Header Ads



யார் இந்த, ஹனீபா ஹஸ்ரத்...?

ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் ஹெம்மாத்தகம, தும்புளுவாவ என்ற கிராமத்தில்  1938 ஆம் ஆண்டு அஷ்ஷைக் இப்ராஹிம் ஒமருலெப்பை  மற்றும் கதீஜா நாச்சியார் ஆகிய தம்பதிகளுக்கு  6 ஆண் குழந்தைகளையும் 5பெண் குழந்தைகளையும் கொண்ட குடும்பத்தில்   இரண்டாவது பிள்ளையாக பிறந்தார்கள் .

இவரின் தந்தையான அஷ்ஷைக் இப்ராஹிம் இப்னு ஒமருலெப்பை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக கடைமையாற்றியவர் என்பதும் இவரது 5 தலைமுறையினர் உலமாக்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

மார்க்க அறிஞர்களையும் கல்விமான்களையும் கொண்ட இவரது குடும்பத்தில் இவர்களது சகோதரர்கள் ஆசிரியர்களாகவும், முகாமையாளர்களாகவும் பணியாற்றியவர்கள் என்பது விஷேட அம்சமாகும். இவர்களுள் பேராதெனிய பல்கலைக்கழக முன்னால் விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அமீன், தாருல் ஹஸனாத் சிறுவர் இல்லத்தின் பிரதி முகாமையாளர் எம்.ஐ.எம் ஸாலிம் பாரி, ஹெம்மாதகமை விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கான நிலையத்தின் முகாமையாளர் எம்.ஐ.எம். முனீர், ஆசிரியர் எம்.ஐ.எம். ஹகீம் மௌலவி போன்றோரை குறிப்பிடலாம்.

கல்வி

ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரான ஹெம்மாதகம ஹிஜ்ராகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் கற்றுக் கொண்டார்கள். சிறு வயது முதல் தந்தையின் அரவணைப்பில் மார்க்க விடயங்களை கற்றுக் கொண்ட இவர்கள் மார்க்க பற்றுள்ளவராகவே இருந்து வந்தார்கள். 

இவரிடம் காணப்பட்ட மார்க்க பற்றை அவதானித்த தந்தை இவரையும் தன்னை போன்று ஆலிமாக ஆக்க வேண்டும் எனும் நோக்கில் காலி கோட்டை பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யாவில் இணைத்து ஆங்கேயே பட்டம் பெட்டார்கள்.

பின்னர் 1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்றுனர் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து பட்டதாரியுமானார்கள். மேலும் இவர்கள் மௌலவி ஆசிரியர் சான்றிதழ் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற ஒரு ஆசிரயராவார்கள்.

குடும்ப வாழ்வு

1968 ஆண்டு ஜனவரி மாதம் எலமல்தெனிய அப்துர்ரஹ்மான் லெப்பை ஸவ்தா உம்மா தம்பதியரின் அன்பு மகள் ரஹ்மத் பீபியுடன் திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள் நான்கு ஆண் குழந்தைகளையும் நான்கு பெண் குழந்தைகள் அடங்களாக 8 குழந்தைகளின் தந்தையாவார்கள். இவர்களும் ஸம்ஸம் நிறுவனத்தின் பணிப்பாளர் முப்தி யூசுப், தஸ்கரை ஹக்கானிய்யா அரபுக் கலாபீட சங்கைக்குறிய அதிபர் அஷ்-ஷைக் லபீர் , ஹக்கானிய்யா அரபுக் கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷைக் இன்சாப், நுவரெலியா ஜமாலியா அரபுக் கலாபீட நிருவாக சபைத் தலைவர் அல்ஹாஜ் இனாம் ஆகியோரை குறிப்பிடலாம். 

குழந்தைகளை சிறு வயது முதல் மார்க்க பற்றுடன் வளர்த்த இவர்களின் குழந்தைகள் பேரக் குழந்தைகள் என பலரும் ஆலிம்களாவார்கள். சுமார் 43 பேரக்குழந்தைகளை அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுக்கு வழங்கியிருக்கின்றான் என்பது விஷேட அம்சமாகும்.

தப்லீக் பணியில் .......

1988ஆம் ஆண்டளவில் ஒருவருடம் தப்லீக் பணிக்காக சென்ற ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் ஆரம்பம் முதல் தன்னைப் தப்லீக் பணிக்காக அர்பணித்து வந்தவர்களில் ஒருவராவார். பல நாடுகளுக்கு தனது மனைவியுடன் தீண்பணிக்காக பயணித்துள்ள இவர்கள் இலங்கையின் தப்லீக் அமைப்பின் மையமான கொழும்பு மர்கஸில் அதிக காலங்களை செலவளிப்பவராகவே இருந்து வந்தார்கள்.

குறிப்பாக ஜோர்தான், கட்டார்,இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ் போன்ற பல நாடுகளுக்காக தப்லீக் பணிக்காக ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் சென்றுள்ளார்கள். இது தவிர பல ஹஜ்ஜுக்களையும், உம்ராக்களையும் நிறைவேற்றியுள்ள ஹஸ்ரத் அவர்கள் தனது ஆரம்ப ஹஜ்ஜை பாடங்களில் எமக்கு அடிக்கடி ஞாபகமூட்டி ஹஜ்ஜுக்கான ஆர்வத்தை ஏற்படித்தியுள்ளார்கள்.

கலாசாலையில் இருந்து பட்டம் பெற்ற எங்களுக்கு ஹஸ்ரத் அவர்களை அடிக்கடி மர்கஸில் சந்திக்கும் சந்தர்ப்பங்களே அதிமாக கிடைத்திருக்கின்றது. அந்த அளவிற்கு ஹஸ்ரத் அவர்கள் தப்லீக் மர்க்கஸை தனது சொந்த வீடாகவே மதித்திருந்தார்கள்.

ஆசிரியராக ........

மார்க்க அறிவை கற்றுத் தேர்ந்த இவர்கள் தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற ஆவல் மிக்கவராக காணப்பட்டார். அரசாங்க பாடசாலை ஆசிரயாராக பல பாடசாலைகளிலும், அரபுக் கல்லூரிகள் பலதில் உஸ்தாதாகவும் கடமை ஆற்றிய இவர்கள் பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் நினைவில் நீங்கா ஆசிரியராவார்.

தனது சன்மார்க்க அறிவை பூர்த்தி செய்த ஹஸ்ரத் அவர்கள் ஆரம்பத்தில் உடுநுவர மக்களின் நீண்ட கால ஆசையின் பலனாக 1960ஆம் ஆண்டளவில் 25 மாணவர்களுடன் உடுனுவர கெடகும்பர பள்ளிவாயலில் ஆரம்பமான அல் மத்ரஸதுல் றப்பானிய்யா பகுதி நேர மத்ரஸாவை தனது தந்தை மற்றும் வஹங்கொஹவை சேர்ந்த பஷீர் உஸ்தாத் ஆகியோருக்கு பின்னர் சுமார் 2 வருடங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த மத்ரஸாவை ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் மீண்டும் ஆரம்பித்து நடாத்தி வந்தார்கள்.

இவர் தெல்லங்க அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயம், கடுகண்ணாவ மத்திய கல்லூரி மற்றும் அல் மனார் தேசிய பாடசாலை ஆகியவற்றில் இரண்டு தசாப்த காலம் சேவையாற்றியுள்ளார்கள். 1987ஆம் ஆண்டு கொழும்பு மர்கஸ் மத்ரஸதுர் ரஷாத் அரபுக் கல்லூரியில் ஒரு வருடம் உஸ்தாதகவும் கடமையாற்றியுள்ளார்கள்.

இது தவிர முர்ஷியா அரபுக் கல்லூரியிலும், தனது கல்லூரியான ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியிலும் என ஹஸ்ரத் அவர்கள் சன்மார்க்க அறிவை கற்பிப்பதில் ஆசானாக பாரிய பங்காற்றியுள்ளார்கள். இஸ்லாமிய சட்டக்கலை, அரபு இலக்கணம், இலக்கியம் போன்றவற்றில் குறிப்பாக பாரிய ஆற்றலுடன் இருந்த இவர்கள் தனது பாடங்களை ஆர்வத்துடன் மாணவர்களுக்கு போதிப்பவராக இருந்து வந்தார்கள்.

