Header Ads



UNP இல் இருந்த 80 வீதமானோர், ஐக்கிய மக்கள் சக்தியுடனே இணைவு - சம்பிக்க

(செ.தேன்மொழி)

கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க , தற்போது வெளியாகியுள்ள மின்கட்டணங்கள் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதனை நாட்டுக்கு  தெளிவுப்படுத்துமாறும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவிலாயர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதினால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை வைரஸ் பரவலுக்கு முன்னர் அரசாங்கம் எடுத்த சில தீர்மானங்களும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளன. தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்து சில காலங்களிலே வரி சலுகையை வழங்கியிருந்தது. இதனால் தேசிய வருமானம் பெரிதும் வீழ்ச்சியடைந்தது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அது மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தோம். விலை சூஸ்த்திரமொன்றை செயற்படுத்தியிருந்தோம். உலகச் சந்தையில் எரிபொருளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்த போதிலும் அரசாங்கம் அதற்கான பயன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. இந்நிலையில் வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்நிலையில் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் நீர் மற்றும் மின்கட்டணங்கள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. வழமையாக செலுத்தி வந்த கட்டணத்தையும் விட இரண்டு அல்லது மூன்று மடங்குகளாக மின்சார கட்டணத் தொகை அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். மின்சார கட்டணத்தொகை எவ்வாறான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்க தெளிவாக விளக்கமளிக்க வேண்டும். பெரும்பாலும் மின்சார உற்பத்திக்காக எண்ணெய் , நிலக்கறி போன்றவையே தேவைப்படும். இவற்றின் விலையும் தற்போது குறைவடைந்துள்ளது. இந்நிலையில் மின் கண்டணம் மாத்திரம் அதிகரித்திருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியை முறையான கொள்கைத்திட்டமின்றி வெற்றிக் கொள்ள முடியாது. தொடர்ந்தும் பணம் அச்சிடுவதனாலும் , வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாலும் மேலும் நெருக்கடி அதிகரிக்குமே தவிர அவற்றின் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாது. பொது தேர்தலை வெற்றிப் பெற்று நாங்கள் ஆட்சியமைத்தால் மக்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம்.

கேள்வி : ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தங்களது ஆட்சியில் குறைப்பாடுகள் காணப்பட்டதாக தெரிவித்திருக்கின்றார். அதனை நீங்களும் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில் : நல்லாட்சி அரசாங்கத்தில் குறைப்பாடுகள் காணப்பட்டதன் காரணமாகவே எங்களுக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போயுள்ளது. ஒரு அரசாங்கம் இரு தடவைகள் ஆட்சியமைக்க கூடிய நிலைமை காணப்பட்ட போதிலும் எங்களால் அது முடியாமல் போயுள்ளது. எமது ஆட்சிகாலத்தில் நடாத்தப்பட்ட இரு தேர்தல்களிலும் எமக்கு தோல்வியே கிடைக்கப் பெற்றது. அதனால் எமது ஆட்சியில் குறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளது என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம்.

கேள்வி : ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியினர் சிறிகொதாவிற்கு கல்லெறிவதாக தெரிவித்துள்ளாரே அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: ஐக்கிய மக்கள் சக்திக்கு என்று ஒரு வீடு உள்ளது. அதனால் அயல் வீட்டுக்கு கல்லெறிய வேண்டிய தேவை எமக்கு இல்லை.

கேள்வி : கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கே பெரும் வரவேற்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நீங்கள் தனித்து போட்டியிடுவதால் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாதா?

பதில் : பொது தேர்தல் முடிவுகளின் பின்னர் யாருக்கு வரவேற்பு இருக்கின்றது என்பதை அனைவரும் அறிந்துக் கொள்வார்கள். ஐ.தே.க.வில் இருந்த பழைய உறுப்பினர்களின் 80 வீதமானோர்  ஐக்கிய மக்கள் சக்தியுடனே இணைந்துக் கொண்டுள்ளனர். அதனால் எமக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது.

No comments

Powered by Blogger.