கட்டிடம், சின்னத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு கட்சிக்கு உரிமைக்கோர முடியாது - புத்திக்க
(செ.தேன்மொழி)
கட்டிடத்தையும் சின்னத்தையும் மாத்திரம் வைத்துக் கொண்டு கட்சிக்கு உரிமைக்கோர முடியாது. கட்சியின் ஆதரவாளர்களின் நம்பிக்கையை வென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, சிறிகொத்தாவில் இருப்பவர்கள் வெறுமனே கட்டிடத்தையும் , சின்னத்தையும் மாத்திரம் வைத்துக் கொண்டு தாங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையாளர்கள் என்று கூறுவதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை-23- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கட்சியின் தலைமைத்துவம் என்பது அந்த கட்சியின் பெரும்பான்மை ஆதரவாளர்கள் எங்கு இருக்கின்றார்களோ அவர்களிடம் இருப்பதாகும்.
கட்டிடத்தையோ சின்னத்தையோ வைத்துக் கொண்டு நாங்களே இந்த கட்சியின் உரிமையாளர்கள் என்றுக் கூறிக் கொள்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை.
சிறிகொத்தாவில் இருப்பவர்கள் அவ்வாறே கட்டடத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு நாங்களே ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையாளர்கள் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெரும்பான்மையான ஆதவாளர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இதேவேளை தற்போது பொதுத் தேர்தலுக்கான போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக இம்முறை சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார சட்டவிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டவிதிகளுக்கமையவே இம்முறை பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஆளும் தரப்பினர் இந்த இரு சட்டவிதிகளையும் மீறி பாரியளவிலான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலைத்திட்டமற்ற அரசாங்கமாக பெயர் பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவையும் தமது கைக்குள் வைத்துக் கொண்டு செயற்படுத்தவே முயற்சித்து வருகின்றது.
இம்முறை வேட்பாளர்களின் வாகனங்களைத் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்தையோ, சின்னம் மற்றும் இலக்கத்தை அச்சிடுவது தடைச் செய்யப்பட்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் முச்சக்கர வண்டிகளில் கூட அச்சிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்குமாறு நாங்கள் வலியுறுத்தி வந்த போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தியுள்ளதாக தெரியவில்லை.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சலுகை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்வரும் பொதுத் தேர்தலை நாங்கள் வெற்றிபெற்று 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சலுகைகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்றை ஏற்படுத்தி சலுகைகளை பெற்றுக் கொடுப்போம்.
Post a Comment