அபுதாபியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே, சிகிச்சைபெற மின்னணு கைப்பட்டைகள் அறிமுகம்
அபுதாபியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை அல்லது மருத்துவ கண்காணிப்பு பெற விரும்புகிறவர்களுக்கு வசதியாக நவீன மின்னணு கைப்பட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கைப்பட்டையானது நோய்தொற்று உடையவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அணிவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அந்த மின்னணு பட்டையை செல்போனில் உள்ள டிரேஸ் கோவிட் மற்றும் ஸ்டே ஹோம் என்ற 2 செயலிகளில் இணைத்துக்கொள்ள முடியும். அந்த கைப்பட்டை ஒவ்வொன்றிலும் நோயாளியின் முழு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
பிறகு அவரது வீட்டில் தனி படுக்கையறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருந்தால் அங்கு சிகிச்சை அல்லது மருத்துவ கண்காணிப்பு வழங்க அனுமதி அளிக்கப்படும். இந்த கைப்பட்டையை நோயாளி எப்போதும் அகற்றமுடியாது. கையிலேயே குணமடையும் வரை அணிந்து இருக்க வேண்டும்.
இதில் நோயாளியின் உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, உடலில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் தொலை தூரத்தில் இருந்து மருத்துவ துறையினரால் கண்காணிக்கப்படும். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மின்னணு கைப்பட்டைகள் 18 வயது முதல் 59 வயதுடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. தாங்களாக தனிமைப்படுத்திக்கொள்ளும் நோயாளிகள் கைப்பட்டையை தாங்களாக அகற்றிக்கொள்ள முடியாது. அவர்கள் முற்றிலும் குணமடைந்து விட்டனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு பிறகு மருத்துவ பணியாளர்களால் அகற்றப்படும். கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அறிகுறிகள் உள்ளவர்கள் அபுதாபி சுகாதாரத்துறையை அணுகி இந்த மின்னணு கைப்பட்டையை பெற்றுக்கொள்ளலாம். நோயாளிக்கு கைப்பட்டை அவசியமா? மற்றும் வீடுகளில் அதற்கான வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டு இது வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment