தொழிற் பயிற்சி நிலையங்களின், கற்பித்தல் செயற்பாடுகள் 6ஆம் திகதி ஆரம்பம்
(ஏ.எல்.நிப்றாஸ்)
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழியங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கற்பித்தல் நடவடிக்கைகளை சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அடுத்த வாரத்திலிருந்து மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் 6ஆம் திகதியிலிருந்து பயிற்சி வழங்கல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பி.நளீம் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார சுதேச வைத்திய அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல் குறிப்புக்கள் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையின் அறுவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமைய பயிற்சி நிலையங்களை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ்; அச்சுறுத்தலையடுத்து மார்ச் 16ஆம் திகதியிலிருந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதுடன் கற்பித்தல் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதன்பின்னர் முதற்கட்டமாக கல்விசாரா உத்தியோகத்தர்களும் பின்னர் கல்விசார் உத்தியோகத்தர்களும் பணிக்கு அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அம்பாறை மாவட்டத்தின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சுகாதார நடைமுறைகளின் கீழ் எதிர்வரும் திங்கட் கிழமையில் இருந்து பயிற்சி நெறிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
பயிலுனர்களை மீண்டும் அழைத்து பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான சுகாதார முன்னேற்பாடுகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பெற்றோர்களுக்கும் இவ்விடயம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை (3) இடம்பெறவுள்ளன.
Post a Comment