துல்ஹஜ் முதல் 10 நாட்கள் (ஈமானிய வலுவூட்டலுக்கான ஒரு காலப்பகுதி)
قال تعالى: (والفجر * وليال عشر)
(வைகறையின் மீது சத்தியமாக, பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!) அல்-பஜ்ர் 1-2
இவ்வசனங்கள் துல்ஹஜ் முதல் பத்து நாட்களையே குறிக்கின்றன என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
இஸ்லாம் மனித நேயமிக்க ஒரு மார்க்கமாகும். அதனால் இறைநேசர்களின் இலக்கு மாறாப் பயணத்தில் அடைவின் பெறுமானங்களை அவ்வப்போது உணர்திச் செல்வது அதன் தனிச் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மேலும் வாழ்க்கைப் பயணத்தின் இடையிடையே ஒவொரு 'ஈமானிய வலுவூட்டல் மையங்கள்', 'ஆன்மீக திறனாக்க தொழிற்பாடுகள்', 'பாவ மீட்சிக்கான கால நிர்ணயங்கள்' என பல நிலைகள் மற்றும் தருணங்களை இஸ்லாம் எமக்கு வகுத்து தந்துள்ளது.
தவறுகள், மறதிகள் நம்மை மாறிமாறி பந்தாடுகின்றன. பாவங்கள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எம்மோடு சேர்ந்தே பயணிக்கிறன. எனவே Service Centers and Recharge Points களை தேடிச் சென்றேயாக வேண்டும்.
ஏலவே குறிப்பிட்ட தேவையினை நிவர்த்தி செய்ய, தன்னியக்க தொழிற்பாட்டினூடாக சுய விரித்திக்கான காலப்பகுதிக்குள் நாம் பிறவேசித்துக் கொண்டிருக்கிறோம். அக்காலப் பகுதியினை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். அதுதான் துல் ஹஜ் முதல் பத்து நாட்கள்.
இக்காலப்பகுதியில் ஒரு முஃமின் எவ்வாறான ஈமானிய விரித்திக்கான முதலீடுகளை மேற்கொள்வது என்பது பற்றி நோக்க முன் இறுதிக்கடமை ஹஜ்ஜின் இலக்குகள் பற்றி சிறிது கவணம் செலுத்துவது தலைப்பை இலபடுத்தும்.
'ஹஜ்' எனும் வணக்க வழிபாடு பன்முக ஆக்கத்திறன் கொண்ட ஒரு தொழிற்பாட்டு குவியம். அதன் அடைவுப் பெறுமானங்களும், இலக்குகளும் நன்கு கவணிக்க வேண்டியவைகளாகும்.
பின்வரும் பயிற்சிகளை *ஹஜ்* எமக்கு வழங்குகின்றன:
1. இஹ்றாம் - மறுமைப் பயணத்திற்கான ஆரம்ப நிலையை உணர்த்துதல்.
2. மஹ்ஷரில் மனிதர்களின் ஒன்று கூடலை ஞாபமூட்டல்.
3. சுய போராட்டம் மற்றும் கஷ்டங்களை எதிர் கொள்ளும் திறன் விரித்தியை வளர்த்தல்.
4. சுயகட்டுப்பாடு மற்றும் சுய மேலான்மையை ஊக்குவித்தல்.
5. சமூக ஒறுமைப்பாடும் வலுவூட்டலும் கட்டியெழுப்பப்படல்.
6. இலக்கு மாறாப் பயணத்திற்கான ஒருமைப்பாட்டு முறைமை உணர்த்துதல்.
7. அறிமுகம் மற்றும் தொடர்பாடலை ஏற்படுத்துதல்.
8. வணக்க வழிபாடுகளில் பகுத்தறிவை நுழைக்காமை.
என பல்கோண தகமையூட்டலை ஹஜ் கிரியை புரிகிறது.
பாவ மீட்சிக்கான மிகச் சிறந்ததொரு காலத் தொகுதியாக துல்ஹஜ் முதல் பத்து நாட்களும், ஹஜ் கிரியையும் காணப்படுகிறன.
"مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ".
“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1521)
இப்படியான நபி மொழிகள் வணக்க வழிபாடுகளின் நோக்கம், இலக்கு மற்றும் அடைவுப் பெருமானங்கள் பற்றி பேசுகின்றன.
எனவே, ஈமானின் ஸ்திரத்தன்மையை வலுவூட்ட, அதன் அழுக்குகள் மற்றும் கறைகளை போக்கி பரிசுத்தப்படுத்தவல்ல இக்காலப்பகுதியில் எவ்வாறு அதி உச்ச பயனடைவது என்பது பற்றி யோசிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம்?
1. உண்மையான தௌபா.
"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் பாவ மீட்சி பெறுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்!" - அல் நூர் -31
2. இந்நாட்களின் பலனை அடைந்து கொள்வதற்காக திடசங்கற்பம் பூணுதல்.
"நம் விஷயத்தில் உழைப்போருக்கு, நமது வழிகளைக் காட்டுவோம்". - அல் அன்கபூத் 69
3. பாவங்களை விட்டும் தூரமாதல்.
# துல்ஹஜ் முதல் பத்தின் சிறப்புகள்:
1. அல்லாஹ் குறிப்பிட்ட அந்த 10 இரவுகளில் சத்தியம் செய்துள்ளான்.
قال تعالى: (والفجر * وليال عشر)
(வைகறையின் மீது சத்தியமாக, பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!) அல்-பஜ்ர் 12
இங்கு அல்லாஹ் சத்தியம் செய்து கண்ணியப் படுத்தியுள்ள “இரவுகள்” என்பது துல் ஹஜ் மாத்தின் முதல் பத்து இரவுகளே என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
2. அறியப்பட்ட குறித்த அத்தினங்களில் திக்ர் செய்வதனை மார்க்கம் அடையாறப்படுத்தியுள்ளது.
