பேராயரின் தலைமையினாலே சமூகங்களின் இடையிலான மோதல் தவிர்க்கப்பட்டது - ஹரீனுக்கு கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் கண்டனம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறித்து வெளியிட்ட கருத்துக்களிற்கு கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் ஹரீன் பெர்ணான்டோ வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.
பேராயரிற்கு எதிரான ஹரீன்பெர்ணான்டோவின் கருத்துக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை தேவைப்படாதவை என தெரிவித்துள்ள கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் குறுகிய அரசியல் ஆதாயத்தை பெறுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதனை வெளியிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கற்பனையில் உருவான விடயம் எனவும் கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.
பேராயரிற்கு எதிரான தவறான விமர்சனம் குறித்து நாங்கள் அதிர்ச்சிடைந்துள்ளதுடன் அதனை கடுமையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ள கொழும்புகத்தோலிக்க மறைமாவட்டம் குறிப்பிட்ட தாக்குதல் குறித்து தனது தந்தை தனக்கு எச்சரித்திருந்தார் இதன் காரணமாக தான் தேவாலயத்திற்கு செல்லவில்லை என ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் குழப்பம் காரணமாக பலவீனமடைந்து காணப்பட்ட நாட்டிற்கு பேராயரே தலைமைத்துவம் வழங்கினார் அவரது தலைமைத்துவம் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சமூகங்களின் இடையிலான மோதல் தவிர்க்கப்பட்டது எனவும் கொழும்பு மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.
Post a Comment