மக்களால் இடப்பட்ட சாபமே, UNP இன் இன்றைய பிளவு - ஜோன்ஸ்டன்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியான ‘பொதுஜன பெரமுன கூட்டணிக்கு’ அமோகமான வெற்றியை மக்கள் பெற்றுத் தருவார்கள் என்று நம்புவதாக வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுக,கப்பல் சேவைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகிறார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கூட்டணிக்கு கிடைக்கும்’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எமக்கு வழங்கிய பேட்டியின் போதே இவ்வாறு கூறினார்.
கேள்வி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்த கருத்து அரசாங்க தரப்பினரின் அக்கறையை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் இருந்து எழுத்து மூல அறிக்கை வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுகிறது. இது பற்றி கருத்துக் கூறுவீர்களா?
பதில்: முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையையே இது காட்டுகிறது. அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதாக உலகுக்கு காட்டிக் கொண்டனர். தேர்தல் ஆணைக்குழு முற்றிலும் சுதந்திரமானது என்று காட்டிக் கொள்ள ஆணைக்குழுவுக்கு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சிலரை நியமித்தனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட சிலர் ஆட்டுத் தோலைப் போர்த்திய நரிகள். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூலும் அவ்வாறான ஒருவர். முற்றிலும் சுதந்திரமானது என்று அவர்கள் கூறிய ஆணைக்குழுக்களில் நம்பகத்தன்மை இல்லையென்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஹூலின் சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக தேர்தல் ஆணைக்குழு அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. நல்லாட்சி காலத்தில் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவையும் பக்கச்சார்பாகவே செயற்பட்டன. நாட்டில் சுதந்திர ஆணைக்குழுக்கள் இல்லாத காலத்தில் கூட இது போன்ற விடயங்கள் நடைபெறவில்லை. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் திருத்தி அமைக்க வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலே அதற்கு உரிய களமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிக அளவில் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் நாம் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைக்க முடியும். அனைத்து பதவிகளுக்கும் தகுதி வாய்ந்தவர்களை நியமித்து நாட்டை காட்டிக் கொடுப்போரின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர இது வழிவகுக்கும்.தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஹூலை நியமிக்கும் விடயத்தில் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் அங்கீகாரம் வழங்கியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி நட்புறவுடனான அரசாங்கம் நான்கரை வருடங்களாக ஆட்சி நடத்தியது. ஜே.வி.பியினருக்கு பதவிகள் கிடைக்கவில்லை. ஆனால் பணமும் வேறு சலுகைகளும் கிடைத்தன.
கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு காட்டியதுடம் கோஷங்களையும் எழுப்பின. ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெறும் உட்கட்சிப் பூசல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் எதிரான சாபம் என்றே இது தோன்றுகின்றது. இதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சி இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. அதேநேரம் ஜே.வி.பி.க்கும் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலில் ஐ.தே.க மோசமாகத் தோற்றது. அவர்கள் தாய்நாட்டை காட்டிக் கொடுத்ததுடன் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பெரும் தியாகத்தைச் செய்த யுத்த வீரர்களை கைது செய்தனர். அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரையும் கூட பழிவாங்கியது. தமது அரசியல் எதிரிகள் மீது பொய்க் குற்றங்களைச் சுமத்தி அவர்களை சிறையிலடைத்தனர். அவர்கள் பல பிரிவுகளாக பிளவுபடுவதற்கு அவர்கள் மீது போடப்பட்ட சாபம்தான் காரணமாகும். நாட்டுக்கு அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு அவர்கள் மீதே திரும்பியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த 5.5 மில்லியன் வாக்குகள் என்னவாகப் போகின்றன என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் பார்க்க முடியும்.
கேள்வி: ஐக்கிய மக்கள் சக்தியின் 99 பேர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமை ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை தெளிவாகக் காட்டுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த பிளவு அவர்களது வாக்கு வங்கியைப் பாதிக்குமா?
பதில்: இந்த நிலைமை ஏற்பட சஜித் பிரேமதாசவே முழுக் காரணம். ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கும் திட்டத்தின் பிரதான சூத்திரதாரி அவர்தான். ஜனாதிபதி வேட்பாளர் பதவியை அவர் பலவந்தமாகவே பெற்றுக் கொண்டார். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் அவர் படுதோல்வியடைந்தார். அவர் தந்திரமான அரசியல்வாதியாக இருந்திருந்தால் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் இணக்கம் தெரிவித்திருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ பரந்து பட்ட பொதுஜன முன்னணி கூட்டணியுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. 10 முதல் 15 வருடங்களுக்கு அதிகாரத்தில் இருக்க ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியது. ஆனால் நான்கரை வருடங்களில் வெளியேற நேர்ந்தது. சஜித் பிரேமதாசவின் செயல்கள் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி அழிவுக்கு உள்ளானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற கனவு கண்ட சம்பிக ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரின் விருப்பத்தின்படியே சஜித் செயற்பட்டார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். நாட்டை காட்டிக் கொடுத்து அழிவுக்கு உள்ளாக்கியவர்கள் இத்தகைய விளைவுகளை எதிர்நோக்கத்தான் வேண்டும்.
கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரச நிறுவனங்களின் தலைவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் பொதுச்சொத்து, நிதி மற்றும் அரச வாகனங்களை தேர்தல் வேலைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளாரே...
பதில்: அது மெச்சத்தக்க தீர்மானமாகும். நாட்டுக்காக எப்போதும் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பதுண்டு. இதுவும் அதுபோன்றதொரு தீர்மானம்தான். அதேநேரம் கொவிட் 19 வைரஸ் தொற்றில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் தீர்மானங்களையும் ஜனாதிபதி எடுத்திருக்கிறார்.
கேள்வி: பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மாற்றப்பட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே இதனை மாற்ற வேண்டும் என்று நாம் கூறினோம். இல்லாவிட்டால் இது நாட்டின் ஸ்திரமற்ற நிலையை தோற்றுவிக்கும்.
கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் ஜனாதிபதிக்கே வாக்களித்தனர். அதே போல் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லிம்களும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மேற்படி நடைமுறையில் மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் தேர்தலொன்றில் வெற்றி பெற முடியாது என்ற கருத்தே முன்னர் மக்களின் மனங்களில் இருந்து வந்தது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாசவை 1.4 மில்லியன் வாக்குகளால் தோற்கடித்தார். இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய வாக்குகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்தன. அதேநேரம் ஜனாதிபதிக்கு சிறுபான்மையினரின் வாக்குகளும் கிடைத்திருந்தன. எனவே நாட்டை நேசிப்போர் எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துக்கே வாக்களிப்பார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவது அரசாங்கத்துக்கு கஷ்டமாக இருக்காது.
கேள்வி: ஓய்வபெற்ற இராணுவ அதிகாரிகள் நாட்டின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதையடுத்து நாடு இராணுவமயத்தை நோக்கிச் செல்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனரே?
பதில்: முன்னாள் இராணுவ அதிகாரியும் அமெரிக்கப் பிரஜையுமான ஒருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்னர் கூறி வந்தனர். ஜனாதிபதிக்கு எதிராக முடிந்தவரை சேறுபூச அவர்கள் முற்பட்டனர். எனினும் 6.9 மில்லியன் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் இதனால் அவர் 1.4 மில்லியன் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில் அரசாங்கத்தின் ஒருசில உயர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதனையே இராணுவமயப்படுத்தல் என்று கூறி மக்களிடையே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். முன்னாள் இராணுவ அதிகாரிகள் இதற்கு முன்னர் அரசாங்க பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லையா என்று நாம் கேட்க விரும்புகிறோம். இது போன்ற பதவிகள் இதற்கு முன்னரும் வழங்கப்பட்டுள்ளன. ஏன், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக போட்டியிட்டாரே?
கேள்வி: ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை தற்போதைய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நாம் ஜனநாயக முறையிலான ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளோம். சம்பவம் தொடர்பான புதிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜனநாயக நடைமுறையின்படியே நாம் இந்த விசாரணைகளை நடத்தி வருகிறோம். நல்லாட்சி அரசாங்கம் செய்ததைப் போல வெறும் அனுமானங்களை வைத்து மக்களை கைது செய்யும் நோக்கம் எமக்கில்லை. அப்போது முறையான விசாரணை நடைபெறவில்லை. முன்னைய ஆட்சியின் போது ஈஸ்டர் சம்பவத்தில் மக்கள் கொல்லப்பட்டதும் சிரித்துக் கொண்டிருந்த சில அரசியல்வாதிகளும் இருந்தனர். அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கூறியது என்ன? ஈஸ்டர் தின குண்டு தாக்குதலில் இந்தளவு மக்கள் உயிரிழப்பார்கள் என்று நினைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தாரே.. முன்னாள் அரசாங்கம் நியமித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பிரதான உறுப்பினர்களாக இருந்த சிலரே ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தார்கள். ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான அனைவரையும் நாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம்.
கேள்வி: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருட அரசியல் சேவை மற்றும் அவர் நாட்டுக்கு வழங்கிய துடிப்பான தலைமைத்துவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, மக்களை கவர்ந்திழுக்கும் ஒரு தலைவர் அவர். அவரைப் போன்ற ஒரு தலைவரை இந்த உலகின் எந்தவொரு நாட்டிலும் நாம் கண்டதில்லை. 2015 இல் ஏற்பட்ட தேர்தல் தோல்வியின் பின்னர் இரண்டு மாதங்கள் என்று குறுகிய காலத்தில் அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பியவர். அவர் மிகுந்த அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்து அவர்களைத் தோற்கடித்தவர். தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் அவர் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் போல் வேறு எந்த அரசியல் தலைவரும் இதுவரை பெற்றதில்லை. முன்னாள் ஜனாதிபதியாகவும் தற்போதைய பிரதமராகவும் உள்ள அவரின் கீழ் பணியாற்றக் கிடைத்தமை எமது அதிர்ஷ்டமாகும். நாட்டையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பிய தலைவர் அவர்.சிங்கப்பூரின் பிரதமரான லீ க்வான் யூவ்வின் திறமை மற்றும் வல்லமையைக் கொண்ட தலைவர் ஒருவர் இலங்கையிலும் இருக்கிறார். அவர்தான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.
Post a Comment