை (01) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே. அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முன்னாள் அமைச்சர் மேலும் கூறியதாவது,
“வன்னி தேர்தல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்களைக் கூறுபோட்டு, வாக்குகளைச் சிதறடிப்பதே இவர்களின் பிரதான இலக்கு. எங்கெங்கெல்லாம் இருந்து வந்து, இந்தப் பிரதேசத்தில் களத்தில் குதித்துள்ளார்கள். மக்களை ஏமாற்ற முடியுமென்ற பகற்கனவுடன் அலைந்து திரிகின்றார்கள். அரசியல் பலத்தை பயன்படுத்தி, ஆசை வார்த்தைகளைக் காட்டி, அதுவும் முடியாவிட்டால் அச்சுறுத்தி, அடக்குமுறைகளை மேற்கொண்டு வாக்குகளை சூறையாட நினைக்கும் இந்த சக்திகள் குறித்து, வன்னி மாவட்ட மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக, படித்த சமூகமும், இளைஞர் கூட்டமும், வியாபாரச் சமூகமும் இந்த ஏமாற்றும் சக்திகள் விடயத்தில் கூடிய அக்கறைகாட்ட வேண்டும். நியாயத்துக்கும், உண்மைக்கும், அபிவிருத்திக்கும், எதிர்கால சந்ததியின் நல்வாழ்வுக்கும், நிம்மதிக்கும் நாம் ஒன்றுபட்டு, தொலைபேசி சின்னத்தை ஆதரிப்பதே தற்போதைய அவசரத் தேவையாக மாறியுள்ளது.
பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமில்லாமல் நாம் வாழ வேண்டுமா? இந்த நாட்டிலே ஜனநாயகம் மீண்டும் தழைத்தோங்க வேண்டுமா? அராஜகம் ஒழிந்து சமத்துவமாகவும், சகோதர மனப்பாங்குடனும் நாம் இருக்க வேண்டுமா? என்பதை சிந்தித்து வாக்களிக்கும் தேர்தலே இது.
“எல்லா இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இனங்களுக்கிடையிலே பேதம் ஏற்படக் கூடாது. பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்ற பேதமின்றி, நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற சித்தாந்தத்திலும், அதன் வழியிலும் பயணிக்கும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலமே, நமக்கு விடிவு கிடைக்கும்.
மதங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் பிளவுகளை உருவாக்கி, அதன்மூலம் மக்களை தூரப்படுத்தி, அதிகாரத்தை தக்கவைக்கும் சிந்தனை மேலோங்கியுள்ளது. ‘நாடு என்ன கேடுகெட்டாலும் பரவாயில்லை, ஆட்சி அதிகாரம்தான் முக்கியம்’ என்ற நோக்கத்திலேதான், பெரும்பான்மைவாதிகளின் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், சிறுபான்மை மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. நாங்கள் செய்யாத தவறுகளுக்காக தண்டிக்கப்படுகின்றோம். எங்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அபாண்டங்களை சுமத்துகின்றனர். பழிவாங்கும் நோக்கிலே குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான, தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இவ்வாறான இக்கட்டான நிலையிலேயே, நாம் தேர்தலுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது
2009 ஆம் ஆண்டு, இறுதி யுத்தத்திலே முல்லைத்தீவிலிருந்தும், கிளிநொச்சியிலிருந்தும் அகதி மக்கள் அபலைகளாக, வெறுங்கையுடன், உடுத்த உடையுடன் ஓடிவந்த போது, அவர்களை அரவணைத்தோம். அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தோம். சொந்தமண்ணில் மீளக்குடியமர்த்தும் பணியையும் துரிதமாக மேற்கொண்டோம். போரினால் எல்லாமே அழிந்து கிடந்ததன. அதேபோன்று, வவுனியா வடக்கிலும், மடுப்பிரதேசத்திலும், மாந்தை, முசலி பிரதேசங்களிலும் இதே நிலைதான் காணப்பட்டது. எமக்கிருந்த அரசியல் அதிகாரத்தைக்கொண்டு, முல்லைத்தீவில், அவர்களது சொந்த மண்ணில் மீளக்குடியேற்றினோம். மிதிவெடிகள் எல்லாம் அகற்றப்பட்டு, உடைந்த சிதைவுகள் எல்லாம் துப்பரவாக்கப்பட்டு, இந்தப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, நிம்மதியுடன் வாழச் செய்தோம்.
‘வடக்கு அகதி மக்களின் வாழ்விலே, நாம் நிறையவே செய்திருக்கின்றோம்’ என்ற மன நிம்மதி எமக்கு இருக்கின்றது. எந்த பேதமையும் இல்லாமல். இனம், மதம் என்ற உணர்வுகளுக்கு அப்பால், மனிதாபிமானத்தை மனதிற்கொண்டு, இறைவனை முன்னிறுத்தி, அவனுக்குப் பயந்தவர்களாக, இந்தக் கடினமான பணியில் நாம் வெற்றிகண்டோம். இப்போது இந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவுபெற்ற அல்லது ஓரளவு நிறைவுபெற்ற பிரதேசங்களாக காட்சியளிப்பதில், எமக்கு பெரும்பங்குண்டு என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். நாம் எப்போதுமே மக்களின் துன்ப துயரங்கள், வறுமை ஆகியவற்றை மனதில்கொண்டு, அவர்களின் நல்வாழ்வுக்கு உழைத்திருக்கின்றோம். நாம் உங்களோடு வாழ்பவர்கள். உங்களுடன் பயணம் செய்பவர்கள். உங்களுக்காக எங்களை அர்ப்பணித்தவர்கள். தற்போதும் அதே உளத்தூய்மை கொண்டவர்கள். எனவே, எமது கரத்தைப் பலப்படுத்துங்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில், சஜித் பிரேமதாஸவுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் நீங்கள் வெளிக்காட்டியவர்கள். அதேபோன்று, இம்முறை சஜித்தை தலைவராகக் கொண்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை வழங்கி, சஜித் பிரேமதாஸவின் தலைமைக்கு அங்கீகாரம் வழங்குங்கள். இதன்மூலம் வளமான எதிர்காலம் நமக்கு ஏற்படும் என்பதை மனதில் இருத்துங்கள்” என்று தெரிவித்தார்.
Post a Comment