Header Ads



பொதுஜன பெரமுனவுக்கு 150 ஆசனங்கள் கிடைக்கும் - மகிந்தானந்த

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பெறும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியும் படுதோல்வியை சந்திக்கும் எனவும் முன்னாள் ராஜாங்க அமைச்சரும் கண்டி மாவட்ட வேட்பாளருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலானது இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான தேர்தல் என நான் நினைக்கின்றேன். ஒரு கட்சி அதிகளவான வாக்குகளை பெறும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.

ஜனாதிபதியும் பிரதமரும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு அரசியல் பேதமின்றி ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு நாட்டில் இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியினரில் பலர் தற்போது ஜனாதிபதியை ஆதரிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. ரணில் தனியாக தேர்தலில் போட்டியிடுகிறார். சஜித் தனியாக போட்டியிடுகிறார். அந்த கட்சியினர் வெறுப்படைந்துள்ளனர்.

ஐந்தாண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது எனினும் எதனையும் செய்யவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எதனையும் செய்யவில்லை.

தலைவர் பதவிக்கு உள்ள பேராசையில் சஜித் கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தி தனிக் கட்சியை ஆரம்பித்தார். கட்சியினரை பாதுகாத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தவாறு சஜித் போட்டியிட்டிருக்கலாம்.

சஜித் பிரேமதாசவே ஐக்கிய தேசியக் கட்சியின் மீது வெறுப்பை ஏற்படுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியினர் தற்போது வாக்களிக்க ரணிலும் இல்லை சஜித்தும் இல்லை. அவர்கள் யானைக்கோ, தொலைபேசிக்கோ வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் தாமரை மொட்டுச் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாசவுடன் இருந்த தமிழ், முஸ்லிம் மக்கள் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்துள்ளனர்.

இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை கைப்பற்றும். இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியும் படுதோல்வியடையும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.