கோட்டாபய - மகிந்த ஆகியோருக்கே நாட்டு மக்களின் பிரதானமான ஆதரவு இருக்கின்றது - நாமல்
பிரேமதாசவின் நியதிகளை ஐக்கிய தேசியக் கட்சி தெளிவாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரே கொலை அரசியலை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெலியத்தை பலபொத்த பிரதேசத்தில் இன்று -30- நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினை குறித்து எமக்கோ நாட்டு மக்களுக்கோ எந்த குழப்பமும் இல்லை. கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கே நாட்டு மக்களின் பிரதானமான ஆதரவு இருக்கின்றது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்து, கோட்டாபய ராஜபக்ச மீது நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வைத்தனர். இதற்கு அப்பால் சென்ற நம்பிக்கையை மக்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீது வைத்துள்ளனர். மக்களின் இந்த நம்பிக்கை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் தேர்தலில் படுதோல்வியே ஏற்படும்.
அலரி மாளிகையின் பெயரை முன்னால் எடுத்துக்கொண்டு சென்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை பிடிக்கவே அவர்கள் முயற்சித்து வருகின்றனர். இரண்டு தரப்பில் எவராவது சிறிகொத்தவை பிடித்துக்கொள்ளட்டும். ஐக்கிய தேசியக் கட்சியினரின் பிரச்சினை குறித்து நாங்கள் குழம்ப தேவையில்லை.
ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகள் அமைப்பு துப்பாக்கிகளை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெளிவாக கூறியுள்ளார். இதனை இதுவரையும் அவர்கள் பகிரங்க ஊடகங்களில் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை மூடிமறைத்தனர். எனினும் விடுதலைப் புலிகளுக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிகளால் ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கு அப்பால் பாரதூரமான விடயமும் உள்ளது. இந்திய படையினரை கொலை செய்ய துப்பாக்கிகளை வழங்கினார்களாம். ரணசிங்க பிரேமதாச தெற்கிலும் இதனையே செய்தார்.
தெற்கில் ஜே.வி.பியினரையும் இராணுவத்தினரையும் மோதவிட்டு, 60 ஆயிரம் இளைஞர்களை கொலை செய்தார். ரணசிங்க பிரேமதாச இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்புவதாக தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற புலிகளுக்கு துப்பாக்கிகளை வழங்கி, இந்திய இராணுவத்தையும் எமது இராணுவத்தையும் கொலை செய்தார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment