Header Ads



தொண்டாவின் மூத்த புதல்வி Dr கோதை, தந்தையின் மறைவின்பின் எழுதிய உருக்கமான கடிதம்


அன்பு அப்பாவுக்கு,

எப்படி உங்கள் சுகம்? நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டீர்கள் என்ற அந்த பயங்கரமான அழைப்புகிடைத்து சில நாட்கள் கடந்து சென்றுவிட்டன. முடிவுறா  கண்ணீருடன் பல
மணித்தியால பயணத்தின் பின்பு தனிமைப்படுத்திக் கொள்ளமட்டும் நான் ஆவலாக வீட்டை அடைந்தேன்.

நாளாந்தம் இந்தநோய்  என்ன செய்கின்றது என்பதை நான் பார்த்திருக்கின்றேன்.  அத்துடன் அது  காவுகொண்ட  உயிர்களின் எண்ணிக்கையையும் நான் அறிவேன். எனினும், எனது பகுத்தறிவற்ற கோபம் ஒரு மருத்துவர் என்ற எனது கடமையால் பாதுகாக்கப்பட்டது.

ஒரு தேசமாக இதிலிருந்து மீள்வதற்கு நாம் இவற்றை செய்தே ஆக வேண்டும் என்று நான் நம்புகின்றேன். இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திற்கு நான் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனாலும் விலை மதிப்பற்ற தந்தையை இழந்த ஒரு மகளாக, நான் கோபப்படுகின்றேன். நான் இப்பொழுது உங்களுடன் இருக்கவேண்டும். ஆனால் முகக்கவசத்திற்குள்ளும், நான்கு சுவர்களுக்கு பின்னால் என் துயரை அடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன்.

சரியான பதில் இல்லை என்பதை கண்டறியமட்டுமே நான் இதை எதித்துப் போராடுகின்றேன். எனக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதனை செய்வது தான் எனது கடமையாகும். நீங்களும் என்னுடன் இதற்கு உடன்படுவீர்கள் என்று நினைக்கின்றேன்.

எல்லோரையும் போன்று பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனையுள்ள ஓர் தந்தையாக தனது மூத்த மகள் மருத்துவராகவர வேண்டும் என்று நீங்களும் எதிர்பார்த்தபோது எனக்கு கோபம் வந்தது. தொடர்ச்சியான இரவுநேர கடமை நேரங்கள், அதன் காரணமாக உங்களை சந்திக்க முடியாமை மற்றும் குடும்பத்தின் பல தரப்பட்ட ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ள முடியாமை போன்ற காரணங்களுக்காக நான் உங்களுடன் சண்டைப் போட்டிருக்கின்றேன். 

அனுபவம் அற்ற இளம் உள்ளகப் பயிற்சியாளராக அந்நேரத்தில், எல்லாவற்றுக்கும் உங்களையே  நான் குற்றம் கூறியிருக்கின்றேன்.  நான் வளர்ந்த பின்பு எனது இரண்டாவது  காதல்- எமர்ஜென்சி
மருத்துவம், ஆனால் எனது முதற் காதல்- ஆம் அதுவேறு யாரும் அல்ல- பல மைல் தொலைவில் இருந்துகொண்டு தனக்குள் துயருற்றிருக்கும் உங்கள் மருமகன். நீங்கள் இருவரும் பகிர்ந்துகொண்ட சிறப்பு பிணைப்பு எனக்கு எரிச்சலையூட்டியது. ஏனெனில் என்னிடம் நெருக்கமாக இருப்பதுபோன்று உங்களிடம் அவர் நெருக்கம் காட்டுவதனை நான் விரும்பவில்லை. எனக்கே உரிமை என்ற உணர்வை நான் குறைத்துக் கொள்ளவேண்டும். இந்தகதையை நான் பிறகு ஒருநாள் சொல்லவைத்துக் கொள்கின்றேன்.

அற்புதமான வழிகாட்டிகளினால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதனால் எமர்ஜென்சி மருத்துவத்தில் பணியாற்றுவதனை நான் விரும்ப ஆரம்பித்தேன். இப்பொழுது எல்லாம் தலைகீழாகிவிட்டன. நீங்கள் சொல்கிறீர்கள் 'பார், நாச்சி, நான் உன்னை மருத்துவம் படிக்கசொல்லியதால் தான் இவையெல்லாம் நடந்தது'.

ஆம். நீங்கள் தான் அப்பா. எனது வாழ்வின்  நோக்கத்தினை முன்னரேயே கண்டறிந்துவிட்டீர்கள்.
நமக்கு இடையிலான முக்கியத்துவம் இல்லாத எல்லா சண்டைகளும்  இப்பொழுது அர்த்தமற்றுபோய் விட்டன. இந்த நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில்  உலகத்திற்கு உதவ  நீங்கள் எனக்கு வழங்கிய சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தினை நான் தற்போது உணர்கிறேன்.

ஈர்ப்பு மிக்க உங்களது அரசியல் வாழ்க்கை பற்றியும், நீங்கள் எவ்வளவு சக்திவாய்ந்த நபர் என்பது பற்றியுமான கட்டுரைகளை நான் வாசித்திருக்கின்றேன். போடிங் ஸ்கூல்களில் வளர்ந்தமையினால் உங்களுடன் அதிகளவு நேரத்தினை செலவிடமுடியாத போதிலும், ஆனால் அந்த வெற்றிடத்தினை
நீங்கள் ஒருபோதும் நாம் உணர அனுமதிக்கவில்லை. களியாட்ட பூங்காக்களுக்கு எங்களுடன் செல்லும் போது எவ்வளவு தூரம் நீங்கள் அதனை அனுபவித்து மகிழ்ந்தீர்கள் என்பதனையும், ஒரு சிறுபிள்ளைபோல் நீங்கள் ரோலர் கோஸ்ட்டர்களில் இருந்து குதூகலித்து மகிழ்ந்ததையும், நான் உணர்வுபூர்வமாக பார்த்து ரசித்ததனையும் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என விரும்புகின்றேன். எங்களது பிறந்ததினங்களை வருடாந்த விழாபோன்று - எமது 6ம் வகுப்பு நண்பர்களும் இன்னும் பேசும் அளவுக்கு -நீங்கள் கொண்டாடி மகிழ்ந்தீர்கள். கிடைத்தேன்). மேலும், என் முதல் குழந்தையாகிய மாயாவுக்கு அன்னையாகப் போகிறேன்

என்று அறிவித்ததும், அதற்கான உங்களது பிரதிபலிப்பாக, 'நாச்சி, நான் தாத்தாவாக இன்னும் தயாராகவில்லை!' என்று கூறியதனை நான் என்றுமே மறக்கமாட்டேன். ஆனால் நீங்கள் ஒரு அன்பான அற்புதமான தாத்தாவாக இருந்தீர்கள்.

உங்கள் சிரிப்பினை நான் மிகவும் இழக்கின்றேன். நீங்களே உங்களது நகைச்சுவைகளுக்காக சிரித்து மகிழ்வீர்கள். பின்பு அவற்றைக் கேட்டு நாங்களும் சிரிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அவை மிகவும் நகைச்சுவையானவை என்று நாம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கும் வரை மூன்று தடவைகள் அந்த நகைச்சுவையைக் கூறிக்கொண்டே இருப்பீர்கள்.

அப்பா, இந்த கடினமான உலகத்தில் ஒரு பெருமலையாக இருந்து என்னைக் காக்கும் கவசமாக நீங்கள் இருந்தீர்கள். உங்களைக் கடந்து செல்வதற்கான அந்த பலத்தை நான் இனி எங்கே தேடுவது?

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்வதற்கும், உங்கள் இழப்பினை எண்ணி வருத்தப்படுவதற்கும் நான் அச்சப்படுகின்றேன். இவையெலாம் திடீரென உண்மையா கிவிட்டது. என் இதயம் உங்களை சுற்றியே இருக்க ஏங்குகின்றது. எல்லா படங்களிலும் சலனமின்றி படுத்திருக்கும் உங்களைப் பார்க்கின்றேன். உங்களைத் தொட்டுக் கொண்டு, குளிர்ந்து போயிருக்கும் கரங்களைப் பற்றிக் கொள்ள ஏங்குகின்றேன். 

நாம் எதிர்கொள்ளும் தொற்றுநோய்  பரவல் காரணமாக, உங்களுக்கு மரியாதை செலுத்த அணிதிரண்டுவரும் மக்களை நினைத்து நான் அஞ்சுகின்றேன். எனது உடன்பிறந்தவர்களுக்கு மக்கள் பெருமளவில் சேர்வதனைத் தடுக்குமாறு தொடர்ச்சியாக தகவல் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில் அது பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனது தங்கையும் தம்பியும் நான் இன்றி இந்த சூழலை எப்படி எதிர்கொள்கின் றார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் நீங்களும், 'ஐயாவும்' (கொள்ளுத்தாத்தா) அவர்களுக்கு துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் வாழ்கின்றேன். என் அழுகையை உங்களால் கேட்க முடியுமா என்று சிந்திக்கின்றேன். 

அத்துடன் நான் உங்களுடன் சமாதானம் செய்யவிரும்புகின்றேன். என்னால் இயலும் போது தான் உங்களை நான் செல்ல அனுமதிப்பேன்.

ஒவ்வொரு நாளும் நான் விழித்தெழும் போதும் உங்களது பிரசன்னத்தை நான் உணர்கின்றேன். நீங்கள் இனி இல்லை என்ற ஆற்றாமையை மிகவும் கடினமாக  உள்வாங்கிக் கொள்கின்றேன். நான் இனி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வேன் என்று இத்தருணத்தில் உங்களை இறுகப் பிடித்து கூற வேண்டும் போலுள்ளது. அன்பான அப்பா தயவுசெய்து அமைதியாக உறங்குங்கள். எதனைப் பற்றியும் இனி கவலைப்படாதீர்கள். இறுதியில் உங்களுக்கு ஓய்வுதேவை. மற்ற எல்லோரையும் விட நீங்கள் மிகவும் கடுமையாக வேலைசெய்தீர்கள் என்று எனக்கு தெரியும். நான் உங்களை என்றென்றும் நேசிக்கின்றேன்.

நீங்கள் எங்கு சென்றாலும் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை. ஏனெனில் அதனை நீங்கள் வெறுக்கின்றீர்கள் என்று எனக்கு தெரியும். 

அன்புடன்,
நாச்சியார் உங்கள் விருப்பத்திற்குரிய பிள்ளை (இது உண்மை!)

dbsjeyaraj

No comments

Powered by Blogger.