கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் - 2 சிறுபான்மையினரை இணைக்க ஜனாதிபதி இணக்கம்
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து குறித்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவர் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஜனாதிபதி செயலணியில் இரண்டு பௌத்த மதகுருமார்கள், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி, பேராசிரியர்கள், தொல்பொருள் ஆணையாளர் நாயகம், நில அளவையாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் அங்கம் பெற்றிருந்தனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் காணப்படும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை பாதுகாத்தல் மற்றும் மீள் நிர்மாணம் செய்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றுதல், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் காணப்படும் நிலங்களை அளவீடு செய்து, அவற்றை சட்ட ரீதியிலான இடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இந்த செயலணி முன்னெடுக்கவிருந்தது.
எனினும், குறித்த செயலணியில் சிறுபான்மையினர் எவரும் உள்ளடக்கபடாமல் இருந்தமைக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், தற்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
Post a Comment