இனவாதிகளின் இலக்குகளாகும், முஸ்லிம் கல்வி பீடங்கள்
இன்றைய 10.06.2020 நவமணி பத்திரிகையில், வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்
இலங்கை முஸ்லிம்கள் மீது அடர்ந்தேறிவரும் இனவாத சக்திகளின் பிரதான இலக்காக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் மாறியுள்ளது. ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக கல்வி பார்க்கப்படுகின்றது. அறியாமை என்ற இருளை ஒரு சமூகத்தின் மீது திணிப்பதற்கு பல்வேறு சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை வரலாற்றில் 1973 ஆம் ஆண்டு உதயமாகிய பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம், இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியில் ஒரு மைற்கல் என்றே கூறவேண்டும்.
இன்று உள்நாட்டில் அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளை வகித்து வரும் இக்கலாபீட பட்டதாரிகள் இக்கலாபீட பயணத்தின் வெற்றி வாரிசுகளாகவே நோக்கப்படுகின்றனர்.
சன்மார்க்கக் கல்வியுடன் நவீன உலக அறிவையும் இணைத்து சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களை வெளியீடு செய்யும் ஒரு முன்னணி கல்விப் பீடமாக இக்கலாபீடம் திகழ்கின்றது. இக்கலாபீடத்தின் பட்டச் சான்றிதழ் 02 சர்வதேச முன்னணி பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக் காணப்படுகின்றமை இதன் சிறப்புத் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு சொத்தாக காணப்படும் இக்கலாபீடத்தின் வளர்ச்சியை தடுக்கும் சதிகார நடவடிக்கையை இந்நாட்டிலுள்ள இனவாத சக்திகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
இது நிறுத்தப்பட வேண்டும். சமூகத்தில் இந்த இனவாதிகளினால் விதைக்கப்படும் தவறான கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
குறிப்பாக இக்கலாபீடம் ஒரு பெரும் பணியாக இதனை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இக்கலாபீடத்திலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் இந்த விடயத்தில் பகீரதப் பிரயத்தனத்தை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய நவீன பல்கலைக்கழகமாக பரிணமிக்கவுள்ள இக்கலாபீடத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்நாட்டின் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குள்ளது.
தவறான கருத்துக்களினால் பெரும்பான்மை சமூகத்தின் சிந்தனையை சலவை செய்ய முயற்சிக்கும் இனவாத சக்திகளுக்கு சரியான கருத்தையும், இக்கலாபீடம் பற்றிய தெளிவையும் வழங்குவது முஸ்லிம் சமூகத்தின் சகல உறுப்புக்களினதும் தார்மீகப் பொறுப்பாகும்.
Post a Comment