Header Ads



மத்திய கிழக்கு சிறைகளில் உள்ள 1,500 இலங்கையர்களை, விடுவிக்க அந்தந்த நாடுகள் இணக்கம்


மத்திய கிழக்கு நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள 1,500 இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சில காரணங்களுக்காக இலங்கையர்கள் சிறைத்தண்டனை அனுபவித்துவருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சிறைத்தண்டனை அனுபவித்து வருவோரை விரைவில் விடுவித்து சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்ப மத்திய கிழக்கு நாடுகளினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு விடுவிக்கப்படும் கைதிகளுக்கு அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த நாடுகளின் அரசாங்கங்களினூடாக விமான பயணச்சீட்டுக்களை பெற்றுக் கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு முன்னர், அவர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகளின் போது COVID – 19 தொற்று உறுதிப்படுத்தப்படாதவர்களை மாத்திரம் நாட்டுக்கு திருப்பியனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளினால் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.