قوله تعالى: (ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم) الحج 28
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்). அல்ஹாஜ் - 28
3. உலக தினங்களில் மிகச் சிறந்ததாக நாட்களென நபிகளாரின் வாக்குமூலம்:
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: துல்ஹஜ் முதல் 10 நாட்களில் செய்யக்கூடிய நல்லமல்கள் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவையாகும். வேறு எந்தநாட்களில் செய்யும் நல்லமல்ளும் அதற்கு ஈடாகமாட்டாது. அப்போது அல்லாஹ்வின் தூதரே இறைபாதையில் போராடுவதைவிடவுமா? என நபித் தோழர்கள் கேட்டார்கள். ஆம் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதைவிடவும் அந்தநாட்களில் செய்யும் அமல்கள் எனக்கு மிகவும் விருப்பமானது. ஆனால் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் போராடப் புறப்பட்டு, தன் பொருளையும் உயிரையும் இழந்து ‘ஹீதான அந்த மனிதனைத் தவிர என ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் புகாரி.
4. இத்தினங்களில்தான் அறபா தினமும் காணப்படுகின்றன.
"ஹஜ் என்றாலே அறபாவில் தரிப்பதுதான்" என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
5. இத்தினங்களில் தான் அறுத்துப் பலியிடும் நாளும் காணப்படுகிறன.
"நாட்களில் மிக மகத்துவமிக்க நாள் அறுத்துப் பலியிடும் தினம் தான்" என நபியவர்கள் கூறினார்கள்.
6. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களும் மிகவும் மகத்தானது என சிலாகித்து கூறப்பட்டிருப்பதன் காரணம், அந்த நாட்களில் தீனுல் இஸ்லாத்தின் பிரதான வணக்கவழிபாடுகள் யாவும் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதாகும். தொழுகை, நோன்பு, ஹஜ், தர்மம், ஆகிய யாவும் இந்த நாட்களில் முக்கிய அமல்களாக நிறைவேற்றப்படுகின்றன. இந்தநிலை வேறு எந்த நாட்களிலும் சாத்தியப்படமாட்டாது.
இந்த பத்து நாட்களில் செய்ய முடியுமான சிறப்பான இபாதத்கள் சில:
1. தக்பீர் சொல்லுதல்.
இப்னுஉமர் (ரழி) அவர்களும் அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் இந் நாட்களில் கடைவீதிக்கு போகும் போது தக்பீர் சொல்லுவார்கள். இவ்விருவரும் எழுப்பும் தக்பீரோசை கேட்டு அங்குள்ள மக்களும் தக்பீர் முழங்குவார்கள்.
உமர் (ரழி) அவர்கள் மினாவில் கழிக்கின்ற நாட்களிலும், வீதிகளிலும், கூடாரங்களிலும் சப்தத்தை உயர்த்தி தக்பீர் சொல்லுவார்கள். அந்த தக்பீர் முழக்கத்தால் மினாவெங்கும் அதிர்ந்துபோய் நிற்கும்.
அறபா நாளின் சுபஹ் தொழுகையிலிருந்து துல்ஹஜ் பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரையான காலப்பகுதியில் ஐங்காலத் தொழுகைக்குப் பின் தக்பீர்சொல்லுவது சுன்னத்தான அமலாகும்.
2. அறபா நோன்பு.
அறாபா தினத்தன்று நோன்பு நோற்பது மிக முக்கியமான சுன்னாவாகும். “அறபா நோன்பு அதற்கு முந்திய ஆண்டின் பாவங்களுக்கும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களுக்கும் குற்றப்பரிகாரமாக அமையும் என நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கின்றேன்” என ரஸுல் (ஸல்) கூறிய செய்தி ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
3. உழ்ஹிய்யா கொடுத்தல்.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியதன் பின்னர் செய்யவேண்டிய கட்டாய சுன்னாத்தாக உழ்ஹிய்யா கொடுப்பது அமைந்துள்ளது. 10ம் நாளான பெருநாள் தினத்திலும் தொடர்ந்து வரும் 11,12,13 ஆகிய மூன்று நாட்களிலும் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கே உழ்ஹிய்யா (குர்பான்) எனப்படும். ரஸுல் (ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை குர்பான் கொடுத்தார்கள் என்ற ஹதீஸ் ஸஹீஹுல் புகாரயில் பதிவாகியுள்ளது. “வசதி வாய்ப்பு இருந்தும் யார் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் எமது தொழுகை நடக்குமிடத்துக்கு நெருங்கவும் வேண்டாம்.” என ரஸுல் ( ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் அஹ்மத்).
4. பாவமன்னிப்பு கேட்டல்.
ரஸுல் ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே பாவமன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறேன்.” (முஸ்லிம்)
5. ஸதகா கொடுத்தல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஸதகாவானது செல்வத்தில் எந்தக் குறையையும் ஏற்படுத்தமாட்டாது". (முஸ்லிம்)
ஏலவே குறிப்பிட்டவைகள் சில உதாரணங்கள் மட்டுமே. எனவே இது போன்ற நல்லமல்களில் அதீத கவனம் செலுத்தி உச்ச பயனடைய முனைவதுதான் புத்திசாலித்தனமாகும்.
அல்லாஹ் நம்மனைவருக்கும் இக்காலப்பகுதியின் சிறப்புகளை முழுமையாகத் தந்தருள்வானாக!
Post a Comment