Header Ads



சரணடைந்த பொலிஸாரை கொலைசெய்த, கருணாவை விசாரணை செய்யவேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மிகநீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரை பெருமளவில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

எனினும் உண்மையில் கருணா அம்மான யுத்த குற்றங்களிற்காக பல வருடங்களிற்கு முன்னரே விசாரணைக்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

26 வருட உள்நாட்டு யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் பெருமளவு மனித உரிமை மீறல்களிற்கு காரணமாகயிருந்தனர் என தெரிவித்துள்ள மீனாக்சி கங்குலி சட்டவிரோத படுகொலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருணா அம்மானின் தலைமையின் கீழ் செயற்பட்ட படையணியினர் 1990 ஜூனில் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவரது படையணியினர் 200 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி அரச சார்பு ஆயுத குழுவிற்கு தலைமை தாங்கியவேளையும் அவரது குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் ஒருபோதும் விசாரணை செய்யப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.