இலங்கைக்கு கொரோனா பாதுகாப்பு, உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய அமெரிக்கா
(நா.தனுஜா)
இலங்கையின் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் அமெரிக்கா சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிவைத்திருக்கிறது.
இந்த நன்கொடைப் பொருட்களை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவிடம் கையளித்தார். இந்த நன்கொடை கொவிட் - 19 இற்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் 'அனைத்தும் அமெரிக்கா' செயற்திட்டத்தின் ஓரங்கமாகவே வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிதியுதவியின் கீழ் 48,000 இற்கும் அதிகமான முகக்கவசங்கள், பாதுகாப்புக் கையுறைகள், பாதுகாப்பு அங்கிகள் என்பனவையே நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பதுடன், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நலிவடைந்திருக்கும் நாட்டின் வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இப்பொருட்கள் அனைத்தும் இலங்கையிலேயே கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றன.
'இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்போரைப் பாதுகாப்பதற்கு முன்நின்று செயலாற்றிவரும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உதவமுடியுமாக இருப்பதையிட்டுப் பெருமையடைகின்றோம். இந்த நன்கொடைப் பொருட்களை வழங்கும் அதேவேளை, இலங்கையின் வணிக நடவடிக்கைகைள வலுப்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்வது இருநாடுகளினதும் ஆழமான நட்புறவிற்கு ஓர் அடையாளமாகும்' என்று தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொவிட் - 19 இற்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இத்தகைய உதவியை வழங்கிய அமெரிக்காவிற்குத் தனது நன்றியை வெளிப்படுத்தியிருக்கும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, அவசர சுகாதார நிலைமைகள் ஏற்படுகையில் அதற்குத் தயார்நிலையில் இருப்பதற்கு இத்தகைய பாதுகாப்பு உபகரணங்கள் மிகவும் அவசியமானவையாகும் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment