UNP ஆட்சியில் இருந்திருந்தால் பௌத்த, பிக்குமார் காவியை தூக்கிக்கொண்டு வீதியில் இறங்கியிருப்பர்
நாட்டில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அணியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருக்குமாயின் பௌத்த பிக்குகள் தமது காவியை தூக்கிக்கொண்டு நடு வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தி மகஜரை கையளித்து, உண்ணாவிரதம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்பை கிளப்பி இருப்பார்கள் என முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எனினும் தற்போது காணப்படும் நிலைமையில் பௌத்த பிக்குனகள் அமைதியாக இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் தனிமைப்படுத்த சட்டத்தை கவனத்தில் கொள்ளாது, அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் PCR பரிசோதனை செய்துக்கொள்ள மறுத்து தனது ராஜதந்திர சிறப்புரிமைகளை பயன்படுத்தி நாட்டுக்குள் வந்தமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே விஜித் விஜயமுனி சொய்சா இதனை குறிப்பிட்டுள்ளார்.
எம்.சீ.சீ உடன்படிக்கை தொடர்பான விடயங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட போகிறார்கள் எனக் கூறி மிகப் பெரிய பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது எம்.சீ.சீ உடன்படிக்கை 70 வீதம் சிறந்தது எனக் கூறுகின்றனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ததாக கூறினர்கள். அதனை திரும்ப பெற்றனரா?. எனினும் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகரத்தை நாங்கள் 99 ஆண்டு குத்தகையாக மாற்றினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது கடலுக்கு அப்பால் உள்ள முனையத்தையும் வழங்கி, கொழும்பு துறைமுக நகருக்கு எதிரில் உள்ள காணியையும சீனாவுக்கு வழங்கியுள்ளனர். இது தேசத்துரோக அரசாங்கம், ராஜபக்சவினர் செய்யும் இந்த வியாபாரத்தை நிறுத்த வேண்டும்.
அதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் விடயத்தில் முக்கியத்துவத்தை வழங்கியுள்ள விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள வசதியானவர்களை விட நாட்டுக்கு வெளிநாட்டு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் செய்வதறியாது இருக்கும் தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment