Header Ads



இலகுவாக வெற்றிபெறும் சாத்தியப்பாடு, நம் கண்முன் புலப்படுகிறது - சாபி றஹீம்

கம்பஹா மாவட்டதில்  யானையில்  போட்டியிடுவதன் மூலம் இலகுவான முறையில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் அதிகரித்துள்ளதாக என்று கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சாபி றஹீம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்  

கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களை பொறுத்தவரையிலும்  இப்பொதுத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல் ஆகும். இம்மாவட்டத்தில்  85-90 ஆயிரத்திற்கும் இடையிலான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். அத்துடன் 35000 பேர் அளவில் எமது தமிழ் சகோதர வாக்காளர்களும் இருக்கின்றார்கள். இத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடைய அணியில்  வேட்பாளராக களமிறங்கி போட்டியிட முன்வந்தால் நிச்சயமாக படுதோல்வி அடையும் நிலை ஏற்படும். இதற்கான காரணம் என்னவென்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பிரபல்யமான அரசியல்வாதிகள் களமிறங்கியுள்ளார்கள். அத்துடன்  தொகுதி அமைப்பாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் போன்ற மிகப் பிரபல்யமான 21 பேர் சஜித் அணியில் களமிறங்கியுள்ளார்கள். இத்தகைய பிரபல்யமானவர்களுடன் இணைந்து போட்டியிடும் போது கடந்த வருடத்தைப் போன்று முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை நிச்சயமாக இழக்க நேரிடும் என்பது வெளிப்படையான உண்மை.  குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலில் என்னால் 33000 க்கும் மேற்பட்ட விருப்பு வாக்கினைப் பெற்றிருந்தும் கூட 16 வது  இடத்தைத்தான் பெற்றுக் கொள்ள  முடிந்தது. 

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இரண்டு பிரபல்யமான அரசியலாதிகள் மட்டும் தான் போட்டியிடுகின்றனர். ஏனைய அத்தனை பேரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் போன்ற ஒரு  சமநிலையான வேட்பாளர்களே களமிறங்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் இம்மாவட்டத்தில் இலகுவான முறையில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் அதிகரித்துள்ளன. எனினும்  ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் மிக இலகுவான முறையில் வெற்றி பெறலாம் என்பது மிகத் தெளிவாக அறிந்த விசயம். ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தி அணியில் வேட்பாளர்களாக களமிறங்கும் ஒரு முஸ்லிம் வேட்பாளர்   வெற்றி பெறுவது என்பது மிகக் கடினமான காரியம்.  

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய கட்சி பிளவுபடாத சூழலில் அரசியலில்; நான் 33000 க்கும் மேற்பட்ட குறித்த  பெரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற போதிலும் கூட கம்பஹா மாவட்டத்தில்  முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. 

இருந்த போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒவ்வொரு தேர்தல்களிலும்  பிரதிநிதி ஒருவர்  வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வருகின்றார்.  அவரால் வெற்றி இலக்கை அடைந்து கொள்ள முடியாது.  ஆனால் அவர் பெற்றுக் கொள்ளும் விருப்பு வாக்குகளைக் கொண்டு தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்பை கம்பஹா மாவட்ட முஸ்லிம் மக்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அந்த தேசியப் பட்டியல் உறுப்புரிமை கம்பஹா மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு கிடைப்பதில்லை.

பொதுத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்மாவட்டத்தில் ஏழு தடவைகள்; வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்கள். ஆனால் இந்தக் கட்சியினர் இப்பிரதேச மக்களின் வாக்குகளைச் சேகரிகத்துக் கொள்ளுகின்ற வியூகங்களை மட்டும் வகுத்துச் செயற்பட்டுள்ளார்களே தவிர இம்மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கொஞ்சம் கூடக் கருதுவதில்லை. அவர்களுடைய சுய இலாப நோக்கின் காரணமாக கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் தொடர்ந்து அனாதையாக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர்.

இந்த தேசியப் பட்டியல்கள் எல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய குடும்ப உறவினர்களுக்கும் அரசியல் வியாபாரத்தில் பங்குதாரர்களாக உள்ளவர்களுக்கும் வழங்கி வருகின்றார்கள் என்பது வெளிப்படையான விசயம். 

