கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில், கருஞ்சிறுத்தையின் உடல்
அண்மையில் ஹட்டன் – நல்லதண்ணி, வாழைமலை தோட்டத்தில் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த கருஞ்சிறுத்தையின் உடல் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு துறை பணிப்பாளர் ஜெனரல் M.G.C. சூரியபண்டார கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு, வனவிலங்கு அமைச்சகத்திடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுத்தையின் மரணம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும், சடலத்தை அருங்காட்சியகத்திற்கு அனுப்பும் முடிவு இறுதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று சிறுத்தை பற்றி ஆய்வுசெய்து வருகின்றது. இது கருப்பு சிறுத்தை பற்றிய பல அறிவியல் தகவல்களைக் கண்டறிய உதவும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த கருஞ்சிறுத்தை கடந்த 26ம் திகதி நல்லதண்ணி, வாழைமலை தோட்டத்தில் விவசாயப் பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 29ம் திகதி கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த இந்த சிறுத்தை அருகிவரும் விலங்கினங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment