படையெடுத்து வரும் குருவிகள் - நெற்கதிர்களை துவம்சம் செய்வதாக விவசாயிகள் கவலை
திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்களில் காணப்படும் நெற் கதிர் விளைச்சல்களை ஒரு வகை புதுக் குருவிகள் கூட்டம் கூட்டமாக வந்து நெற்கதிர்களை துவம்சம் செய்து செல்வதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
"தெனையான் " என்று அழைக்கப்படும் குருவி இனங்களே இவ்வாறு நெல் இனங்களை அழித்து வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பகுதியிலுள்ள பனிச்சங் குளம், மனியரசன் குளம், வெள்ளங் குளம், நடுஊற்று குளம், குரங்கு பாஞ்சான் குளம், துவரங்குளம் உள்ளிட்ட இடங்களில் செய்கை பண்ணப்படும் விவசாய நிலங்களை அழித்து வருவதாகவும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட குருவிகள் ஒரே தடவையில் கூட்டாகப் பறந்து வந்திறங்கி, பரவலாக நெல் கதிர்களை நாசமாக்கி விட்டுச் செல்வதாக தெரிவிக்கின்றனர்.
பனிச்சங்குள பகுதியில் மாத்திரம் அண்ணளவாக செய்கை பண்ணப்பட்ட சுமார் 110 ஏக்கரில் 25 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இந்தக் குருவிகளின் தொல்லை இருப்பதாகவும் இதைக் கட்டுப்படுத்தவோ இது தொடர்பில் ஆராய்வில் ஈடுபடவோ அரச திணைக்களங்கள் முன்வரவில்லை எனவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாட்டின் ஏனைய சில மாவட்டங்களில் வெட்டுக் கிளிகள் படைபெடுத்துள்ள இத்தருணத்தில், இவ்வாறான குருவி இனங்களும் வருகை தருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதற்கு நிரந்தரமான தீர்வை வழங்குமாறும் அழிவடைந்த விவசாய நிலங்களுக்கு நட்டஈடுகளையும் வழங்குமாறும், உரிய அதிகாரிகளுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
Post a Comment