சம்பிக்வுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவரை படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிகடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி, தற்போதைய உதவி பொலிஸ் பரிசோதகர் சுதத் அஸ்மடல ஆகியவர்களுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா முன்னிலையில் அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிக்ள நீதிமன்றில் அறிவித்தனர்.
ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக குறித்த விசாரணை கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிகடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.
அதன்படி, வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் வழக்கின் முன்னேற்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரச பிரதி சொலிசிட்டர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.
Post a Comment