ஹக்கானிய்யாவில் ஹஸ்ரத் அவர்கள்

உடுநுவரையில் தனது தந்தை சிறியதாக ஒரு பகுதிநேர மத்ரஸாவை ஆரம்பித்ததை போன்று ஹனீபா ஹஸ்ரத் அவர்களும் உலமாகளான தனது புதல்வர்களுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு பல்வகைமை கொண்ட ஆலிம்கள் எனும் ஆளுமைகளை சமூகத்திற்கு அறுவடை செய்ய வேண்டும் என்ற நன்நோக்கில் 21 மாணவர்களோடு தஸ்கர அல் ஹக்கானிய்யா அரபுக்கல்லூரியை ஸ்தாபித்தார்.

தஸ்கரை மண்ணில் பூத்த ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் ஆயுட்கால தலைவராகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் ஹஸ்ரத் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இன்று சுமார் 800 இற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டுள்ள இக்கலாசைலையின் வளர்ச்சியில் தனது தமயனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.

(அபூ முதீர் )அதிபரின் தந்தை என்று கலாசாலையில் அனைவராலும் அன்பாகவே ஹஸ்ரத் அவர்கள் அழைக்கப்பட்டு வந்தார்கள். தனது முதுமை வயதிலும் பல வேலைப்பலுக்களுக்கு மத்தியில் ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் கலாசாலையின் நிருவாகக் கூட்டங்களுக்கும், பாடங்களுக்கும் தவறாமல் சமூகமளிப்பார்கள். ஹக்கானிய்யாவின் ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவிலும் ஹஸ்ரத் அவர்களின் உபதேசம் அடங்கிய தலைமையுரை இவ்வருடத்துடன் ஓய்வு பெருகின்றது.

எனது கல்லூரி வாழ் நாளில் ஹஸ்ரத் அவர்கள் மாணவர்களை வீணாக கடிந்து கொண்டதை நான் பார்த்ததே இல்லை. சுன்னத்துக்களில் ஆர்வமூட்டும் அவர் கரண்டைக்கு கீழால் ஆடைகள் செல்வதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அன்பாக கடிந்து வழிகாட்டியதை கண்டிருக்கின்றோம். அவரிடம் நாங்கள் எமது மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிம் என்பதை கற்றிருக்கின்றோம்.

பண்புள்ள ஆசான்

அவர்களிடம் கற்றவன் என்ற வகையிலும் தனது படிப்பை முடித்தன் பின்னர் ஹஸ்ரத் அவர்களை அடிக்கடி சந்தித்து நலன் விசாரித்தவன் என்ற வகையிலும் ஹஸ்ரத் அவர்கள் பண்புகளை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். மாணவர்களிடம் தவறுகள் ஏற்படும் போது நிதானமாகவும், அன்பாகவும் கடிந்து கொள்ளும் ஒரு ஆசிரியராகவே இருந்து வந்தார்கள். மாணவர்களை அமல்களின் பக்கம் அதிகம் ஆர்வமூட்டும் இவர்கள் சிறிய கால இடைவெளியில் அல்குர்ஆனை ஓதி முடிப்பவராகவும், தஹஜ்ஜுத் வேளையில் அதிகம் நின்று வணங்குபவராகவும் தனது வாழ்நாளை கழித்துள்ளார்கள்.

விருந்துபசாரப் பண்பை தன்னிடம் கொண்டிருந்த ஹஸ்ரத் அவர்களை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சிறந்த முறையில் உபசரிக்க தவறியதில்லை. சந்தித்த நேரங்களில் உபதேசங்கள் செய்யுமாறு வேண்டிணால் அல்லாஹ்வுடனான தொடர்பையே அதிகம் ஹஸ்ரத் அவர்கள் உபதேசமாக சொல்லுவார்கள். அது மாத்திரமின்றி தஃவத் உடைய உழைப்பின் அவசியத்தின் பால் ஆரம்வமூட்டுவார்கள்.

