Header Ads



சகலவகை வீசாக்களினதும் செல்லுபடி, காலத்தை நீடிக்க தீர்மானம் (முழு விபரம்)

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் எல்லா வகையான வீசாக்களினதும் செல்லுபடிக் காலத்தை இம் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 11 ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதிப்பத்திரங்களை நீடித்தல் தொடர்பில் குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களத்தினால் மே மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு மேலதிகமாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே , அனைத்து வீசா விண்ணப்பதாரிகளும் ஜூலை 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் https://eserviced.immigration.gov.lk/vs  என்ற இணையதளத்தில் பிரவேசித்து திகதியொன்றையும் நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு உரிய வீசா கட்டணத்தைச் செலுத்தி தமது கடவுச் சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7 ஆம் திகதிக்கும் ஜூலை 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் எல்லா விசாக்களும் தண்டப்பணம் அறவிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

உரியவாறு திகதியொன்றையும் நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு வருகை தருவோருக்கு மட்டும் திணைக்கள வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு அனுமதியுண்டு. நாளொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவை வழங்கப்படுவதால், ஒதுக்கிக் கொள்ளப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பதாகவே விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டும் என்பதை தயவுடன் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணபதாரிகளுக்கு வழங்கப்பட்ட நேரம் அடுத்த 10 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு திணைக்கள வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறுகிய கால (Visit Visa) வீசா தொடர்பில் acvisa@immigration.gov.lk , acvisa1@immigration.gov.lk , acvisa2@immigration.gov.lk வதிவிட வீசா (Residence Visa) தொடர்பில் dcvisa@immigration.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிவுக்கு வினவுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் 070-7101050 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு காலை 9 மணி முதல் 4 மணி வரை தொடர்பு கொள்வதன் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாக விண்ணப்பதாரிகள் ஒதுக்கிக் கொண்ட திகதியில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்தும் பட்சத்தில் திணைக்களத்திற்கு வருகை தருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு தயவுடன் அறியத் தருகின்றோம்.

இதற்குப் பதிலாக ஏற்கனவே வழங்கப்பட்ட திகதி மற்றும் நேரம் ஒதுக்கப்பட்ட அறிவித்தலை மேற்கூறிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்தோடு புதிய திகதியும் நேரமும் விரைவில் வழங்கப்படும்.

இக் காலப்பகுதிக்கிடையே நாட்டிலிருந்து வெளியேற என்னுபவர்கள் மேற்கூறிய நீடிப்புடன் தொடர்புடைய வீசா கட்டணங்களை விமான நிலையத்தில் செலுத்தி நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.