புவனேகபாகுவின் அரச சபையை, உடைத்தவர்களை தண்டியுங்கள்- : அஸ்கிரிய பீடம்
(எம்.மனோசித்ரா)
குருணாகல் மாவட்டத்தில் காணப்பட்ட புவனேகபாகு மன்னனுடைய அரச சபை வரலாற்று முக்கியத்துவமுடைய ஒரு கட்டடமாகும்.
இவ்வாறானவை பேணி பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்களாகும். எனவே இந்த கட்டடத்தை உடைத்ததன் பின்னணியில் யார் செயற்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.
குறித்த கட்டடம் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் நிலைப்பாட்டை வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
புவனேகபாகு மன்னனுடைய அரச சபையானாலும் வேறு கட்டடமானாலும் அவை வரலாற்று முக்கியத்துவமுடையவை என்றால் பேணி பாதுகாப்பது அத்தியாவசியமானதாகும்.
இது ஆளுங்கட்சியினதோ அல்லது எதிர்க்கட்சியினதோ ஒரு சாராருடன் தொடர்புடைய பிரச்சினையும் அல்ல. எவ்வித கட்சி பேதமும் இன்றி இவ்வாறான செயற்பாடுகளின் போது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதன் பின்னணியில் அரசியல்வாதிகளோ அல்லது வேறு யார் காணப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு 23 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் அந்த குழுவின் அறிக்கையையே எதிர்பார்த்துள்ளோம். அதில் உண்மைகள் வெளிப்படுத்தப்படுமாயின் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைக்கப்படுவதற்கு முன்னர் இந்த கட்டடத்தில் ஹோட்டலொன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அது உண்மையானால் அது மிகப் பெரும் தவறாகும்.
எனவே இதனை மீள் நிர்மாணித்து பேணி பாதுகாக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
Post a Comment