அன்னலாரின் சுன்னாக்களில் அளவில்லா பேராசை கொண்ட ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் ஒரு முறை நான் தவ்ரதுல் ஹதீஸ் உயர் கற்கையில் இருக்கும் போது ஷமாஇலுத் திர்மிதி எனும் புத்தகத்தில் நபிகளாரின் வர்ணணைகள் தொடர்பாக வருகின்ற பாடத்தை மாணவர்களான எங்களுக்கு நடாத்துகின்ற போது அன்னார் நபிகளார் மீது எந்தளவு அன்பு வைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்டோம். அப்பாடங்களை கற்கின்ற போது மாணாக்களாகிய எமது கண்களை  கலங்க வைத்து கற்றுக்கொடுத்த ஆசான் ஹனீபா ஹஸ்ரத் அவர்கள்.

ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் அனைவருடனும் ஸலாம் சொல்லி புன்னகையுடன் நடந்து கொள்ளும் பண்பை கொண்டவர். அவருக்காக பணிவிடைகள் செய்ய கேட்கும் போதெல்லாம் மாணவர்களிடம் இருந்த பணிவிடைகள் பெறப்படுவதை விரும்ப மாட்டார்கள். எப்போதும் தலைப்பாகை அணிந்த வண்ணம் இருக்கும் இவர்களது அடர்ந்த தாடியும் அன்னாரது முகத்தின்  பிரகாசத்தை மேலும் இலங்கச் செய்தது.

தான் கல்லூரியில் இருக்கும் போது தனக்காக வழங்கப்பட்ட பாடங்களுக்காக நேரம் தவறாது வந்து மாணவர்களாகிய எங்களுக்கு சொல்லாலும் செயலாளும் நேரமுகாமைத்துவத்தை கற்றுத்தந்த பேராசான் ஹனீபா ஹஸ்ரத் என்றால் மிகையாகாது.

பேணுதலான வாழ்வு

யாரும் குறை கூற முடியாதளவு பிறருடனான அழகிய வாழ்வு, மனைவிக்கு சிறந்த கனவன், பிள்ளைகளுக்கு முன்மாதிரிமிக்க தகப்பன், மாணவர்களுக்கு வழிகாட்டியான ஆசான் என தனது வாழ்வை இஸ்லாமிய வாழ்வாக வாழத் தவராத புனிதர்.

40 வருடங்களாக தஹஜ்ஜுத் எனும் உயர் வணக்கத்தை மறவாமல் தொழுதவர், திங்கள் வியாழன் விடாமல் நோன்பு நோற்றவர், ஸூரா வாகிஆவை பல்லாண்டுகளாக தவறாமல் ஓதியவர் மட்டுமல்லாது அல்குர்ஆன் ஓதுவதில் அளவில்லா பிரியம் கொண்டவர்.

தொழுகைகளில் பேணுதல், சுன்னத்தான தொழுகைகளை விடுவதில்லை, மாணவர்களாக எங்களுக்கென்றாலும் சுன்னத்துக்களை பேணுவதில் ஆர்வமூட்டல், கரண்டைக்கு கீழால் ஆடை அணிவதை விரும்பாதவர், மிஸ்வாக் செய்வதை தவறாதவர், தலைப்பாகையை இறுதி வரை கட்டியவர், ஸலாம் சொலவதில் முந்துபவர் என அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஹஸ்ரத்தின் இறுதித் தருணங்கள்

பல முறைகள் நோய்வாய்ப்பட்ட ஹஸ்ரத் அவர்கள் நோயுடன் இருக்கும் போதெல்லாம் இறைவனை தியானிப்பதை பார்த்திருக்கின்றோம். இறுதியாக இம்முறை ஹஸ்ரத் அவர்கள் ரமலான் மாதத்தை முழுமையாக பலனுள்ளதாக கழிக்கின்றார்கள்.

இவ்வருட ரமலானில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழமை போன்று 15 குர்ஆன்களை ஓதி முடிக்கின்றார். (குர்ஆன் ஓதிவதில் பிரியர் அல்லவா அவர்). தராவீஹ், ஏனைய சுன்னத்தான தொழுகைகளை நியமமாக தொழுது ரமலானில் பர்ளுக்கான நன்மைகளை சம்பாதிக்கின்றார்.

