கையாட்களை அனுப்பி மேயர் பதவியை பிடுங்க முயற்சி, கட்சி அரசியலில் விரக்தி - ஓய்வு பெறுகிறார் ரோசி
(எம்.ஆர்.எம்.வஸீம்)
கட்சியில் இருந்தோ மேயர் பதவியில் இருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது. அவ்வாறானதொரு தீர்மானம் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொள்ளவும் இல்லை என கொழும்பு மாநகர மேயர் ராேசி சேனாநாயக்க தெரிவித்தார்.
ராேசி சேனாநாக்கவை மேயர் பதவியில் இருந்து நீக்கவும் அந்த பதவியை பிரதி மேயர் மொஹமட் இக்பாலுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதுதொடர்டர்பாக தனது நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தோ கொழும்பு மாநகர சபை மேயர் பதவியில் இருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவோ கட்சியோ அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.
ஒருசில சமூக வலைத்தளங்களே இதுதொடர்பான பொய்யான செய்திகளை பரப்பிவருகின்றன.
அத்துடன் கடந்த முதலாம் திகதி கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற கூட்டத்துக்கு நான் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை அடைப்படையாகக்கொண்டே எனக்கு எதிரான பொய் செய்தி பரப்பப்பட்டு வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி மாநகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்யுமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னிடமே தெரிவித்திருந்தார்.
என்றாலும் அன்றைய தினம் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இருந்தது. அந்த கூட்டத்துக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். இதுதொடர்பாக கட்சியின் தலைவருக்கு அறிவுறுத்திவிட்டே அங்கு சென்றேன். அதனால் சிறிகொதவில் இடம்பெற்ற கூட்டத்துக்கு என்னால் கலந்துகொள்ள முடியாமல்போனது.
மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் புதிதாக வந்த சிலர், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கட்சியைவிட்டு வெளியேற்ற சதித்திட்டம் மேற்கொண்டு செயற்பட்டுள்ளனர். அவ்வாறு என்னை இந்த கட்சியில் இந்து வெளியேற்ற இவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். என்னை மேயர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக சமூக வலைத்தலம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. எனது மேயர் பதவியை அவ்வாறு யாராலும் இலகுவில் இல்லாமலாக்க முடியாது. ஏனெனில் நான் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டவர். சட்டத்தின் பிரகாரம் எனது காலம் முடியும்வரை என்னை மேயர் பதவியில் இருந்து நீக்கமுடியாது.
அத்துடன் மேயர் பதவியை பெற்றுக்கொள்ள அதிகமானவர்கள் அவர்களின் கையாட்களை அனுப்பி முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். நான் மேயர் வேட்பாளராக களமிறங்கி, தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். கொழும்பு மாநகர மேயராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் எனது பெயரே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதனால் கொழும்பு மாநகரசபையின் 4 வருட காலத்துக்கும் நானே மேயராக இருப்பேன். கலந்துரையாடல்கள் மூலம் தீர்மானம் மேற்கொண்டு இந்த பதவியில் இருந்து என்னை நீக்க முடியாது.
மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி இன்னும் பல பிரிவுகளாக பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதற்காக கட்சியின் தலைவருக்கும் அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருப்பது ஐக்கிய தேசிய கட்சிகாக நீண்ட காலம் பல தியாகங்களை மேற்கொண்டவர்கள்.
சுமார் 25வருடங்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு என்னுடன் இணைந்து பல போராட்டங்களை மேற்கொண்ட எனது சகோதரர்களே அந்த கூட்டணியில் இருக்கின்றனர்.
ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு மற்ற பக்கத்தில் இருப்பவர்களை விமர்சிக்க என்னால் முடியாது. அதனால்தான் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டேன். ஒருசிலரின் நடவடிக்கையால் கட்சி அரசியலில் விரக்தியுற்றிருக்கின்றேன். இதனை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாமலே நான், மாநகரசபையின் காலம் முடிந்த பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கும் தீர்மானித்திருக்கின்றேன் என்றார்.
Post a Comment