இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள் உடல்கள் எரிப்பு: பிபிசி சிங்கள சேவை
-சரேஜ் பத்திரானா_-
இஸ்லாமிய முறைப்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும். உடலுக்கு எரியூட்டுவது இஸ்லாமியர்களின் வழக்கத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அதிகாரிகள் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர் என இலங்கை முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
மே 4ம் தேதி, மூன்று குழந்தைகளுக்கு தாயான, 44 வயது ஃபாத்திமா ரினோசா, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிகாரிகள் கடுமையாக நடந்துக்கொண்டனர்
ஃபாத்திமா இலங்கை தலைநகர் கொழும்பில் வசித்து வந்தார். அவருக்கு சுவாசப் பிரச்சனைகள் இருந்ததால், கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அஞ்சினர்.
அன்றே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அதிகாரிகள் தங்களிடம் மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டதாக ஃபாத்திமாவின் கணவர் மொகமத் ஷஃபிக் கூறுகிறார்.
''காவல் துறையினரும் ராணுவத்தினரும் சேர்ந்து எங்கள் வீட்டிற்குள் நுழைந்து, குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றி, வீடு முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். அவர்கள் எங்களிடம் எந்த தகவலும் அளிக்காமல் வீட்டிற்குள் வந்துவிட்டனர். மேலும் எங்கள் குடும்பத்தை சேர்ந்த மூன்று மாத குழந்தை உட்பட அனைவருக்கும் கொரோனா வைரஸுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாய்களை போல எங்கள் அனைவரையும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்து சென்றனர்'' என மொகமத் ஷஃபிக் நடந்தவற்றை விவரிக்கிறார்.
மொகமத் ஷஃபிக் குடும்பத்தினர் ஓர் இரவு மட்டும் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பட்டு இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபாத்திமா உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியும் மொகமத் ஷஃபிக் குடும்பத்தை சென்று சேர்ந்துள்ளது.
ஃபாத்திமாவின் மகன் தன் தாயின் உடலை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டார். தன் தாய் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார், எனவே உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது என ஃபாத்திமாவின் மகனிடம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு, உயிரிழந்தவரின் உடலுக்கு எரியூட்டுவது விதிமீறல் என்றபோதிலும், இந்த உடல் தகனத்தை நான் ஏற்கிறேன் என குறிப்பிட்டிருந்த கடிதத்தில் ஃபாத்திமாவின் மகன் கையொப்பமிட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த ஃபாத்திமாவின் மகன் பிறகு செய்வதறியாது கையெழுத்திட்டுள்ளார்.
மேற்கொண்டு சில பரிசோதனைகளுக்காக ஃபாத்திமாவின் உடல் உறுப்புகள் தேவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என்ற நிலையில், ஏன் உடல் உறுப்புகளை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என ஷஃபிக் கேள்வி எழுப்புகிறார். மேலும் ஃபாத்திமாவுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன என்பது குறித்தும் இன்னும் முழு விவரங்கள் தெரியவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந் நிலையில் கொரோனா பாதிப்பு பரவி வரும் இந்த சூழலில் அரசு அதிகாரிகள் தங்களை பாரபட்சத்துடன் நடத்துவதாக, இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுடன் சேர்ந்து ஃபாத்திமாவின் குடும்பத்தினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் என்ன ?
உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளின்படி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படலாம்.
2019 ஏப்ரல் மாதம், கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் 250 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களில் உள்ளூர் இஸ்லாமியர்கள் சிலருக்கும் தொடர்பிருந்தது. இதன் பிறகு இஸ்லாமியர்களின் மீது சில கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கொரோனாவால் உயிரிழத்தவர்களை புதைப்பது ஆபத்தா?
மார்ச் 31ம் தேதி அன்று இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் இஸ்லாமியர் ஒருவர் உயிரிழந்தார். அன்று முதல் சில உள்ளூர் ஊடகங்கள் கொரோனா வைரஸ் பரவ முஸ்லிம்கள் தான் காரணம் என வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இதுவரை இலங்கையில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
முஸ்லிம்கள் உட்பட உயிரிழந்த 11 பேரின் உடல்களும் எரியூட்டப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களை எரியூட்ட வேண்டும் என்பது அரசாங்க விதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேறு சில பாதிப்புகளால் உயிரிழந்தவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால்கூட அவர்களின் உடல்களும் எரியூட்டப்படுகின்றன என அரசு தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவிக்கிறார். மேலும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைத்தால் நிலத்தடி நீர் மாசடைய வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர் சுகத் குறிப்பிடுகிறார்.