பெருநாள் தினத்திற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் தனது பிள்ளைகளுடனும் குடும்பத்தினருடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சுகம் விசாரித்த ஹஸ்ரத் அவர்கள், தனது நண்பர்கள் சிலருக்கும் தொடர்புகளை ஏற்படுத்தி கதைக்கின்றார்கள். அதிலும் மதீனாவில் வசிக்கின்ற தனது நண்பர் ஒருவருடன் கதைத்த ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் தனது ஸலாத்தை அன்னலாருக்கு எத்தி வைக்க கூறத் தவறவில்லை. வழமையாக ரமலான் காலங்களில் உம்ராவிற்கு செல்லும் ஹஸ்ரத் அவர்களுக்கு இம்முறை சந்தர்ப்பம் கிடைக்காதது கவலை போலும்.

 பொருநாள் தினத்திலும் வழமை போன்று தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்திருக்கின்றார்கள். அன்றைய தினம் குளியளறைக்கு சென்ற அவர்கள் அங்கு சருக்கி விழுகின்றார்கள். அங்கிருந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட  ஹஸ்ரத் அவர்களிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் 

சுகயீன செய்தி கேட்டு உலகின் நாலாபுறத்திலிருந்தும் ஹஸ்ரத் அவர்களின் மாணவர்கள், தஃவா பணியில் அவருடன் இணைந்தவர்கள், நண்பர்கள் என பலரையும் கவலையில் ஆழ்த்தியது. துஆ பிராத்தனைகளையே ஹஸ்ரத்தின் குடும்பம் எதிர்பார்த்தது நிச்சயம் அவை நினைத்ததை விட பன்மடங்கு வானத்தை நோக்கி சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அவர்களிடம் கற்றுத் தேர்ந்த மாணவர்கள் தமக்குள் அல்குர்ஆனின் ஜுஸுக்களை பங்கு வைத்து பல குர்ஆன்களை ஓதி பிரார்த்திக்கின்றார்கள். ஸதகாக்கள் தானதர்மங்களை பிள்ளைகள் மாணவர்கள் எனபலரும் செய்ய ஆரம்பிக்கின்றார்கள். சில தினங்களில் ஹஸ்ரத்தின் நிலைமையில் சிறிது மாற்றம் இருப்பதாக சந்தோஷமான ஒரு செய்தி கேட்கிறது. அந்த சந்தோசத்துடன் இன்னும் பல நற்கருமங்களை செய்து பலரும் பிரார்த்திக்கின்றார்கள். அல்லாஹ்வின் ஏற்பாடு மீண்டும் இன்று பகல் வேலையில் எமது சங்கைக்கும் மதிப்புக்கும் உரிய ஹனீபா ஹஸ்ரத் அவர்கள் தனது 82ஆம் வயதில் இன்று 04.06.2020  அன்று இவ்வுலகிற்கு பிரியாவிடை அளிக்கின்றார் என்ற செய்தி காதுகளை எட்டுகின்றது.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

யா அல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் இறை பாதையில் தன்னை அர்பணித்தவர் என்பதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கின்றோம். அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக. அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.

பாழைய மாணவர்கள் சார்பாக, ஹஸ்ரத் அவர்களின் பணிவுள்ள மாணவன்
எம். பர்ஹத் ஹஸீம் ஹக்கானி 
குளியாப்பிட்டிய

1 comment:

  1. இந்தளவுக்கு மர்ஹம் ஹனிபா ஹஸ்ரத் அவரகளைப்பற்றி எவராலும் எழுதி இருக்க முடியாது. என்னுடைய மிக நீண்ட கால நண்பர். அன்னார் அவரகளுடைய இறை சேவைக்கு அல்லாஹ் அவரை நன்கு பொருந்திக் கொள்வதோடு ஜென்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் அழகிய சுவர்க்கத்தை அவரகளுக்கு அளிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete

Powered by Blogger.