Header Ads



பல்டி அடித்தார் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வதில் முக கவசம், உயிர் கவசமாக மாறி இருக்கிறது. தடுப்பூசி கண்டுபிடித்து சந்தைக்கு வரும் வரையில் இந்த முக கவசம்தான் கொரோனாவுக்கு எதிரான உயிர் கவசமாக தொடரவும் போகிறது என்பது நிஜம்.

உலகமெங்கும் 1 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 5 லட்சத்து 16 ஆயிரத்து 725 பேர் உயிரிழக்க... இந்த பட்டியலில் நாமும் சேர்ந்து கொள்ளாதிருக்க இந்த முக கவசம், அத்தியாவசியமாகி இருக்கிறது.

ஆனால் இந்த முக கவசம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தபோதுகூட, நான் அதைச் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தவர் இந்த டிரம்ப்.

அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இன்னும் வேடிக்கை. உலக தலைவர்கள் அத்தனைபேரும் முக கவசங்களுடன் இப்போது பொது வெளியில் வாடிக்கையாகிப்போனாலும், “நான் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நினைக்கவில்லை. முக கவசம் அணிந்து பல நாட்டு அதிபர்களையும், பிரதமர்களையும், சர்வாதிகாரிகளையும், மன்னர்களையும், ராணிகளையும் நான் எப்படி சந்தித்து பேசுவது?” என்று கேட்டார் டிரம்ப்.

ஆனால அவரது மகளும், ஆலோசகருமான இவான்கா டிரம்ப்கூட ஒரு பெண்ணாக இருந்தும் எந்த தயக்கமும் இன்றி முக கவசத்தை அணிந்து கொண்டு பொதுவெளியில் வலம் வருகிறார்.

கடந்த வாரம் அமெரிக்காவில் ஏபிசி நியூசும், இப்சோசும் நடத்திய ஒரு சர்வேயில், 89 சதவீத மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் தாங்கள் முக கவசம் அணிந்துகொள்வதாக கூறி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அங்கு முக கவசத்துக்கு வரவேற்பு கூடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் டிரம்ப் அணிவதில்லை. அவரது கட்சி தலைவர்களான துணை அதிபர் மைக் பென்ஸ், செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல், மூத்த எம்.பி. மிட் ரோம்னி, பெண் எம்.பி. லிஸ் செனே உள்ளிட்ட பலரும் முக கவசம் அணிவதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

டிரம்ப் முக கவசம் அணியாதது எதிர்க்கட்சியில் மட்டுமின்றி ஆளுங்கட்சியிலும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசு கட்சி எம்.பி. லாமர் அலெக்சாண்டர், “ முக கவசம் என்னும் இந்த எளிய உயிர்காக்கும் நடைமுறை ஒரு அரசியல் விவாதத்தின் பகுதியாக மாறி விட்டது” என வருத்தம் வெளியிட்டார். இந்த நிலையில் ஒரு வழியாக முக கவசத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் டிரம்ப் என்று சொல்வதா அல்லது குரல் கொடுக்க வைத்திருக்கிறது கொரோனா என்று சொல்வதா?

ஏனென்றால் நேற்று முன்தினம் அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி டிரம்பை உலுக்கி இருக்கிறது.

இதையொட்டி பாக்ஸ் நியூசுக்கு பேட்டி அளித்தபோது டிரம்ப் கூறி இருக்கிறார். “அனைவரும் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். இதற்கு நான் ஆதரவானவன்” என்று.

டிரம்ப் முக கவசத்துக்கு ஆதரவாக பேசியதை கண்டு அதிர்ந்து போய் அடுத்த கேள்வியை கேட்டார்கள். “அது சரி, நீங்கள் முக கவசம் அணிவீர்களா?” என்று.

அதற்கு டிரம்ப் “நான் அப்படி மக்களோடு ஒரு நெருக்கடியான தருணத்தில் இருந்தால், நிச்சயமாக அணிவேன். பொதுவெளியில் முக கவசம் அணிவதில் எனக்கு பிரச்சினை இல்லை. நான் ஒரு முறை முக கவசம் அணிந்ததை மக்கள் பார்த்திருக்கிறார்கள்” என பதில் அளித்தார்.

கடந்த மே மாதம் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள போர்டு கார் தொழிற்சாலையை பார்வையிட சென்றிருந்தபோது சிறிது நேரம் முக கவசம் அணிந்திருந்ததும், ஆனால் அதைத் தொடர்ந்து பேட்டி கொடுக்க வந்தபோது முக கவசத்தை அகற்றிவிட்டதும் நினைவுகூரத்தக்கது.

இதுவரை முக கவசத்துக்கு எதிராக குரல் கொடுத்து வந்த டிரம்ப், இப்போது ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அடுத்து அவரே முக கவசம் அணிந்து காட்சி தரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கிசுகிசுக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

No comments

Powered by Blogger.