கம்பஹா மாவட்டத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன.  இப்பிரதேச செயலாளர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெரும்பான்மையினக் கட்சிகளுடைய வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு இப்பிரதேச மக்களின்  அனைத்து தேவைகளையும்  நிச்சயமாக நிறைவேற்றிக் கொடுப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.  எனினும் இம்மாவட்டம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் பேசும் முஸ்லிம், தமிழ் ஆகிய இரு சிறுபான்மையின மக்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் மற்றும் அவர்களது அபிலாi~களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கென கட்டாயம் இம்மாவட்டத்திற்கு சிறுபான்மையினப் பிரதிநிதித்துவம் மிக அவசியமாகும்.  கொழும்பு மாவட்டத்தில் ரனிலை தெரிவு செய்வதோ சஜிதைத் தெரிவு செய்வதோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியை சார்ந்தவர்களைத் தெரிவு செய்தோ அம்மாவட்ட மக்களின் விருப்பத்தைப் பொறுத்தவையே.

எனினும் இம்மாவட்டத்திற்கு  கிடைத்த  ஓர்  அரிய சந்தர்ப்பத்தை  நிதானமாகச் சிந்தித்து கட்சி வேறுபாடுகளை மறந்து  எல்லோரும் ஒன்று பட்டு சிறுபான்மையின மக்களுடைய பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல  மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபை, புத்திஜீவிகள் சிவில் அமைப்பினர்கள்  என அதிகம் கவனம் செலுத்தி கம்பஹா மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பு  எல்லோருக்கும் இருக்கிறது.

இத்தேர்தலைப் பொறுத்த வரையில்  வேறு கட்சிகள் மீது கவனம் செலுத்துவது பொருத்தப்படாக அமையாது என்கின்ற எண்ணக்கருக்களையும் நுட்பங்களையும் மக்கள் விளங்கி  அதன் உண்மைத் தன்மையை அறிவு ரீதியாக சிந்தித்து முஸ்லிம் மக்கள் வாக்களித்தால் நிச்சயம் என்னுடைய வெற்றி உறுதியானதாகும். உண்மையிலேயே இத்தேர்தலை முஸ்லிம்கள்  புதிய மாற்றத்திற்கான தேர்தலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்னுடைய  16 வருட கால அரசியல் அனுபவத்தில் கம்பஹா மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பாதைகளிலும் ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலைகளிலும் ஒவ்வொரு பள்ளிகளிலும் பொது இடங்களிலும் என் கால்கள்  கைகள் பாடாத இடங்கள் இல்லை.  என்னால் இயன்றதை இம்மாவட்ட மக்கள் நலன் சார்ந்த பங்களிப்புக்களையும் நல்லாதரவினையும் வழங்கியுள்ளேன். இம்மாவட்ட மக்கள் நன்கறிவார்கள். குறிப்பாக ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்து நான் நீண்ட காலம் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை.

இம்முறை  ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை எமது மாவட்ட முஸ்லிம்கள்; மட்டுமல்ல சகோதர தமிழ் மக்களும்  கட்சி வேறுபாடுகளை மறந்து ஏகமானதாக ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் வாக்களிப்பதன் மூலம் இலகுவான வெற்றியை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் நம் கண்முன் தெளிவாகப் புலப்படுகிறது. மாறாக வெற்றி இலக்கை அடைந்து கொள்ள முடியாத சாத்தியப்படாத வேட்பாளருக்கு இம்முறை இத்தேர்தலில் வாக்கை பிரயோகிப்பதில் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது. அந்த வகையில்தான் நான் இம்முறை தொடர்ந்து தோல்வியுறும் கட்சியின் கப்பலில் ஏறாமல் அதிகம் முஸ்லிம்கள் நேசிக்கும் யானைச் சின்னத்தில் போட்டியிட முன் வந்துள்ளேன். உறுதி செய்யப்பட்ட வெற்றி இலக்கை உத்தரவாதப்படுத்துவதற்கு எனக்கு உங்கள் பொன்னான பெறுமதிமிக்க வாக்கை வழங்கி என்னை வெற்றி பெறச் செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.