சமூகத்தின் முன்னேற்றம் கருதியே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றும் மருத்துவர் சுகத் குறிப்பிட்டார்.
உயிரிழக்கும் இஸ்லாமியர்களை தகனம் செய்யும் ஒரே நாடு
உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக இருக்கும் 182 நாடுகளில், இலங்கை மட்டும்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை எரியூட்டுகிறது என குறிப்பிட்டு இலங்கையின் முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா வழக்கு பதிவு செய்துள்ளார்.
''கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதால் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவியல் விளக்கங்களோடு, அதிகாரபூர்வமாக நிரூபித்தால் அரசாங்கத்தின் இந்த முடிவை நாங்கள் ஏற்கிறோம் என பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய மௌலானா கூறுகிறார்.
எந்தவித அறிவியல் பூர்வ ஆதாரங்களும் இல்லாமல், முஸ்லிம்களின் உடலை தகனம் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை,''நாட்டை இன ரீதியாக பிரிக்கும் அரசியல் நோக்கம்'' கொண்டது என்பது தெளிவாக தெரிகிறது என இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மூத்த தலைவர் குறிப்பிடுகிறார்.
மாறுபட்ட விதிமுறைகள்
ஃபாத்திமா உயிரிழத்த அதே நாள், 64 வயதான அப்துல் ஹமீத் ரஃபாய்தீன், கொழும்பில் உள்ள தனது சகோதரி வீட்டில் உயிரிழந்தார். அவரது மகன் நவ்ஷத், தன் தந்தையின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார். அதே நேரம் அவர்களது வீட்டிற்கு அருகில் வசித்த சிங்கள சமூகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துவிட்டார்; ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால் அவரின் உடலையும் சேர்த்து மருத்துவமனைக்கு கொண்டு வரும்படி காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
நவ்ஷத்திற்கு படிக்கத் தெரியாது. ஆனால் தன் தந்தையின் உடலை எரியூட்ட அனுமதி அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த கடிதத்தில், நவ்ஷத்திடம் கையெழுத்து பெறப்பட்டது.
கையெழுத்திட மறுத்தால் தனக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் நவ்ஷத் கையெழுத்திட்டதாக கூறுகிறார். மேலும் தன்னுடன் வந்த சிங்கள குடும்பத்தை நடத்தியது போல அதிகாரிகள் தன்னை நடத்தவில்லை என்பதால் அச்சத்தில் கையெழுத்திட்டதாக நவ்ஷத் தெரிவித்தார்.
மேலும் சிங்கள குடும்பத்தினர் பலர் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டதாக நவ்ஷத் குறிப்பிட்டார். ஆனால் தன் தந்தையின் இறுதி சடங்கில் மிக குறைந்த அளவிலான உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டதாக நவ்ஷத் குறிப்பிட்டார்.
ஷஃபிக் தன் மனைவி ஃபாத்திமாவின் இறப்பு ஏன் நிகழ்ந்தது என்பது குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ள முடியவில்லை. மேலும் மருத்துவர்கள் குறிப்பிடுவது போல ஃபாத்திமாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
''இஸ்லாமியர்கள் உயிரிழந்தவரின் உடலுக்கு எரியூட்டமாட்டோம். ஃபாத்திமாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றால் ஏன் அவரின் உடல் எரியூட்டப் பட்டது'' என ஷஃபிக் கேள்வி எழுப்புகிறார்.
அதேபோல நவ்ஷத் தன் தந்தை உடலுடன் மற்றொருவரின் உடலையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நவ்ஷத்தின் தந்தை இறந்தார் என்பது உறுதி செய்யப்படவில்லை ஆனால் அவரின் உடலை தொடுவதற்கு கூட நவ்ஷத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Post a Comment