Header Ads



முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சீனா

சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

சீனா தொடர்பான வல்லுநர் அட்ரியன் ஜென்ஸ் எழுதி வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, இது குறித்து ஐக்கியநாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என சர்வதேச அழுத்தம் பிறந்துள்ளது.

ஏற்கனவே உய்குர் முஸ்லிம்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதற்காக சீனா பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

மறுகல்வி முகாம்கள் என்று அரசு அழைக்கிற இந்த முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 லட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டதையே சீனா மறுத்தது. ஆனால் ஜின்ஜியாங்கில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முகாம்களை அமைத்ததாக பிறகு ஒப்புக்கொண்டது.

இவ்வாறான கொடூர நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ சீனாவுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

''மனிதாபிமானமற்ற இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து நிற்கவேண்டும்'' என்றும் மைக் பாம்பேயோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு பிபிசி நடத்திய ஆய்வில், ஜின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது. முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்து பிரித்து குழந்தைகளை வளர்ப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் சீனாவில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வு அறிக்கை கூறுவது என்ன ?

அதிகாரபூர்வமாக உள்ளூரில் கிடைத்த தரவுகள் மற்றும் கொள்கை ஆவணங்களை அடிப்படையாக கொண்டே ஜென்ஸ் தனது அறிக்கையைத் தயாரித்துள்ளார். ஜின்ஜியாங்கில் உள்ள சிறுபான்மை இன பெண்களிடம் நேரடியாக பேசியும் சில தரவுகள் பெறப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழந்தை பெற அரசாங்கம் விதிகளை அறிவித்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மீறும் வகையில் பெண்கள் யாரேனும் கருவுற்றால், அவர்கள் கருவிலேயே குழந்தையை கொல்ல வற்புறுத்தப்படுகிறார்கள். கருவை கலைக்க மறுத்தால் அச்சுறுத்தப்படுவதாக முகாம்களில் உள்ள சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்களும் உய்குர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த பெண்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, கருவுற்ற பெண்கள் கருத்தடை செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் உய்குர் முஸ்லிம் பெண்கள் கூறுகின்றனர்.

இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீன அதிகாரிகளின் தலையீடு அதிகமாக இருப்பதை பல சாட்சியங்கள் உணர்த்துகின்றன. 2016ம் ஆண்டுக்கு பிறகு ஜின்ஜியாங்கில் காவல் துறையினரின் ஒடுக்குமுறையும் அதிகரித்திருந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையிலேயே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இரு பகுதிகளின் மக்கள் தொகை வளர்ச்சியில் 84% சரிவு காணப்படுகிறது என அட்ரியன் சேகரித்த தரவுகள் காட்டுகின்றன.

முஸ்லிம் குழந்தைகளை அவர்கள் குடும்பத்திடம் இருந்து பிரிக்கும் சீனா

சீனாவில் காணாமல் போகும் பல்லாயிரம் உய்கர் முஸ்லிம்களுக்கு என்ன நேர்கிறது?

உய்குர் இன மக்களை அடிமைப்படுத்தி, அதிகாரிகள் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த மக்கள் தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு நன்கு உணர்த்துகிறது என ஆசோசியேடட் பிரஸ் முகமைக்கு அளித்த பேட்டியில் ஜென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜின்ஜியாங்கில் இதற்கு முன்பு தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் சிலர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளால் தங்களின் மாதவிடாய் நின்றுபோனதாகத் தெரிவிக்கின்றனர். தாங்கள் உட்கொண்ட கருத்தடை மருந்துகளால், எதிர்பாராத நேரங்களில் உதிரப் போக்கு ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

''மூன்று குழந்தைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த பெரும்பாலான பெண்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது'' என ஆய்வறிக்கை கூறுகிறது.

ஐ.நா. விசாரிக்க வேண்டும்

ஜின்ஜியாங்கில் தற்போது உள்ள நிலை குறித்து பாரபட்சமின்றி, சர்வதேச அளவில் விசாரணை நடத்த ஐ.நா. முன்வர வேண்டும் என பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் லைன் டுன்கென் ஸ்மித், பரோநெஸ் ஹெலனா கென்னடி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் அழைப்புவிடுத்துள்ளனர்.

உய்குர் முஸ்லிம்களின் கலாசார மையங்கள், இடுகாடுகள் தகர்க்கப்படுவது குறித்தும் சட்டவிரோத தடுப்பு காவல் குறித்தும், உய்குர் தொழிலாளர்கள் அடிமைப்படுத்தப்படுவது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

''உய்குர் முஸ்லிம்களுக்கு இவ்வாறு பல கொடுமைகள் நடப்பதை பார்த்துக்கொண்டு இந்த உலகம் அமைதியாக இருக்கக்கூடாது. தேசிய அளவில் இனம், மதம் என எதன் அடிப்படையிலும் மக்கள் துன்புறுத்தப்படுவதை அமைதியாகப் பார்க்க முடியாது, அவற்றைத் தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்''

சீனாவில் பிறந்த குள்னர் ஓமிர்சாக் என்ற கஜக் இனத்தவர் தனது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்த பிறகு கருத்தடை சாதனத்தை பொருத்திக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டது. இரண்டாண்டுகள் கழித்து 2018 ஜனவரியில் ராணுவ சீருடையில் இருந்த நான்கு அதிகாரிகள் ஒமிர்சாக் வீட்டின் கதவைத் தட்டி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டதற்கு அபராதமாக இரண்டு நாளில் 1.75 லட்சம் யுவான் பணம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்தனர். முகாமில் அடைக்கப்பட்ட காய்கரி வியாபாரியின் மனைவியான அவர் பரம ஏழை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணத்தை செலுத்தமுடியாவிட்டால் நன்னடத்தை முகாமில் அவரது கணவரோடு சேர்ந்து அடைக்கப்படலாம் என்று அவர் எச்சரிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

''குழந்தைகளை பெற்றெடுக்க கடவுள் வரம் அருள்கிறார். அதனை மனிதர்கள் தடுப்பது தவறு'' என ஏ.பி செய்தி முகமையிடம் பேசிய ஓமிர்சாக் கூறுகிறார். அவர்கள் எங்கள் இனத்தையே அழிக்க முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமின்றி, அரசியல் உள்நோக்கங்களுடன் முன்வைக்கப்படுகிறது என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஜின்ஜியாங் விவகாரத்தில் தவறான தகவல்களை ஊடகங்கள் முன்வைக்கின்றன என சீன வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயோ லிஜியன் ஊடகங்களை குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவில் ஒரே ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதற்கான கொள்கை முடிவு பல தசாப்தங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் நகரத்தில் வசிக்கும் பல சிறுபான்மையினர் இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மூன்று குழந்தைகள் கூட சிலர் பெற்றுள்ளனர். 2017ம் ஆண்டு அதிபர் ஷி ஜின் பிங் இன வேறுபாட்டை நீக்கி, ஹான் சீனர்களும் சிறுபான்மையினரை போல பல குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளித்தார்.

''கட்டாய பிறப்பு கட்டுப்பாடு மற்றும் கருத்தடை கட்டுப்பாடுகள், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை முயற்சியின் ஒரு அங்கம்'' என்றே ஜென்சின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

No comments

Powered by Blogger.