முஸ்லிம்கள் குழந்தைப் பேற்றைத் தடுக்க கட்டாயக் கருக்கலைப்பு - சீனா கையாளும் கொடூர முறை
சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மை மக்களிடையே குழந்தைப் பேற்றைத் தடுத்து மக்கள்தொகையைக் குறைக்கும் வகையில் சீனா கொடூரமான முறைகளைக் கையாண்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
சிறுபான்மைப் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்வது, குடும்பக் கட்டுப்பாடு செய்வது, கருப்பையில் ஐயுடி (காப்பர்-டி) பொருத்துவது போன்றவற்றில் சீன அதிகாரிகள் ஈடுபடுகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்குச் செலுத்த முடியாத அளவுக்கு அதிக அபாரதம் விதித்தும், தண்டனை முகாம்களில் அடைத்தும் சீன அதிகாரிகள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள், உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது
தண்டனைக்குள்ளாகி, முகாம்களில் அடைக்கப்பட்டு தற்போது வெளியே இருக்கும் 30 குடும்பத்தாரிடம். ஏ.பி. நிறுவனம் சார்பில் பேட்டி எடுக்கப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 4 ஆண்டுகளாக சீன அதிகாரிகள் இந்த மாகாணத்தில் சிறுபான்மைப் பெண்களின் குழந்தைப் பேற்றைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். மாதந்தோறும் வந்து பெண்களுக்கு மகப்பேறு சோதனை செய்வது, இரு குழந்தைக்கு மேல் பெற்று மூன்றாவதாக பெண்களின் வயிற்றில் கரு உண்டாகி இருந்தால், அதை வலுக்கட்டாயமாகக் கலைப்பது, கருப்பையில் காப்பர்-டி எனும் கருத்தடை சாதனத்தைப் பொருத்துவது, சிலருக்கு கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு செய்வது, ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்வது போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் ஏறக்குறைய ஆயிரக்கணக்கில் கருக்கலைப்புகள் வலுக்கட்டாயமாக நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்பக் கட்டுப்பாடு முறை, காப்பர்-டி பொருத்துவது சீனாவில் மற்ற மாநிலங்களில் குறைந்த நிலையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் மட்டும் அதிகரித்துள்ளது அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஏ.பி. நிறுவனம் தெரிவிக்கிறது.
கருக்கலைப்புக்கும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் ஒத்துழைக்காத பெண்கள், ஆண்களைத் தண்டனை முகாம்களில் சீன அதிகாரிகள் அடைத்துள்ளனர். அதுமட்டுல்லாமல் அதிகமான குழந்தைகள் பெற்ற ஆண்களும், பெண்களும் குடும்பக் கட்டுப்பாடு செய்யாவிட்டால் தண்டனை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். அல்லது செலுத்தமுடியாத அளவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குல்நார் ஓமிர்ஜாக் எனும் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர் கூறுகையில், “எனக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததைப் பார்த்த அரசு அதிகாரிகள் காப்பர்-டி கருவியை எனது கருப்பையில் பொருத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.
ஆனால், இரு ஆண்டுகளுக்குப் பின் 2018-ம் ஆண்டு ராணுவத்தினருடன் வந்த 4 அதிகாரிகள் எனது வீட்டுக்கு வந்தனர். காய்கறி வியாபாரம் செய்யும் எனது கணவரிடம் இருந்து என்னைப் பிரித்துச் சென்றுவிட்டனர்.
மூன்று குழந்தைகள் பெற்றதால் என்னை தண்டனை முகாமில் அடைத்துவைத்து 2,685 டாலர் அபராதம் வசூலித்துப் பின்புதான் என்னை விடுவித்தனர். கடவுள் குழந்தைகளை எங்களுக்குக் கொடுக்கிறார். நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குற்றமா? சீன அரசு சொந்த நாட்டு மக்களையே அழிக்க முயல்கிறது” எனத் தெரிவித்தார்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் சீன அரசு தீவிரமாக குடும்பக் கட்டுப்பாட்டு முறை குறித்துப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் இந்த மாகாணத்தில் உள்ள உய்குர் மண்டலத்தில் உள்ள ஹோட்டன், காஸ்கர் பகுதியில் கடந்த 2015-லிருந்து 2018-ம் ஆண்டுவரை பிறப்பு விகிதம் 60 சதவீதம் குறைந்துள்ளது ஒட்டுமொத்தமாக ஜின்ஜியாங் மாகாணத்தில் 24 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது எனப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், சிறுபான்மை மக்கள் மீது கொடூரமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவை வலியறுத்தியுள்ளார்.
ஆனால், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகமோ இந்த அறிக்கை புனையப்பட்ட ஆய்வறிக்கை என்று மறுத்துள்ளது. சீனாவில் எந்த சிறுபான்மை மக்களும் கொடுமைப்படுத்தப்படவில்லை. அனைத்து மக்களும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் நடைமுறையில் இருந்தாலும், சிறுபான்மையினத்தவருக்கு இரு குழந்தைகள் திட்டம்தான் நடைமுறையில் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
Post a Comment